-கி.வா.ஜகந்நாதன்
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 11…

11. ‘மான் செய்த தந்திரம்’
அன்பும் கடமையும் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதுபோலத் தோன்றுகின்றன. அறம் செய்வது அவன் கடமை. அதற்குரிய பொருள் ஈட்டுவதும் அவன் கடமை. பொருள் அவனிடம் நிரம்ப இருக்கிறது. ஆனாலும் அப்பொருள் அவன் சம்பாதித்தது அன்று; அவனுடைய பரம்பரைச் செல்வம்; அதைச் செல்வமாகவே கருதல் கூடாது. அப்படி அதைச் தன் கடமையை நிறைவேற்றுதற்காகச் செலவழித்தால் அவனது ஆண்மைக்கு இழுக்கு வந்துவிடும். தானே உழைத்துச் சம்பாதித்து விருந்தோம்ப வேண்டும்; இது பெரியோர்கள் வைத்த நியதி.
இந்த நியதிப்படி அவன் வெளிநாட்டுக்குச் சென்று பொருள் தேட எண்ணுகிறான். தன் அருமைக் காதலியைப் பிரிந்து செல்வதற்கு அவன் மனம் துணியவில்லை; கலங்கித் தடுமாறுகின்றது; ஆயினும் ‘நம் ஆண்மைக்கு இழுக்கு வருமே’ என்ற அச்சத்தால் அவன் பிரிந்துவிடுகிறான். அதற்கு முன் தான் போவதைப்பற்றி பலகால் எண்ணி, ‘அவளுக்குக் கூறுவதா? வேண்டாமா?’ என்று மனங் குழம்பி நிற்கிறான். இறுதியினில் காதலியின் உயிர்த் தோழியினிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறான்.
* * *
பொருள் எளிதில் கிடைத்துவிடுகிறதா? காடும் மலையும் கடுகி வழி நடந்து வேறு தேசம் செல்ல வேண்டும். மழை மறந்து பாலைவனமாகப் போன இடங்கள் இடையே இருக்கின்றன. கொடுங்கோல் அரசனது நாட்டைப்போல நினைப்போர் உள்ளமும் சுடும். பாலை, பயிர் பச்சை ஈவிரக்கம் இல்லாமல் கிடக்கின்றது. எங்கோ ஒரு மூலையில் ஒரு சாண் உயரத்தில் ஒரு மொட்டை மூங்கில் நிற்கிறது. அதில் இலையும் இல்லை; கொழுந்தும் இல்லை. பாறைகளெல்லாம் பொரிந்து போய் ஆருத்திரமூர்த்தியின் நெற்றிக் கண்ணின் பார்வை விழுந்த இடத்தைப்போல அந்தப் பூமி ஒரே பரப்பாகப் பரந்திருக்கிறது. கானலும், அதை நீரென்று எண்ணி ஓடித் திரியும் ஒன்று அல்லது இரண்டு மான்களும் அதுவும் உலகத்தில் ஒரு பகுதி என்பதை நினைவுறுத்திக் கொண்டிடுக்கின்றன. காதலன் போகும் வழி இதுதான்.
* * *
தோழி பாலை நிலத்தைப் பற்றிக் கேட்டிடுக்கிறாள். அதன் வெம்மையையும், அதன் வழியே வியாபாரிகள் பயணம் செய்வதையும், வழிப்பறி செய்வோர் அவர்களைக் கொள்ளை இடுவதையும் அவளுக்குப் பலர் சொல்லி இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் அவள் நினைவுக்குக் கொண்டு வருகிறாள். தன் உயிர்க் காதலனது பிரிவைத் தாங்க மாட்டாமல் துடித்துச் சோர்ந்து விழுந்து கிடக்கும் தலைவியைப் பார்க்கும்போது அவள் மனம் மறுகுகின்றது. ‘இவள் துயரத்தை மாற்றுவது எப்படி?’ என்று யோசிக் கிறாள். அவளுக்குக் கற்பனை அறிவு உண்டு. தலைவிக்குக் கதைகள் கூறிப் பொழுதுபோக்கும் தந்திரத்தில் அவள் மிகவும் சாமர்த்தியம் உடையவள். ஆதலின், பாலை நிலத்தின் கொடுமை பரப்புக் கிடையே காணப்படும் அன்பை, தூய காதலை, வெளிப் படுத்தும் ஒரு காட்சியை அவள் உள்ளத்துள்ளே காண்கின்றாள்.
* * *
நீரில்லாத பாலைவனந்தான் அது. பல இடங்களில் பழைய காலத்தில் தண்ணீர் தேங்கி இருந்த குழிகள் மாத்திரம் இருக்கின்றன. இரண்டு மான்கள் நாவறண்டு கண் சுழலத் திரிகின்றன. ஒன்று பெண்; மற்றொன்று அதன் ஆண் மானுக்குத் தன் தாகம் பெரிதாகத் தோன்றவில்லை. ‘இந்த மெல்லியலுக்குச் சிறிது நீர் தேடித் தர வேண்டுமே!’ என்று அது தவிக்கின்றது. கடவுள் கருணை செய்கிறார். எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறிய சுனை காணப்படுகிறது. சூரியனது வெயிலால் அதில் சுண்டிப்போய்க் குழம்பிய சிறிதளவு நீர் தேங்கி நிற்கிறது. இரண்டு மான்களும் அந்தச் சுனைக்கருகில் நிற்கின்றன.
