காவியமும் ஓவியமும் -8

-கி.வா.ஜகந்நாதன்

சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம் - புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 8…

8. ‘மெளன நாடகம்’

ஆணும் பெண்ணும் கூடி வாழும் இல்லற வாழ்க்கையில் பெண்ணுக்குத்தான் வீடென்னும் கூடு கட்டிக் கிளியைப்போலப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். ஆடவனும் அந்தக் கூட்டில் அடைபட்டுக் கிடந்தால் பிறகு ஆடவனுக்கு என்ன பெருமை? அவனுக்குரிய முயற்சிகள் இல்லையா? இல்லறத் தேரை ஓட்டும் பொறுப்பு அவனுடையதாயிற்றே. அதற்குப் பொருள் வேண்டாமா?

ஆள் வினையினால்தான் மனிதன் ஆடவனாகிறான். அவனுடைய முயற்சியின் பலமே உலகத்தில் இயக்கத்தை உண்டுபண்ணுகிறது. காதல் இன்பத்திலே ஊறி நிற்கும்பொழுது அவனுடைய உள்ளமும் உடலும் ஓய்வு பெறுகின்றன; புது முறுக்கை அடைகின்றன. அந்த அமைதியிலிருந்து மீட்டும் அவன் முயற்சியின்மேற் பாய்கிறான். உலகத்தின் பரந்த வெளியிலே புகுந்து தொழில் செய்து பொருளீட்டுகிறான்.

பொருள் குவித்து அறம் செய்கிறான்; இன்பம் நுகர்கிறான். பருவகாலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போவதுபோல முயற்சியும் அதன் பயனும் நுகரும் நுகர்ச்சியும் மாறி மாறி ஆடவனது வாழ்க்கையை அளந்து வருகின்றன.

பெண்மகள் இந்த முயற்சியின் பெருமையை உணர்கிறாளா? தன் ஆருயிர்க் காதலனைப் பிரியச் செய்யும் பொருள் முயற்சியை அவள் வெறுக்கிறாள். பொருளைக் காட்டிலும் இன்பம் பெரிதென்று நினைக்கவில்லை. அவளும் அறிவுடையவள்தானே? பொருள் வளம் இருந்தால் தான் இன்பம் சுரக்குமென்பது அவளுக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் அந்தப் பொருளை ஈட்டும்பொருட்டுத் தன்காதலன் பிரிவானென்பதை அறியும்போது அவள் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறாள். ‘அவளைப் பிரிந்து உயிர் வாழ்வது எப்படி?’ என்ற ஏக்கம் அவனைப் பற்றிக் கொள் கிறது.

அவனுடைய கட்சியை எடுத்துப் பேச ஒரு தோழி இருக்கிறாள். அவள் என்ன என்ன காரணமோ சொல்லி, காதலன் இப்பொழுது பிரிவது இன்றியமையாததென்று வற்புறுத்துகிறாள். அதெல்லாம் சரி. உணர்ச்சி மிகுந்த இடத்தில், இந்தக் காரணங்களெல்லாம் ஏறுமா? காதலி பெரிய யோசனையில் ஆழ்கிறாள்.

“அவர் பொருள் தேடிவர எண்ணுகிறார். இல்லறம் நடத்தும் சுமையை வகிக்க வேண்டியிருப்பதால் அவர் முயற்சியை நீ தரிக்க வேண்டும்” என்கிறாள் தோழி.

“ஹூம்!”

“அவர் பொருள் ஈட்டும் பொருட்டுப் போய் விரைவில் மீண்டு வருவார். நீ அவரைப் போய் வா என்று சொல்ல வேண்டும்.”

விஷயத்தைக் கேட்கும்போதே பாதி உயிர் போய்விடும்போல் இருக்கிறது, அந்த மெல்லியலுக்கு. அவள் தைரியமாக நின்று, “போய்வா” என்று சொல்ல வேண்டுமாம்! காதலனைப் போய்வா என்று சொல்வதற்கும், யமதர்மராஜனை, “என் உயிர் கொள்ள வா” என்று அழைப்பதற்கும் வித்தியாசம் அவள் அளவில் ஒன்றும் இல்லை.

