-கி.வா.ஜகந்நாதன்
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 17…

17. ஆண் சிங்கம்
போர்க்களம் என்றால் அது சாமான்யமான போர்க்களமா? இருசாரிலும் படைவீரரும் குதிரைப் படையும் யானைப்படையும் தேர்ப்படையும் கடுமையாகப் போர் புரிந்தனர். நிலமகள் முதுகு உளுக்கும் படியான போர். தேர்ந்தெடுத்த வீரர் பெருங் கூட்டம் தினவுபெற்ற தோள்களின் வலிமையை உலகு உள்ளளவும் நிலைநிறுத்த முனைந்து வந்திருக்கிறது. படைகளின் பெருமை அவற்றிலுள்ள யானையின் மிகுதியினாலேயே புலப்படுகிறது. யானையையுடைய பெரும்படையைச் சிதைக்க வேண்டும் என்று ஒவ்வொரு வீரனும் உறுதி பூண்டு முன் நிற்கிறான். யானை அம்பினாலே சாயாது; அடியினாலே மடியாது. யானைக்கு ஏற்ற படை வேல்தான்.
போர்க்களத்தில் பல யானைகளைத் தன் கை வேலால் குத்தி மடிப்பதே வீரத்துள் வீரம் என்று கருதும் தமிழர் வழி வந்தோர் அப்படை வீரர்கள். அப்படி யானைகளை வீழ்த்திவிட்டுத் தாம் இறந்தாலும் பொன்றாப் புகழொடு மாயலாம் என்ற துணிவு அவர்களுக்கு இருக்கிறது. யானையெறிந்த வீரர்களை புலவர்கள் பாடுவார்கள்; அவர்கள் இறந்தால் வீரக்கல் நட்டுப் பூசிப்பார்கள்; அந்தக் கல்லில் பெயர் எழுதிப் புகழ் பரவி இளைஞர்கள் தலை வணங்குவார்கள். யானைப்போர் அவ்வளவு உயர்ந்தது, அருமையானது என்பது அவர்கள் கருத்து.
போர் நடக்கிறது; யானையும் யானையும் முட்டுகின்றன; குதிரையும் குதிரையும் இடிக்கின்றன; வீரரும் வீரரும் எதிர்க்கின்றனர். எங்கும் செங்குருதி வெள்ளம். உருண்ட தலையும் அறுந்த தோளும் வெட்டிய காலும் துணிபட்ட குதிரையும் கிடக்கின்றன. யம கிங்கரர்களின் வருங்கால சந்ததிகளுக்குச் சிற்றில் இழைத்துச் சிறுசோறு சமைத்து விளையாடுவதற்கு ஏற்ற இடம்போல விளங்குகிறது அக்களம். பேய்க்கும் கழுகுக்கும் நரிகளுக்கும் வயிறார விருந்தளிக்கும் அந்தக் களத்திலே வீரம் தாண்டவமாகிறது.
அந்தக் கூட்டத்தில் ஒரு வீரன் பம்பரம்போல் சுழன்று திரிகிறான். அவன் வீரக்குடியிலே பிறந்தவன். அவனுடைய தாய் பாலூட்டுகையிலேயே வீரத்தையும் கரைத்து ஊட்டியிருக்கிறாள். “ஆயிரம் வீரர்களைக் கொல்வதைவிட ஓர் யானையை எறிந்து வீழ்த்துவதுதான் வீரம். நீ போர்க்களத்தில் இறந்து போனாலும் பல யானைகளைக் கொன்றுவிட்டுப் பிறகே மார்பில் புண்பட்டு வீழ்ந்தாயென்று அறிந்தால் நான் உன்னைப் பெற்ற பெருமையைப் பாராட்டி உயிர் விடுவேன்” என்று அந்த மறக்குடிப் பெண் அவனுக்கு உபதேசம் செய்திருக்கிறாள். தன் தாயின் வார்த்தைகள் அவனுக்குப் பொருள்படும் பருவம் வந்த காலத்தில் அவன் அறிந்த செய்திகள், கதைகள் எல்லாம் களிறு எறிந்த வீரர் கதைகளே. “ஆண் சிங்கம் ஆண் சிங்கம் என்று சொல்லுகிறார்களே, ஏன் தெரியுமா? பிடரி மயிரும் எடுத்த பார்வையும் மாத்திரம் சிங்கத்தின் லஷணத்தைத் தந்து விடுமென்று எண்ணாதே. பருமனாக வீங்கிய உடம்பையுடைய யானையைக் கிழித்து வீழ்த்தி விடுவதுதான் சிங்கத்துக்குப் பெருமை. நீயும் சிங்கக்குட்டியென்று பேரெடுக்க வேண்டுமானால் போரில் யானைகளுக்கு எமனாக விளங்குவாயாக! இந்தா, பிடி இந்த வேலை; இதுதான் உன்னுடைய மூதாதையர் வைத்திருக்கும் சொத்து. இந்த வேலால் யானைகளை எறிந்து உண்மையான சிங்கமாகப் புகழடைய வேண்டும்” என்று தன்னை வாழ்த்திப் போர்க்களத்துக்கு அனுப்பிய தாயின் வீர உரையை அவன் மறக்கவில்லை.
