காவியமும் ஓவியமும் -12

-கி.வா.ஜகந்நாதன்

சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 12…

12. நெஞ்சமும் அறிவும்

மாலை வேளை. ஒரு காட்டின் நடுவிலே பாசறை அமைந்திருக்கிறது. இரும்பை உருக்கி வார்த்தாற் போன்ற சரீரத்தையுடைய ஒரு வீரன் பாசறையைச் சுற்றிக்கொண்டு உலவி வருகிறான். போரினிடையே ஒரு நாள் ஓய்வுக்கு இடம் இருந்தது. குதிரைப் பந்தியையும் யானைப் பந்தியையும் சுற்றிப்பார்த்து வரலாமென்று புறப்பட்டான். யானைப் படையின் அருகில் வந்தபோது அவன் கண்கள் இரண்டு சிறிய யானைகளின் மீது பாய்ந்தன.

போர்செய்து இளைப்புற்றிருந்த அந்த மதயானைகள் அப்போது ஆனந்தமாக விளையாடிக்கொண் டிருக்கின்றன. ஏதோ பழங்கயிறு ஒன்று கிடைத்தது. அதன் ஒரு பக்கத்தை ஒரு யானை பற்றிக் கொண்டது. மற்றொரு பக்கத்தை இரண்டாவது யானை பற்றிக்கொண்டது. இரண்டும் கயிற்றை இழுத்து விளையாடுகின்றன. கயிறோ பழையது. இந்த இரண்டு யானைகளுக்கும் இடையே அது தன் பிராணனை விட்டுக்கொண் டிருக்கிறது; அதன் ஜீவ சுவாஸம் ஒவ்வொன்றாக வெளிவருவதுபோல அதன் புரி ஒவ்வொன்றாக விட்டுக்கொண்டு வருகிறது. யானைகளின் குதூகலத்துக்கு எல்லையில்லை.

இந்த விளையாட்டிலே ஈடுபட்டுச் சிறிது நேரம் நின்றிருந்தான் அவ்வீரன்; பிறகு அப்படியே உலாவி விட்டுத் தன் கூடாரத்தின் வாயிலை அடைந்து உட் கார்ந்தான். அருகில் ஒருவரும் இல்லை. வானத்தை நிமிர்ந்து நோக்கினான். வெண்மதி தண்ணிலவைப் பால்போலச் சொரிந்துகொண்டு வானப் பரப்பை யெல்லாம் அபிஷேகம் செய்து கொண்டிருந்தது.

அந்தத் தண்ணிய திங்களின் வெள்ளொளி அவனுக்கு இன்பத்தை உண்டாக்கவில்லை. அவன் மனத்தை எத்தனையோ காததூரத்திற்கு அப்பால் கொண்டுபோய் விட்டது. இயற்கையின் அழகைப் புறக்கண்களால் கண்டு அநுபவிக்க அவனால் இயலவில்லை; அவன் அகத்தே, தன் உள்ளத்தைப் பறித்த பேரழகு துளும்பும் ஓர் உருவத்தைக் காண்கிறான்.

என்ன அழகு! கூந்தல்! முதுகுப் புறத்திலே நீண்டு தாழ்ந்த கூந்தல்; தாழ்ந்து இருண்ட கூந்தல். கண்கள்! மையுண்ட கண்கள்! அந்தக் கண்களின் பொலிவிலே சோபிக்கின்ற இதழ்கள்; காதல் மயக்கத்தை உண்டாக்குவதற்குப் போதியபடி சிறிது திறந்திருக்கின்றன, போதின் நிறம்பெறும் ஈரிதழ் போலே; மலரும் பருவத்திலுள்ள போதுதான்.

இந்த இரண்டும் அவன் உள்ளத்தைப் பிணித்து விட்டன. அவனுடைய காதலி இந்த இரண்டினாலும் அவன் மிடுக்குடைய உள்ளத்தைக் குவிய வைத்துவிட்டாள்.

அவளைப் பிரிந்து இங்கே தனித்து இருக்கிறான். உடல்தான் இங்கே இருக்கிறது; உள்ளத்தை அவள் பிணித்துக்கொண்டாள். இப்போது இந்த நிலவொளியினாலே சக்தி யூட்டப்பெற்ற நெஞ்சம் சொல்கிறது: “ஏன் இங்கே தனியாகக் கிடந்து அவஸ்தைப் படுகிறாய்? வா, போவோம்” என்று அந்தப் பற்றுள்ளம் தூண்டுகிறது. அதன் தூண்டுதலுக்கு உட்பட்டுக் காதலுகத்திலே சஞ்சாரம் செய்கிறான், அந்தக் காதலன். அவன் மனம் படும் பாடு சொல்லத் தரமன்று.