“போகக் கூடாது” என்று சொல்லலாமா? சே, அது தவறு. காதலர் தம் இருவருடைய இன்ப வாழ்க்கையும் முட்டின்றி நடைபெறுவதற்கு வேண்டிய பொருளைத்தானே தேடச் செல்கிறார்? போகக் கூடாதென்று தடுப்பது நியாயம் அன்று. அவர் பிரிந்து போனால் அதனால் வரும் துன்பந்தான் என்ன?–

காதலியின் மனம் சுழல்கிறது. அவள் தன் தோள்வளைகளைப் பார்க்கிறாள். அது சம்பந்தமாக யோசனை படர்கிறது. இப்போது தன் தோளோடு செறிந்து கிடக்கும் அந்தத் தொடி அவர் பிரிந்து நீங்கினால் உடனே கழன்று தோளினின்றும் நீங்கி விடுமே!

ஏன்?

அவள் இப்போது அந்த வளைகளைத் தாங்கி நிற்கும் தன் தோளைப் பார்க்கிறாள்.

அவருடைய அணைப்பிலே இன்பங்கண்டு பூரித்த இந்தத் தோள்கள் என்ன ஆகும்? தம்மைக் கருது வாரின்றி மெலிந்து போகும். தோள் மெலியவே தொடி கழன்றுவிடுமே!

என்ன செய்வது?

தோளையும் தொடியையும் மாறி மாறிப் பார்க்கிறாள்.

காதலன் போகாமல் இருப்பது முறையன்று. அவன் பிரிந்தால் அவள் மெலிந்து போவாள். காதலன் போக வேண்டும்; அவள் தோளும் மெலியாமல் இருக்க வேண்டும். அதற்கு வழியுண்டா?

ஆம்; ஏன் இப்படிச் செய்யக் கூடாது? இதில் அன்ன தவறு? அவர் போகட்டும்; நாமும் அவருடன் போவோமே!’ — இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, உடனே காதலி தன் பாதங்களைப் பார்க்கிறாள்.

அவள் தன் காதலனுடன் போவதாக இருந்தால் அந்தத் துணிகரமான செயலை ஏற்றுக் கொள்ள வேண்டியது கால்களினுடைய பொறுப்பு. அவை நடந்து தன் தோள் மெலிவையும் தொடி கழல்வதையும் பாதுகாக்க வேண்டும். அவள் மென்மையான நோக்கம் அவளுடைய பாதத்திலே சென்றது. தன் கால்களைத் தானே நெஞ்சினால் பிடித்துக்கொண்டு வேண்டுகிறாள்.

“என் மெத்தென்ற பாதங்களே, நீங்களே வருத்தம் பாராமல் தலைவருடன் சென்று என் தோள் மெலிவடையாமலும், என் தொடி கழலாமலும், யான் துன்புறாமலும் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டுகிறாள்.

இவ்வளவும் அவள் மனத்துக்குள் நிகழும் நிகழ்ச்சி.

தோழி அவள் கருத்தை உணர்ந்து கொண்டாள். நேரே நாயகன்பாற் சென்றாள். அவன் ஆர்வத்தோடு தன் காதலியின் உடம்பாட்டை எதிர்பார்த்து நிற்கிறான்.

“என்ன சொன்னாள்?”

“ஒன்றும் வாய் திறந்து சொல்லவில்லை. நான் சொன்னதைக் கேட்டாள். தன் தொடியை நோக்கினாள்; மெல்லிய தோளை நோக்கினாள்; பிறகு அடியை நோக்கினாள். ஆண்டு அவள் செய்தது அதுதான்.”

இந்த மௌன நாடகத்தின் பொருளைத் தலைவன் உணர்ந்துகொண்டான். அவள் மனத்தோடு தன் மனத்தையும் வைத்து ஒட்டியறியும் காதலுடையவன் அல்லவா?

‘அவள் வருவதா! இது சாத்தியமன்று’ என்று நினைத்தான்.

“சரி, நான் இப்போது புறப்படவில்லை” என்று சொல்லி வீட்டுக்குள்ளே புகுந்தான்.

தோழி கூற்று

தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

      -குறள், 1279.


[தொடி – தோள்வளை. அஃது ண்டு அவள் செய்தது – அதுதான், தன் தோழி தலைவனது பிரிவை உணர்த்திய காலத்தில் அவள் குறிப்பாகச் செய்த செய்கை.]

$$$

Leave a comment