-கி.வா.ஜகந்நாதன்
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 10…

10. தேயும் உயிர்
அழகிய ஓடை; மலையடிவாரத்தில் இருபுறத்திலும் உள்ள பாறைகளில் மோதும் அலைகள், மெல்ல மெல்ல ஓரங்களில் ஒதுங்கி வரும் மலர்கள், தளிர்கள், இடை இடையே அருவியே பூத்தது போன்ற சிறுசிறு நுரைத் தொகுதிகள். முதல் நாள் தான் மழை பெய்தது. அதனாற் புதுவெள்ளம் வந் திருக்கிறது. ‘நுரையும் நுங்குமாக’ அருவியின் புதுமைக்கோலம் விளங்குகின்றது.
ஒரு சிறு நுரை. அதன் ஜன்மஸ்தானம் எதுவோ தெரியவில்லை. கரையோரத்தில் மெல்ல மெல்ல வரும் போதே அங்கேயுள்ள சிறு கற்களின்மேல் அது மோதுகின்றது. ஒரு தடவை மோதினவுடன் அதிலிருந்து ஒரு பகுதி கரைந்துவிடுகிறது. அப்புறம் சிறிது தூரம் மெல்ல மெல்ல அருவியின் போக்கிலே கலக்கிறது. மீண்டும் கரையோரத்தில் உள்ள பாறை யில் மோதிச் சுழலுகிறது. அந்தச் சுழற்சியிலே அதன் உருவம் பின்னும் சிறுத்துவிடுகின்றது. இப்படி வரவர அது தேய்ந்து உருமாறி வருகின்றது.
என்ன வியப்பு! சிறிது நேரத்திற்கு முன்னே கண்ட அந்த நுரை எங்கே! இப்போது அதைக் காணோமே! அந்தச் சிறு நுரை அருவிக் கரையிலுள்ள கற்களில் மோதிமோதி மெல்ல மெல்லத் தேய்ந்து இப்பொழுது இல்லையாயிற்று.
* * *
ஒரு புலவன் இந்தக் காட்சியிலே உள்ளத்தை இழந்துவிடுகிறான். உலக வாழ்க்கையாகிய அருவியிலே எத்தனை உயிர்களாகிய நுரைகள் வேதனைக் கற்களில் மோதி மோதித் தேய்கின்றன! அந்த நினைவைத் தான்கண்ட காட்சியோடு அவன் பொருத்திப் பார்க்கிறான்.
புறத்தே கண்ட ஈசுவர சிருஷ்டியை உபமானமாக வைத்து அப்பெரும்புலவன் அகத்தே ஒரு ஜீவ சித்திரத்தைச் சிருஷ்டிக்கிறான்.
உயிர் ஒன்று உடல் இரண்டாக வாழ்ந்த காதலர்களில், காதலன் காதலியைச் சிலகாலம் பிரிய நேர்கிறது. அவள் பிரிவெனும் கொடுந்தீயினால் வெம்புகிறாள். முன்பு இன்ப மயமாக இருந்த உலக முழுவதும் அவளுக்கு இப்பொழுது முள்ளடர்ந்த காடாக இருக்கிறது.
அவளுடைய நிலை, மலரினும் மெல்லிய காதலின் தன்மை முதலியவற்றின் உண்மையை வெளியில் உள்ளார் எப்படி அறியக்கூடும்? அவளுடைய உயிர்த் தோழியே அறியவில்லை.
“உலகத்திலே கணவன் மனைவியென்று இருந்தால் பிரியாமலும் வேறு ஊருக்குப் போகாமலும் இருப்பார்களா? உன்னுடைய ஆசையை அடக்கிக் கொள்ளக் கூடாதா?” என்று அவள் கேட்கிறாள்.
காதலின் சக்தியை அவள் அறிந்து கொள்ளவில்லை என்பதைத் தலைவி உணர்கின்றாள்; ‘இப்படியும் வன்னெஞ்சக்காரர்கள் இருப்பார்களா? காதலை அடக்குவதாவது!’ என்று எண்ணுகிறாள். காதல் உயிரோடு பிணைக்கப்பட்டதாயிற்றே: அதை விரிப்பதும், சுருக்குவதும் எப்படி? அவளுடைய நெஞ்சத்தில் பிரிவால் உண்டான துன்பத்தோடு, மனமறிந்த தோழிகூடத் தன் நிலையை அறியாமல் இப்படிச் சொல்லும் கொடுமையும் கலந்து வேதனையை மிகுவிக்கிறது.
தோழிக்குப் பதில் சொல்ல விரும்பினாள். ஆனால் அந்தக் கல்நெஞ்சக்காரியினுடைய முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கு அவள் மனம் பொருந்த வில்லை. யாரையோ பார்த்துச் சொல்லுவதுபோலச் சொல்ல ஆரம்பிக்கிறாள்:
“காதலைத் தடுத்து அடக்குவாயென்று சொல்கிறார்களே, அவர்களுக்கு அந்தக் காதலைப்பற்றி ஒன்றுமே தெரியாதோ? அவர்கள் காதலைத் தெரிந்துகொள்ள மாட்டாத அவ்வளவு வன்மை யுடையவர்களா? அவர்கள் அப்படியே இருக்கட்டும். நமக்கு அது சாத்தியமில்லை. நாம் எம்முடைய காதலரைக் காணோமானால் மிகுந்த துன்பம் பெருகிய உள்ளத்தோடு, கரையிலுள்ள கற்களில் மோதிவரும் சிறிய நுரையைப்போல மெல்ல மெல்ல இல்லையாகி விடுவோம்” என்று சொல்லுகின்றாள்.
* * *
இவ்வாறு கவிஞனது மனத்துள் ஒரு சிறிய காட்சி சிருஷ்டிக்கப்படுகிறது. அதன் பயனாக அவன் வாயிலிருந்து ஒரு செய்யுள் எழுகின்றது:
தலைவி கூற்று
காமம் தாங்குமதி என்போர், தாம் அ•து
அறியலர் கொல்லோ? அனைமது கையர்கொல்!
யாம்எம் காதலர்க் காணோம் யின்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லா குதுமே.
-குறுந்தொகை - கல்பொரு சிறுநுரையார் பாட்டு.
[தாங்குமதி – தடுப்பாயாக. மதுகை – வன்மை. துனி – துன்பம். பொருதல் – மோதுதல்.]
* * *
இந்த அரிய கவியைக் கவிஞன் புலவர் குழாத்திலே மிதக்கவிடுகிறான். புலவர் நெஞ்சை இக்கவி அள்ளுகின்றது. அதுமுதல் இக்கவியை இயற்றின கவிஞனை அவர்கள் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவனைக் காணும்போதெல்லாம் அவர்கள் தம்முடைய அகத்தே, கல்பொரு சிறுநுரையை அல்லவா காணுகிறார்கள்? ஆதலால் அக்கவிஞனையும் “கல் பொரு சிறு நுரையார்” என்றே வழங்கத் தலைப் பட்டனர்.
$$$