-கி.வா.ஜகந்நாதன்
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 14…

14. அலமரும் கண்
ஒவ்வொரு நாளும் பகற்பொழுதைக் கழிப்பதற்கு அவள் செய்யும் தந்திரங்கள் அளவிடற் கரியன. அவளுடைய உயிர்த்தோழி கதை சொல்லியும் பாட்டு இசைத்தும் அறங்கூறியும் அவளுக்கு ஆறுதல் உண்டாக்கி வந்தாள். தன்னுடைய காதலனது பிரிவாகிய வெந்தீயிலே அந்த மடமங்கை அவன் வரவு குறித்துத் தவம் புரிந்து வந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். தவமுனிவர்கள் செய்வதை அவளுந்தான் செய்கிறாள். எவ்வளவோ நாட்கள் அவள் சோறின்றிப் பட்டினி கிடக்கிறாள். நல்லுடையும் மணமலரும் பொன்னணியும் அவள் உள்ளத்தைக் கவரவில்லை. இனி எந்நாளும் பிரிவின்றி வாழும் பெருவரத்தை வேண்டிக் கடுந்தவம் முயன்று காத்திருக்கிறாள் அவள்.
ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒரு கண்டம். மாலைக்காலம் வந்தால் அவளுடைய மனத்திண்மை எங்கேயோ ஓடிவிடும். தண்ணிய தென்றல் வீசும் மாலைக்காலத்தில் தன் காதலனோடு ஒருங்கிருந்து இன்புறும் நிலையில் அவள் இருந்தால் அப்போது அந்த மாலை அமுதமயமாக இருக்கும். இப்பொழுதோ தன் நாயகன் பிரிவை நன்கு எடுத்துக்காட்டித் துன்புறுத்தும் யமனாகவே அதைக் கருதுகிறாள்.
செங்கதிர்ச் செல்வனாகிய சூரியன் கோபம் ஆறிக் கதிர்களைச் சுருக்கிக்கொண்டு அஸ்தமன கிரிக்குள் ஓய்வு பெறப் போகிறான். அவனுடைய வான யாத்திரையோடு உலகமுழுதும் யாத்திரை செய்தது; அவன் வானத்தை அளந்த ஒவ்வொரு கணமும் உலகிலுள்ள உயிர்கள் எழுச்சி பெற்று உலவின. அவன் இப்பொழுது சினங்கரந்து சென்றான்; உலகமும் ஓய்வு பெற்று இரவுக் கன்னியின் அணைப்பிலே சாந்தி பெறப் போகிறது.
ஆனால், அவளோ–? இனிமேல்தான் அவளுடைய உயிருக்கும் தனிமைக்கும் போராட்டம் ஆரம்பமாகப் போகிறது! ஐயோ பாவம்! மாலை வந்ததென்றால் மனம் நடுங்கி உடல் வெயர்த்துக் குலைகுலைகிறாள்.
அவன் வந்துவிடுவானென்ற நினைவு அவள் உள்ளத்தில் பசுமையை வைத்திருக்கிறது. இவ்வளவு நாட்களாக அவள் பட்ட இடும்பை பெரிதல்ல. சில நாட்களாக அவளிடத்தில் தோற்றும் தளர்ச்சி அச்சத்தை உண்டாக்குகிறது. ஏன்?
செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த பொழுதுகள் பலவற்றை அவள் கழித்துவிட்டாள். இன்று அந்தப் பொழுது அவள் உயிரை வாட்டத் தனியே வரவில்லை. படைப்பலத்துடன் வந்திருக்கிறது. அவள் வைத்து வளர்க்கிறாளே, அந்த முல்லைக் கொடியிலிருந்துதான் அந்தப் படை புறப்படுகிறது. அருமை செய்து பாதுகாத்த அந்த முல்லைக்கொடியை அவள் இவ்வளவு நாட்களாகக் கவனிக்கவே இல்லை; இன்று அது தன்னைக் கவனிக்கும்படி செய்துவிட்டது. கம்மென்று வீசும் முல்லைப்பூவின் நறுமணம் அவளை ஒரு கணம் ஆட்கொண்டது. அப்பொழுதுதான் அவளுக்குத் தான் வளர்த்த அப்பூங்கொடியின் நினைவு நன்றாக வந்தது. பார்த்தாள்; முல்லை பூத்து முறுவலிக்கிறது. பைங்கொடி முல்லையின் மணம் எங்கும் கமழ்கிறது. அந்த மணத்தை நுகர வண்டினங்கள் வந்து சுழல்கின்றன; முரல்கின்றன.
