-கி.வா.ஜகந்நாதன்
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம் - புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 13…

13. அவர் போன வழி
-1-
கிழவி: அந்தப் பாலை நிலங்களிலெல்லாம் எயினர்கள் வாழ்கிறார்கள்; இருந்து வாழவில்லை; அலைந்து வாழ்கிறார்கள்.
தலைவி: பாட்டி, அவர்களுக்கு என்ன வேலை? எப்படி ஜீவிக்கிறார்கள்?
கிழவி: மற்றவர்கள் மரணத்தை அடைகிறார்கள்; அவர்கள் உயிர் வாழ்கிறார்கள்.
தலைவி: இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?
கிழவி: அவர்கள் மரணமடைவதனால் அவர்கள் கொண்டுபோகும் பொருள்களை வெளவிக்கொண்டு இந்த வேடர்கள் ஜீவிக்கிறார்கள்.
தலைவி: ‘அவர்கள்’ யார்?
கிழவி: அவர்களா? தூர தேசத்துக்குப்போய்ப் பணம் சம்பாதிக்கலாமென்று போகிறவர்களும், சம்பாதித்த பணத்தோடு வருகிறவர்களும், வியாபாரம் செய்யப் போகிறவர்களுமாக எவ்வளவோ பேர் பாலை நிலத்தில் போகிறார்கள், வருகிறார்கள். அவர்கள் இந்த எயினருக்குப் பயந்து கூட்டமாகப் போவார்கள். தனி மனிதனாகப் போனால் அவன் கொடும் பிரயாணத்துக்குத் தயாராக இருக்க வேண்டியதுதான்!
தலைவி: அப்படியானால் அந்தக் கொடிய மனிதர்கள் கொலை செய்வார்களென்றா சொல்லுகிறீர்கள்!
கிழவி: ம், கொலை செய்வதிலேயே அவர்களுக்கு இன்பம். போகிறவர்களிடத்தில் பொருள் ஒன்றும் இல்லாவிட்டாலும், அவர் தலையைப் போக்கி முண்டம் கூத்தாடுவதைப் பார்ப்பதிலே அவர்களுக்குத் திருப்தியாம்.
தலைவி: ஐயோ! கேட்கும் போதே குலை நடுங்குகிறதே!
கிழவி: தங்க நிழலும் தாகத்திற்கு ஜலமும் கிடைக்காத வறண்ட பாலை வனத்திலே மறலியின் தூதர்களாக அவர்கள் விளங்கிறார்கள்.
தலைவி: பாட்டி, போதும், இந்தப் பயங்கர வருணனை.
கிழவி: வறண்ட பாலைவனமென்றால் ஒன்றுமே இல்லாத நிலப் பரப்பு என்று நினைத்துவிடாதே. அங்கங்கே பாறைகளில் சிறு சிறு சுனைகள் எறும்பு வளையைப்போல இருக்குமாம்.
தலைவி: சுனையென்றால் நிறைய நீர் இருக்க வேணுமே?
கிழவி: நாசமாய்ப் போச்சு! சின்னச் சுனையிலே எவ்வளவு தண்ணீர் இருக்கப் போகிறது? வெயில் தகிக்கும் தகிப்பிலே, இருக்கிற தண்ணீரும் வற்றிப் போய்விடுமே.
தலைவி: அப்படியானால் அந்தப் பாறைகள் இருந்து யாருக்கு என்ன பிரயோசனம்?
கிழவி: அதைத்தானே நான் சொல்ல வந்தேன்? எறும்பு வளைகளைப் போலக் குறுகிய பல சுனைகளையுடைய அந்தப் பாறை உலைக்கல்லைப் போலக் கொதித்துக் கிடக்கும். அந்தப் பாறையிலே முன்னே சொன்னேனே, அந்த எயினர்கள் ஏறித் தங்கள் ஆயுதங்களைச் சரிப்படுத்திக் கொள்வார்கள்.
தலைவி: உலைக்கல்லிலே ஆயுதங்களைச் செப்பஞ் செய்துகொள்கிறார்கள் இந்த ஊரில். உலைக்கல்லைப் போன்ற பாறையில் அவர்கள் சரிசெய்து கொள்வார்கள் போலும்!