அன்பின் அதிசய சக்திதான் அன்ன சிறப்புடையது! அன்பின் முதிர்வில் இணையற்ற தியாகம் கனிகின்றது. அந்தச் சுனையிலுள்ள சிறிதளவு நீரை நார் உண்பது என்பதில் விவாதம் வந்துவிடுகின்றது. அசுர எண்ணம் அந்த மான்களிடத்தில் தோன்றவில்லை. ‘நீ குடி’ என்று ஆண்மான் அன்பு கனியச் சொல்கிறது; ‘நீதான் குடிக்க வேண்டும்’ என்று பெண் மான் பேசுகிறது. தெய்வீகக் காதலிலே தோன்றிய எண்ணமல்லவா?
சிறிது நேரம் இரண்டும் அங்கே நிற்கின்றன. ஆண்மான் தன்னுடைய ஆண்மை அதிகாரத்தினால் பெண்மானைக் குடிக்கும்படி வற்புறுத்தலாம். பெண்மானும் அந்த வற்புறுத்தலுக்கு அஞ்சிக் குடிக்கலாம். அப்பொழுது அது மனத்தில் மகிழ்ச்சியோடு இனிமையாக உண்ணாதே. ‘நம் காதலன் குடிக்கவில்லையே!’ என்ற வருத்தத்தோடு அது குடிக்கும். அந்த வருத்த மிகுதியினால் அது குடித்தும் குடிக் காததுபோலவே அல்லவா இருக்கும்? இந்தயோசனை ஆண் மானுக்குத் தோன்றுகிறது. இரண்டு பேரும் குடிக்கவோ அதில் ஜலம் இல்லை; அது போதாது. இந்தச் சங்கடத்தில் என்ன செய்வது?
தான் உண்டு மிஞ்சிய நீரைக் குடிப்பதானால் பெண்மான் அதனை இனிது உண்ணும். இல்லையெனில் உண்ணாது. அதன் காதல் உயர்வு அப்படி இருக்கிறது. இந்தப் பெரிய சிக்கலைப் போக்கு வதற்குத் திடீரென்று அதற்கு ஒரு தந்திரம் தோன்று கின்றது.
வெகு வேகமாக அந்தச் சுனையில் ஆண்மான் தன் வாயை வைது உறிஞ்சுகின்றது; வாஸ்தவத்தில் ஜலத்தைக் குடிக்கவில்லை. குடிப்பது போலப் பாசாங்கு செய்கிறது. “உஸ்” என்ற ஒலி மட்டும் கேட்கிறது. அது பெண்மானின் காதிலே படும்போது அதன் உள்ளம் குளிர்கின்றது. பாதித்தாகம் அடங்கி விடுகிறது. ‘நம் காதலன் உண்டு தாகம் தீர்த்துக் கொண்டான். அவன் உண்டு மிஞ்சியதை நாம் இனிக் குடிக்கலாம்’ என்று அது நினைக்கின்றது. அப்படியே மிக்க மகிழ்ச்சியோடு அது சுனையிற் சிறிதளவுள்ள நீரைக் குடித்துவிடுகின்றது. அந்நீர் எய்தாது (போதாது) என்று எண்ணிக் கலங்கிய கலைமான், பிணைமான் இனிது உண்ண வேண்டித் தன் கள்ளத்தினால் ஊச்சிய (உறிஞ்சிய) தந்திரம் பலித்து விட்டது. அது பிணைமானைத் தழுவிக் களிக்கின்றது.
* * *
பாலை வெம்மையினிடையே நிகழும் இந்த அன்பு நிகழ்ச்சி தோழியின் உள்ளத்தைக் குளிர்விக் கின்றது. அதை அப்படியே தலைவிக்குச் சொல் கிறாள். ‘உன் காதலர் திருவுள்ளத்திலே போவதாக விரும்பிய நெறி இத்தகையது’ என்கிறாள். ‘வெவ்விய பாலையிலே ஆண்மான் தன் பெண்மானின் துயரைத் தீர்க்கச் செய்யும் தந்திரத்தைப் பார்த்து நின் காதலன் உன்னை நினைப்பான். அந்த மானுக்குள்ள அன்பு நிலைகூடத் தன்னிடத்திலே இல்லையே என்று வருந்துவான். விரைவிலே போன காரியத்தை முடித்துக் கொண்டு வந்துவிடுவான்’ என்ற விஷயத்தைத் தோழி சொல்வதில்லை; ஆனாலும் அந்த மான் கதையைக் கேட்ட தலைவி அதை ஊகித்துக் கொள்கிறாள். அவளுக்கு நம்பிக்கை உதயமாகிறது. ‘வருவான்’ அன்ற துணிவோடு அவனை எதிர்பார்த்து நிற்கிறாள்.
இந்தக் காட்சிகளையே பின்வரும் பாடல் உணர்த்துகிறது.
தோழி கூற்று
சுனையிற் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக்--கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்ப, காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.
-ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்.
[எய்தாது – போதாது. பிணைமான் – பெண்மான். கலை மான் – ஆண்மான். கள்ளத்தின் – பொய்யாக. ஊச்சும் – உறிஞ்சும். சுரம் – பாலைவனம். படர்ந்த – விரும்பிய.]
$$$