அந்த வேலைச் சுழற்றிக்கொண்டு திரிகிறான். நல்ல வேளையாக, பகைப் படையின் தலைவனுக்கு உரிய யானையே எதிர்ப்பட்டது. அதனைக் குறி பார்த்துத் தன் நெடிய வேலை எறிந்தான். அதன் பெரிய உடலில் அது பாய்ந்து தங்கிவிட்டது; ரத்தம் குபீரென்று அருவிபோலப் பீச்சி அடித்தது. இனி அந்த யானை அடுத்த உலகத்திற்குப் போக வேண்டியதுதான்.
இப்போது வீரனுக்கு ஒரு கவலை வந்துவிட்டது. ‘நம்முடைய கைவேலை யானைமேல் வீசினோம்; அதன் உடலில் அது தங்கிவிட்டது. நம் கையில் இப்போது ஆயுதம் ஒன்றும் இல்லையே! எதைக் கொண்டு போர் செய்வது?’ என்று ஒரு கணம் ஏங்கினான். தன் திரண்ட தோளையும் மார்பையும் பார்த்துக் கொண்டான். மார்பிலே பார்வை சென்றபோது அவன் துள்ளிக் குதித்தான். யானையை வீழ்த்துவதற்காக வந்த வேகத்தில் எதிர்ப்படையில் இருந்த வீரன் அவன் மார்பிலே தன் கைவேலை வீசி எறிந்தான். அது யானைபோன்ற அவன் மார்பிலே தைத்தது. ஒரே ஆத்திரத்தோடு யானைமேல் பாயும் அவ்வீரன் அதனை அநாயாசமாக ஏற்றுக்கொண்டு வேகம் குறையாமலே போய்த் தன் காரியத்தை முடித்தான். தன் மார்பில் பாய்ந்த வேலை அந்த வேகத்தில் மறந்தான்.
இப்போது அந்த வேல் அவன் கண்ணிற்பட்டது. அவனுக்கு எவ்வளவு குதூகலம் தெரியுமா? அம்பறாத் தூணியிலிருந்த அம்பையெல்லாம் பிரயோகம் செய்துவிட்டு மேலே அம்பில்லாமல் வெறுங்கையோடு நின்ற வீரனுக்கு அந்தத் தூணி நிறைய அம்புகளை வைத்தால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது அவனுக்கு. அவனுக்குக் கிடைத்த வேல் யாசித்துப் பெற்றதா? இல்லை. பகைவன் எறிந்த வேல். அவனுடைய இரும்பு திரண்டனைய உடம்பில் சிறிதளவே புகுந்து பதிந்து நின்றது; அவ்வளவுதான். அதைத் துளைக்க முடியவில்லை.
பார்த்தான் வீரன்; வெடுக்கென்று மார்பினின்று அதைப் பறித்தான். வலியை மறந்தான். சரியான சமயத்தில், தான் நிராயுதபாணியாக இருந்த செவ்வியில், உதவிய அந்த வேலைப் பார்க்குந்தோறும் அவன் உள்ளம் மகிழ்ந்தது. அவனுடைய மார்பாகிய உறையினின்றும் அந்த வேல் வெளிப்பட்டபோது அவன் நெஞ்சாகிய உறையிலிருந்து மகிழ்ச்சியும் வீரமும் வெளிப்பட்டன. ஆயுதம் பெற்றதால் மகிழ்ச்சியும் பகைவன் வேலை அலஷ்யமாக ஏற்றுக் கொண்ட பெருமையால் வீரமும் பொங்கி வழிய அந்த ஆண்சிங்கம் வேலைச் சுழற்றிக்கொண்டு அடுத்த யானையைத் தேடிப் பாய்கிறது.
"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்."
-குறள்.
[போக்கி – செலுத்தி. மெய்வேல் – தன் உடம்பிலே தைத்த வேலை. பறியா – பறித்து. நகும் – மகிழ்வான்.]
$$$