கண்கள் ஸ்வாதீனத்திற்கு வருகின்றன. தலையைக் கீழே தாழ்த்திப் பார்க்கிறான். கூடாரமும் பாசறையும் அவன் நிலையை அவனுக்கு எடுத்துக் காட்டுகின்றன. காதலியைப் பிரிந்து படையிற் சேர்ந்து தன் கடமையைச் செய்து ஊதியம் பெற்றுச் செல்ல வந்திருக்கிறான் அவன். வீட்டிலே சமாதானக் காலத்திலே காதலியோடு இருக்கும்போது அவன் காதலன். அரசன் படையிலே ஒரு தலைவனாய்ப் போர் செய்ய வந்திருக்கும்போதோ வீரனாக இருக்கிறான்.

காதலியிடம் சிறைப்பட்ட நெஞ்சத்தின் உபதேசம் சிறிது மறைகிறது. அப்போது அறிவு தலைக் காட்டுகிறது. “அட பைத்தியமே! நீ யார்? படைத் தலைவன் அல்லவா? பகைவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்யும் மகா வீரனல்லவா? நீ ஏற்றுக் கொண்ட காரியத்தை முடிக்காமல் மறந்துவிடலாமா? அது பேதைமையல்லவா? பாதியிலே நீ போய் விட்டால் உனக்குப் பழி வந்து நேருமே! இதை நீ நினைத்துப் பார்க்கவில்லையே? உன் காதல் வீணாகவா போகிறது? இவ்வளவு நாள் பிரிந்திருந்தாய், இன்னும் சிறிது காலம் அவசரப்படாமல் இரு” என்று தக்க காரணங்களுடன் அவனுக்கு உபதேசம் செய்கிறது.

ஒரு பக்கம் காதலியின்பால் காதல் பூண்டு சிறைப்பட்ட நெஞ்சமும், ஒரு பக்கம் பேதைமை என்றும் பழி என்றும் பழி கூறித் தன் காதல் வேகத்தை தணிக்கும் அறிவும் மாறி மாறிப் போராட, அவன் ஒன்றும் தோன்றாமல் மயங்குகிறான்; தயங்குகிறான்; உருகுகிறான்; மறுகுகிறான். உடம்பு மெலிவது போலத் தோற்றுகிறது.

இந்தப் போராட்டத்தில் தான் மாலையிற் கண்ட யானை விளையாட்டு அவனுடைய ஞாபகத்திற்கு வருகிறது. களிறுகள் இரண்டு தம்முன் மாறுமாறாகப் பற்றிய தேய்புரிப் பழங் கயிற்றை நினைத்துப் பார்க்கிறான்; “நானும் அப்படித்தான் இருக்கிறேன். என் உயிர்க் காதலியின்பால் வைத்த நெஞ்சம் ஒரு பக்கம் இழுக்கிறது; அறிவு மற்றொரு பக்கம் இழுக்கிறது. நடுவில் அகப்பட்டுக்கொண்டு என் உடம்பு உருகுகிறது” என்கிறான்.

இந்தச் சித்திரத்தை அந்த வீரக் காதலனது கூற்றாகப் பின்கண்ட சங்கச் செய்யுள் காட்டுகிறது.

தலைவன் கூற்று

புறந்தாழ் பிருண்ட கூந்தற் போதின்
நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்;
செய்வினை முடியா தெவ்வஞ் செய்தல்
எய்யா மையோ டிளிவுதலைத் தருமென
உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிதுநனி விரையல் என்னும்; ஆயிடை
ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கொல்லென் வருந்திய வுடம்பே.

      --நற்றிணை - தேய்புரிப் பழங்கயிற்றினார் பாட்டு.


[முதுகிலே தாழ்ந்து இருண்ட கூந்தலையும், மலரும் பருவத்திலுள்ள மலரின் நிறத்தைப் பெற்ற ஈரமான இமைகள் விளங்கும் மையுண்ட கண்களையும் உடையவளாய் நம் உள்ளத்தைத் தன்பாற் கட்டுப்படுத்தியவளிடத்தே, ‘துன்பந் தீர்வோம்; போவோம்’ என்று நெஞ்சம் சொல்லும். மேற்கொண்ட காரியத்தை நிறைவேற்றாமல் துன்பம் உண்டாக்குதல் அறியாமையோடு பழியும் தரும் என்று உறுதியை எடுத்துக்காட்டி அறிவானது, ‘சிறிது காலம் அதிக அவசரப்படாமல் இரு’ என்று சொல்லும். இதற் கிடையே, என் புண்பட்ட உடம்பு, விளங்குகின்ற உயர்ந்த கொம்புகளையுடைய ஆண் யானைகள் எதிரெதிரே பற்றி இழுக்கும் தேய்ந்த புரிகளையுடைய பழைய கயிற்றைப்போல அழிவதாகுமோ!]

$$$

Leave a comment