-கி.வா.ஜகந்நாதன்
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 9…

9. ‘சிறு குழலோசை’
தோழி: ஆடவர் தம்முடைய கடமைகளைச் செய்வதற்குப் பிரிவதும் அவர் பிரிந்த காலத்தில் காதலிமார் பிரிவுத் துன்பத்தைச் சகித்திருப்பதும் உலக வழக்கம். உன்னுடைய கணவர், மேலும் மேலும் இல்லறம் சிறந்து நடக்க வேண்டுமென்ற எண்ணத்தால் பொருள் ஈட்டத் துணிந்தார். பொருள் ஈட்டுவதற்குச் சில காலம் உன்னைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற துயரம் அவருக்கும் உண்டு. ஆனாலும் கடமை உணர்ச்சியும் உன்னுடைய திறமை யிலே நம்பிக்கையும் உடையவராகையினால் அவர் தம்முடைய முயற்சியை மேற்கொண்டார். திருட்டுத் தனமாகப் போகவில்லை. உன்னிடம் சொல்லிக் கொண்டுதானே பிரிந்தார்?
தலைவி: நீ சொல்கின்ற பேச்சிலுள்ள நியாயம் நன்றாகப் புலப்படுகிறது. என்னுடைய புத்தி இன்னும் பல சமாதானங்களைத் தெரிந்துகொண்டே இருக்கிறது ஆனால்……?
தோழி: அதுதான் சொல்லுகிறேன். உன்னுடைய அறிவினால் நீயே சமாதானம் செய்து கொண்டு ஆறுதல் அடைந்திருக்க வேண்டும். ஒருவர் சொல்லி ஆறுதல் அடைவதென்பது நடவாத காரியம். அவருடைய அன்பு உனக்குத் தெரியாதா? உன்னைக் காட்டிலும் அதிகமாக மற்றொருவருக்குத் தெரியப் போகிறதா? ஆகையால் அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றியுற வேண்டுமென்ற வேண்டுகோளோடு நீ சகித்து இருந்தால் உனக்கு எவ்வளவோ நல்லது.
தலைவி: அவர் கடமையில் எனக்கும் பங்கு உண்டென்பதை நான் நன்கு உணர்கிறேன். அவர் போன காரியத்தால் விளையும் பயனிற் பெரும்பாலும் எனக்கு நன்மை பயப்ப-தென்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். அது மட்டுமன்று; நம்முடைய இல்லற வாழ்க்கையில் பொருள் இல்லாவிட்டால் அறமும் இல்லை, இன்பமும் இல்லையென்று அவர் அறிவுறுதிச் சென்றாரே; அந்த வார்த்தைகளை நன்றாகத் தெளிந்தே நான் விடைகொடுத்தேன். இவ்வளவும் அறிவின் செயல். ஆனால்…!
தோழி: அறிவுக்கு மிஞ்சி என்ன இருக்கிறது? ஆ னால், ஆனால் என்று சொல்கிறாயே; அந்த ஆனாலென்பது என்னவென்று சொல்லிவிடு.
தலைவி: அதைச் சொல்வதற்குள் நீ ஆயிரம் கேள்விகள் கேட்கிறாய்; தடை சொல்கிறாய், உபதேசம் செய்கிறாய்.
தோழி: இதோ, பார்: நான் வாயை மூடிக் கொள்கிறேன். நீ அந்த ‘ஆனால்’ விடுகதையை விடுவி, பார்க்கலாம்.
தலைவி: என் அறிவு என் தலைவருடைய முயற்சிக்கு அரண் செய்கிறது. ஆனால் என்னுடைய உள்ளத்திலே, காரணமில்லாமல் தோன்றுகிற உணர்ச்சி இருக்கிறதே, அதுதான் என்னை அறிவற்ற வளாக்குகிறது; பேதைப் பெண்ணாகச் செய்து விடுகிறது. அறிவு, நியாயங்களை ஆராய்ந்து வரும் போது அந்த உணர்ச்சி கீழறுத்துக்கொண்டே வருகிறது.
தோழி: நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை.
தலைவி: உனக்கு விளங்காது; எனக்கே விளங்கவில்லை. உன்னுடைய அறிவுக்குத் தோன்றுகிற காரணங்களும் நியாயங்களும் எனக்கும் தோன்றுகின்றனவென்று சொன்னேனல்லவா? அந்த நிலையில் நான் அறிவுடையவள்தான். ஆனால், அந்த அறிவையும் ஏமாற்றிவிட்டு எந்தமாதிரி அடக்கப் பார்த்தாலும் அடங்காமல் உள்ளத்தின் அடியிலே ஆடுள்ளி எழுகிற உணர்ச்சி – அதைத் துன்பமென்று சொல்வதா? இன்பமென்று சொல்வதா? ஒன்றுமே தெரியவில்லை. அந்த உணர்ச்சிதான் என்னைப் பேதையாக்குகிறது. இதோ பார்: அன்று இந்த அழகான மாலைக் காலத்தை எவ்வளவு மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து நிற்பேன்! இப்பொழுது மாலைக்காலம் ஏன் வருகிறதென்று பயமுண்டாகிறது. சூரியன் மலை வாயில் விழுந்திருக்கிறான். வானமண்டலம் முழுவதும் செக்கச் செவேலென்றிருக்கிறது. முன்பெல்லாம் இதைக் கண்டால் என் உடம்பிலே ஒரு ஜீவசக்தி உண்டாகிவிடும். இப்போதோ இரத்தக் குழம்பைக் கண்டாற்போலல்லவோ தோற்றுகிறது? இந்தப் புல்லிய மாலை……! (திடீரென்று காதைப் பொத்திக்கொள்கிறாள்.)