கிழவி: ஆமாம். வளைந்த வில்லையுடைய எயினர்களின் அம்பு எவ்வளவோ கொலைகளைச் செய்து மழுங்கிப் போகுமல்லவா? அப்போது அந்தப் பாறைதான் சாணைக்கல்லாக உபயோகப் படுகிறது. தங்கள் அம்புகளைப் பாறையிலே தீட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் செய்யும் கொலைத் தொழிலுக்கு அந்தப் பாறை உதவி செய்கிறது.
தலைவி: ஐயோ! அதைச் சொல்ல வேண்டாமே என் தலை கிறு கிறுக்கிறதே!
-2-
தலைவி: (தனக்குள்) ஐயோ! என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லையே! கணமேனும் பிரியாமல் இருந்த எங்களை விதியும் சம்பிரதாயமும் கடமையும் பிரித்து விட்டனவே. இந்தப் பாழும் பணம் இல்லாவிட்டால் என்ன? என் அருமைக் காதலர் அதைத் தேடிக்கொண்டு போயிருக்கிறாரே! பாலைவனத்தின் வழியாகப் போக வேண்டுமாமே!
தோழி: (தானே பேசிக் கொள்கிறாள், தலைவியின் காதிற் படும்படி) உலகத்தில் புருஷர்களாகப் பிறந்தவர்கள் முயற்சியோடு இருக்க வேண்டும். தாம் ஈட்டிய பொருளை வைத்துக்கொண்டு இல்லற வாழ்க்கை நடத்த வேண்டும்; அதுதான் இன்ப வாழ்க்கை. புருஷர்கள் தங்கள் கடமையை முன்னிட்டுக் காதலியரைப் பிரிவது வழக்கந்தான்.
தலைவி: (தனக்குள்) இவள் என்ன உளறுகிறாள்! புருஷர்களாம், வழக்கமாம்! (கவனிக்கிறாள்.)
தோழி: (தலைவியின் காதிற் படும்படி) காதலர் பிரிந்ததன் நியாயத்தை உணராமல் எப்போதும் அவரை நினைத்து ஏங்கிக்கொண்டிருப்பது அழகன்று; அறிவும் அன்று.
தலைவி: (தனக்குள்) அழகையும் அறிவையும் கண்டவள் பேசுகிறதைப் பார்! நான் எதை நினைத்து வருந்துகிறேன் என்பதைக் கொஞ்சமாவது இந்த ஜடம் யோசித்துப் பார்த்ததா? அவர் பிரிவா என்னை வருத்துகிறது? அவர் போன வழி, அந்தக் கொடுமையான பாலை நிலம் – அதை நினைத்தல்லவா என் உள்ளம் குமுறுகிறது? அந்தப் பாட்டி அன்றைக்குச் சொன்னாளே! (வெளிப்படையாக) எறும்பு வளை போன்ற குறிய பல சுனைகளையுடைய உலைக்கல்லைப் போன்ற பாறையின்மேல் ஏறி, வளைந்த வில்லையுடைய எயினர் தம் அம்புகளைத் தீட்டும் கவர்த்த வழிகளையுடையது அவர் போனவழி என்று சொல்லுகிறாற்கள். கவலை கொள்பவர்களைப் போலப் பிரமாதமாக ஆரவாரிக்கும் இந்த ஊர், இதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் வேறு என்ன என் னவோ விஷயங்களைச் சொல்லிப் புத்தி கூற வருகிறது! ஆகா! என்ன அறிவு!
தலைவி கூற்று
எறும்பி அளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்ப அவர்சென்ற வாறே;
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறும்இவ் வழுங்க லூரே.
-குறுந்தொகை - ஓதலாந்தையார் பாட்டு.
[எறும்பி – எறும்பு. அளையின் – வளையைப்போல. குறும் பல் சுனைய – குறுகிய பல சுனைகளை உடைய. கொடு வில் எயினர் – வளைந்த வில்லையுடைய வேடர். பகழி மாய்க்கும் – அம்பைத் தீட்டும். கவலைத்து – பிணங்கிய வழிகளை உடையது. என்ப – என்று சொல்வார்கள். ஆறு – வழி. அவலம் – வருத்தம். நொதுமல் – அயலான வார்த்தைகளை. கழறும் – இடித்துரைக்கும். அழங்கல் – ஆரவாரம். ஊரென்றது இங்கே தோழியை.]
$$$