தான் வளர்த்த முல்லைக்கொடி என்னும் பேரழகி பூத்துப் பொலிந்து நிற்கும் பேரழகை அவள் கண் பார்த்தது. அந்த அழகிலே அவள் மகிழ்ச்சியைக் காணவில்லை. மலர்ந்த மலர்களிலே மொய்த்துக் காதலிசை பாடிக் கொஞ்சும் வண்டின் செயலிலே அவள் இயற்கையின் மோகன கீதத்தை உணரவில்லை. தன் தனிமையைக் குத்திக் காட்டும் அடையாளமாகத் தான் அந்தக் காட்சி அவளுக்குப் பட்டது.
இது மட்டுமா? தன் காதலன் பிரியும்போது சொல்லிச் சென்ற வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறாள்; “ஆம், இப்போதுதான் வருவதாகச் சொன்னார். கார்காலத்திலே வந்துவிடுவேனென்று ஆணையிட்டுச் சொன்னாரே; இன்னும் வரவில்லையே! பைங்கொடி முல்லை மணம் கமழ, வண்டு இமிர இதோ கார்காலம் வந்துவிட்டதே!” என்று எண்ணு கிறாள். இப்பொழுதுதானே வர்ஷ ருது தலை காட்டுகிறது? அதற்குள் அவளுக்கு அவசரம். “வர மாட்டாரோ…!”–அவள் மனம் கொந்தளித்துக் குமுறி நிலைகலங்கி மருண்டு தவிக்கிறது.
மாலையின் தண்மையும் முல்லைக்கொடு பூத்துப் பொலியும் காட்சியும் வெள்ளிய முல்லை மலரின் நறுமணமும் வண்டினது இனிய முரற்சியும் அவளுக்கு இன்பத்தை உண்டாக்கவில்லை. அண்ணாந்து பார்க்கிறாள். வானத்தில் மேகங்கள் சுழன்று திரிகின்றன. வான முழுதுமே அவளுக்குச் சுழல்கின்றது.
“முல்லை மலர் பூத்தது பொய்யோ? அது பொய்யானால் மேகங்கள் வானத்தில் உலவுகின்றனவே, அதுகூடவா பொய்? நிச்சயமாகக் கார்பருவம் வந்து விட்டது. அவர் வரவில்லையே! சொன்ன சொல் பொய்த்துவிடுவாரோ?”–இப்படி எழுந்த கவலைத் திரைகளின் துளிகளைப்போல அவள் கண்கள் களகள வென்று நீரை உதிர்க்கின்றன. அந்த முல்லையையும் வண்டையும் வானத்தையும் பார்த்துப் பார்த்து நீர் நிறைந்த அவள் கண்கள் அலமருகின்றன; நிலையில்லாமற் கலங்குகின்றன. அந்தப் பார்வையில் தான் எத்தனை ஏக்கம்!
செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினாற்
பைங்கொடி முல்லை மணங்கமழ - வண்டிமிரக்
காரோ டலமருங் கார்வானங் காண்டொறும்
நீரோ டலமருங் கண்.
-ஐந்திணை எழுபது - மூவாதியர் பாட்டு.
[செங்கதிர்ச் செல்வன் – சூரியன். சினம் – வெம்மை. கரந்த – மறைத்ட. போழ்தினால் – பொழுதில். இமிர – ஒலிக்க. காரோடு – மேகத்தோடு. அலமரும் – சுழலும். கார்வானம் – கார்காலத்து காசம்; கரிய வானமும் ஆம். காண்டொறும் – காணுந்தோறும்.]
$$$