-கி.வா.ஜகந்நாதன்
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம் - புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 16…

.
16. பெருந்தகு நிலை
நாலு திசையிலும் ஒரே பசுமை; மழைக் காலத்தில் காடு முழுவதும் தளிரும் பூவும் குலுங்குகின்றன. அடர்த்தியான அந்தக் காட்டினிடையே மெல்லச் செல்கிறது தேர். தேருக்குள்ளே ஆணில் அழகன், வீரர்க்குள் வீரன் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். தான் மேற்கொண்ட காரியத்தில் வெற்றியடைந்த மிடுக்கை அவனுடைய எடுப்பான பார்வை எடுத்துரைக்கிறது. இயற்கையெழிலை இறைவன் வஞ்சகமின்றி வாரி இறைத்திருக்கும் வனத்தைப் பார்க்கிறான். எத்தனை அழகு ததும்புகிறது!
தேருக்குப் பின்னே ஒரு கூட்டம் வருகிறது. வில்லும் கையுமாக வரும் வீரர் கூட்டம் அது. ஆனால் அவர்கள் வில்லில் நாணை ஏற்றவில்லை. சிரிப்பும் பாட்டுமாக வருகிறார்கள் அவர்கள்.
தேரில் இருப்பவன் திடீரென்று தன் சாரதியைப் பார்த்து, “வலவ, குதிரையை வேகமாக ஓட்டு. எவ்வளவு வேகமாக ஓட்ட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓட்டவேண்டும். உன் கைத்திறமையை இன்றுதான் பார்க்கப் போகிறேன்” என்று கட்டளையிடுகிறான்.
தேர்ப்பாகனுக்கு இந்த அவசரத்துக்குக் காரணம் விளங்கவில்லை. போர் முடிந்துவிட்டது. படைத் தலைவனாகிய அந்த வீரன் தன் படையாளருடைய ஊருக்கு மீண்டு வருகிறான். இப்பொழுது எதற்கு அவசரம்? போகும்போதுதான் அரசன் ஆணையை ஏற்றுத் தலைதெறிக்க ஓட வேண்டியிருந்தது.
‘இது வரையில் நிதானமாகத்தானே வந்தோம்? இவரும் காட்டின் அழகைப் பார்த்து வந்தாரே. இதற்குள் திடீரென்று இப்படி உத்தரவிடுகிறாரே’ என்று எண்ணி வீரனைத் திரும்பிப் பார்த்தான்.
“குதிரையின் வேகத்தை இன்று அளந்து காட்ட வேண்டும். இதுவரையில் நீ தாற்றுக்கோலை உபயோகித்ததே இல்லை. அது இங்கே துருப்பிடித்துக் கிடக்கிறது. அதைக்கூட இன்று நீ உபயோகிக்கலாம். எப்படியாவது விரைவில் ஊர் போய்ச் சேர வேண்டும்.”
பாகனுக்கு வியப்பின்மேல் வியப்பு உண்டாயிற்று.
“பின்னால் வருகிறார்களே, அவர்கள்…..?” என்று கேள்வித் தொனியோடு நிறுத்தினான்.
“அவர்கள் மெல்ல வரட்டும். அவர்கள் போரில் மிகவும் சிரமப்பட்டு நம் மன்னருக்கு வெற்றியை உண்டாக்கினார்கள். அதோடு நெடுந்தூரம் வேகமாக நடந்து வந்திருக்கிறார்கள். அவ்வீரர்கள் வேண்டிய இடத்தில் தங்கி, கச்சையையும் கவசத்தையும் கழற்றி வைத்துவிட்டு இளைப்பாறட்டும். இஷ்டம்போல இருந்துவிட்டு மெல்ல மெல்ல வரலாம். அவசரம் இல்லை. நான் விரைவிலே போக வேண்டும். சவுக்கை எடுத்துக் கொள்.”
பாகனுக்கு மயக்கம் தெளியவில்லை. அந்த வீரர்களோடு ஒன்றாகப் புறப்பட்ட படைத்தலைவன் எதற்காக முன்னால் போக வேண்டுமென்று முடுக்குகிறான்? தாற்றுக் குச்சியைக்கூட உபயோகிக்கும்படி சொல்லுகிறானே! குதிரைகள் என்ன சாதாரணமானவையா!