தோழி: (திடுக்கிட்டு) என்ன இது? ஏன் இப்படி நடுங்குகிறாய்? ஏன் காதைப் பொத்திக் கொள்கிறாய்?
தலைவி: (பின்னும் இறுகக் காதைப் பொத்திக் கொள்கிறாள்.)
தோழி: என்ன இப்படி திக்பிரமை பிடித்தவள்போல் இருக்கிறாயே! சொல். எனக்குப் பயமாக இருக்கிறது. ஏன் இப்படிச் செய்கிறாய்? சொல், சொல்.
தலைவி: உனக்குக் கேட்கிறதா?
தோழி: என்ன?
தலைவி: என் காதில் வேல் பாய்ந்ததே, நீ உணரவில்லையா?
தோழி: வேலாவது, வாளாவது! பைத்தியம் பிடித்துவிட்டதா?
தலைவி: இன்னும் கேட்கிறதா?
தோழி: எனக்கு ஒன்றும் கேட்கவில்லை. உன்னுடைய கலங்கிய வார்த்தைகளைத்தான் கேட்கிறேன்.
தலைவி: கேட்கவில்லையா? உற்றுக் கேள்.
தோழி: ஒன்றும் கேட்கவில்லையே! (கவனிக்கிறாள்.) நடுங்கும்படியான இடியோசை ஒன்றும் காணவில்லையே! அதற்கு மாறாக மதுரமான ஓசையொன்று கேட்கிறது.
தலைவி: கவனித்துப் பார்த்துச் சொல்.
தோழி: மாலை வந்துவிட்டது. பசுக்களை மேய்க்கக் கொண்டுபோன இடையன் மேய்த்து விட்டுத் திரும்பி ஓட்டி வருகிறான். வரும்போது ஊதுகிற புல்லாங்குழல் ஓசை எவ்வளவு இனிமையாக விழுகிறது. இதோ, மிகவும் தெளிவாகக் கேட்கிறதே! வேறு ஒன்றும் கேட்கவில்லையே!
தலைவி: அதைத்தான் சொல்கிறேன். அது என் காதில் இனிமையாக விழவில்லையே. வேலைக் கொண்டு எறிவது போல இருக்கிறதே. புல்லாங்குழலோசை அது, கேட்பதற்கு இனிமையானது, இடையன் ஊதுகிறான் என்ற விஷயங்கள் எனக்குத் தெரிகின்றன. ஆனால் அந்தக் குழலோசையின் மதுரத்தைக் கேட்க எனக்குக் காதில்லை. அது செவிவழியே பாய்ந்து உள்ளத்தில் வேல்போல் ஊடுருவிச் செல்கிறது. ஆயன் திரும்பி வீட்டுக்கு வருகிறான்; மாடுகள் வயிறார மேய்ந்து வருகின்றன. உலகமே மாலைக் காலத்தில் தன்னுடைய சொந்த வீட்டுக்கு மீள்கிறது. என்னுடைய காதலரோ இன்னும் மீண்டுவரவில்லை; மீண்டு வருபவர்களுக்கு அல்லவா புல்லாங்குழற் கீதம் இனிக்கும்? எனக்கு, மீட்சி நிறைந்த உலகத்தில் என் தனிமையைத்தான் எடுத்துக்காட்டுகிறது. தோழி! நான் என் செய்வேன்!
தோழி: (தனக்குள்): காமமயக்கத்தின் விசித்திரந்தான் எவ்வளவு விநோதமாயிருக்கிறது! இனிய பொருளிலே இன்னாமையைக் காணும் காதலின் தத்துவம், உணர்ந்தவர்களுக்கே விளங்கும்.
தலைவி கூற்று
தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை
ஆரான்பின் ஆயன் உவந்தூதும் - சீர்சால்
சிறுகுழல் ஓசை செறிதொடி, வேல்கொண்
டெறிவது போலும் எனக்கு.
-ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார் பாட்டு.
[தேரோன் – தேரையுடைய சூரியன். செக்கை – செவ்வானம். புன்மாலை – பொலிவழிந்த மாலைக்காலம். ஆர் அன்பின் – அரிய பசுக்களின் பின்னாலே. ஆயன் – இடையன். செறி தொடி – இறுகிய வளைகளை அணிந்த தோழியே. எறிவது – குத்துவது.]
$$$