வீரர் தலைவன் பாகனது உள்ளத்தை உணர்ந்து கொண்டான். குதிரைகளைக் குழந்தைகளைப் போலப் பாதுகாக்கும் பாகனை, அதுகாறும் தீண்டாத முட்கோலைத் தீண்டி ஓட்டும்படி சொல்லலாமா? சொன்னது தவறுதான். பாகனுக்குத் தன் மன வேகத்தை எப்படி விளக்குவது?
“அங்கே பார்!” என்று தலைவன் சுட்டிக் காட்டினான்.
அதுவரையில் தலைவன் கண்கள் அந்த இடத்திலே பதிந்திருந்தன என்பதைப் பாகன் இப்போதுதான் உணர்ந்தான்.
பாகனும் பார்த்தான். அவனுக்கு எல்லாம் தெளிவாகிவிட்டது. தலைவனது உள்ளம் அங்கில்லை என்பதை அறிந்தான்.
அங்கே கண்ட காட்சிதான் என்ன?
மழை பெய்து ஓடிய ஓடையில் மணல் இன்னும் புலரவில்லை. அங்கே காட்டுக் கோழிகள் இரண்டு அங்கும் இங்கும் உலவுகின்றன. ஆண்கோழி ‘கொறக் கொறக்’கென்று சத்தமிடுகிறது. உருக்கின நெய்யிலே பாலைத் தெளித்தது போலச் சொடசொடவென்றிருக்கிறது அதன் குரல். பல புள்ளிகளையுடைய அந்த ஆண்கோழி அழகாக இருக்கிறது. ஈரமணலைக் கிண்டி ஒரு புழுவைக் கொத்துகிறது. கொத்தின சந்தோஷமோ, பேடைக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணமோ, தன் பின்னாலே நின்ற பேடையைக் கம்பீரமாகத் திரும்பிப் பார்க்கிறது. அந்தப் பெருந்தகு நிலையில் கண்ணைச் சிக்கவிட்ட தலைவன் மனம் அந்தக் காட்டைக் கிடந்துபோய் வீட்டின் தலைவாசலிலே நிற்கிறது.
வீரர் தலைவன் அரசன் ஆணையைச் சிரமேல் தாங்கி உயிரினும் வேறு அல்லாத தன் காதலியைப் பிரிந்து போருக்கு வந்தான். போர் முடிந்தது. அந்தக் கான வாரணம் உணவை ஈட்டிய திருப்தியோடு பேடைமுன் நிற்பதுபோலத் தானும் வெற்றி ஏந்திய தோளோடு காதலியின்முன் நிற்க விரைவது என்ன ஆச்சரியம்!
இனி, பாகன் தாமதிபானா? குதிரையைத் தட்டிவிட்டான்.
தலைவன் கூற்று
விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்
அரைச்செறி கச்சை யாப்பழித் தசைஇ
வேண்டமர் நடையர் மென்மெல வருக;
தீண்டா வைமுள் தீண்டி நாம்செலற்கு
ஏமதி வலவ, தேரே; உதுக்காண்
உறுக்குறு நறுநெய் பால்விதிர்த் தன்ன
வரிக்குரல் மிடற்ற அந்நுண் பல்பொறிக்
காமரு தகைய கான வாரணம்,
பெயனீர் போகிய வியனெடும் புறவிற்
புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி
நாளிரை கவர மாட்டித்தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே.
-நற்றிணை - மருதன் இளநாகனார் பாட்டு.
[விரைப்பரி வருந்திய – விரைந்த நடையால் களைப்புற்ற. இளையர் – வீரர். அரைச் செறி கச்சை யாப்பு – இடையிலே செறிந்த கச்சையின் கட்டை. அழித்து – அவிழ்த்து. அசைஇ – இளைப்பாறி. வைமுள் – கூர்மையான முட்கோல். ஏமதி – ஓட்டுவாயாக. வலவ – பாகனே. உதுக்காண் – அதோ பார். விதிர்த்தன்ன – தெளித்தாற் போல. கானவாரணம் – காட்டுக்கோழி. பெயனீர் – மழைத் தண்ணீர். புலரா – உலராத. ஈர்மணல் – ஈரமான மணல். மாட்டி – கொன்று.]
$$$