-கி.வா.ஜகந்நாதன்
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 6…

6. இன்ப வாழ்வு
நன்றாக முற்றி விளைந்த தயிர்; முளிதயிர். முதல் நாள் இரவு மிகவும் சிரத்தையோடு காய்ச்சிப் பிரை குத்திய தயிர். அதை எடுத்து வைத்துக்கொண்டு அந்த மெல்லியலாள் தன் கையாலேயே சிலுப்பத் தொடங்குகிறாள். காந்தள் மலரின் இதழ்களைப் போன்ற தன் மெல்லிய கைவிரல்களால் பிசைகிறாள். அவசர அவசரமாகப் பிசைகிறாள். தன்னுடைய நாயகனுடைய பசி வேளைக்கு உணவு படைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் அவள் சமையல் செய்கிறாள். பெரிய விருந்து சமைத்து விடவில்லை. சோறு சமைத்து விட்டாள். மோர்க்குழம்பு பண்ணப் போகிறாள். அதற்காகத்தான் அந்த முளிதயிரைத் தன் காந்தள் மெல்விரலால் பிசைகிறாள். அதோடு சேர்க்க வேண்டியவற்றை யெல்லாம் அரைத்து வைத்திருக்கிறாள். எல்லாவற்றையும் அதில் இட்டுக் கலக்குகிறாள். தன் நாயகன் காத்துக்கொண்டிருக்கிறானே என்ற எண்ணம் அவளை முடுக்குகிறது; ஆயிற்று; தாளித்துக் கொட்ட வேண்டியதுதான்.
சட்டென்று கையைத் தன் புடைவையிலே துடைத்துக் கொள்கிறாள். செல்வத்திலே வளர்ந்த அவளுக்குப் புடைவை வீணாகப் போகுமே என்ற ஞாபகமே இல்லை. ‘அவர் காத்திருக்கிறார்’ என்ற ஒரே எண்ணந்தான்.
அவன் அவசரப்படுகிறானா என்ன? அப்படி ஒன்றும் இல்லை. அவள் மிக்க அன்போடு பரபரப்புடன் செய்கிற இந்தச் சமையலைப் பார்த்துச் சிரித்தபடியே நிற்கிறான் அவன். அந்த உணவை உண்ணுவதைக் காட்டிலும் அவள் அதைச் சமைக்கும் வேகத்தில், அதற்காக அவள் உடம்பை நெளித்துக் கொள்ளும் கோணலில், இன்னதுதான் செய்ய வேண்டுமென்ற வரையறையே இல்லாமல் அவள் கையும் காலும் துடிக்கிற துடிப்பில் அவன் ஒரு தனி அழகைக் கண்டு களிக்கிறான்.
அந்தப் புடைவை அழுக்காகிவிட்டதே, அதைக் கவனிக்கிறாளா? இல்லவே இல்லை; அந்தப் புடைவையோடேதான் அவள் சமைக்கிறாள். அடுப்பில் கரண்டியைப் போடுகிறாள்; தாளித்துக் கொட்டுகிறாள். தாளித்துக் கொட்டினால்தான் என்ன? அதையேயா பார்த்துக் கொண் டிருக்க வேண்டும்? அதிலே ஒரு திருப்தி அவளுக்கு. அந்தத் தாளித்த புகை குவளைமலரைப் போன்ற அவளது கண்ணைக் கவிகிறது. அவசர அவசரமாக ஒரு கையால் கண்ணையும் துடைத்துக் கொள்கிறாள். ‘குவளை உண் கண் குய்ப்புகை கமழ’ அவள் துழாவிச் சமைத்த அந்த இனிய புளிக் குழம்பு, தீம்புளிப்பாகர், இப்போது தயாராகிவிட்டது.
இலை போடுகிறாள்; பரிமாறுகிறாள். வெறும் பச்சை மோர்க் குழம்புதான் அது. அதை அவன், “மிகவும் நன்றாக இருக்கிறது; மிகவும் நன்றாக இருக்கிறது!” என்று நொட்டை கொட்டிக்கொண்டு உண்கிறான்; “இன்னும் கொஞ்சம் போடு, இன்னும் கொஞ்சம்” என்று கேட்கிறான். இனிது எனக் கணவன் அதை உண்பதனால் அவள் பூரித்து போகிறாள். அவள் என்ன பண்ணிவிட்டாள்! அறுசுவை உண்டி சமைத்துவிட வில்லை. ஆனாலும் தன் மாசற்ற அன்பைக் குழைத்துச் செய்தாள். அந்த அன்பை உணர்ந்து அவன் உண்கிறான்; பாராட்டுகிறான். அவள் உள்ள மகிழ்ச்சி முகத்தில் லேசாகத் தெரிகிறது. அந்த ஒள்ளிய நெற்றியையுடைய செல்வ மகளது முகம் மிகவும் நுண்ணிதாக மகிழ்கிறது. திருப்தியின் ரேகையும், உள்ள மலர்ச்சியின் பொலிவும் அந்த முகத்தை அழகு செய்கின்றன.
இந்த இன்பவாழ்வின் காட்சியை அவளுடைய பிறந்த வீட்டிலிருந்து வந்த செவிலித்தாய் பார்க்கிறாள். பார்த்துவிட்டு மீட்டும் தன் ஊருக்குப் போகிறாள். பெண்ணின் தாய் செவிலியைப் பார்த்து, “போனாயே; குழந்தை எப்படி இருக்கிறாள்? மாப்பிள்ளை அவளை நன்றாக வைத்துக் கொண்டிருக்கிறானா? சந்தோஷமாக இருக்கிறாளா?” என்று கேட்கிறாள். அவள் தான் கண்ட காட்சியையே விடையாகச் சொல்கிறாள்:
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா அ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே.
-குறுந்தொகை - கூடலூர்கிழார் பாட்டு.
[முளி – விளைந்த. பிசைந்த – குழப்பிய. கலிங்கம் – ஆடை. கழாஅது – துவைக்காமல். உடீஇ – உடுத்து. உண்கண் – மையுண்ட கண். குய்ப்புகை – தாளிதப்புகை. துழந்து – துழாவி. அட்ட – சமைத்த. தீம்புளிப் பாகர் – இனிய புளிச்சுவையையுடைய குழம்பு. நுண்ணிதின் – மிக நுண்மையாக. மகிழ்ந்தன்று – மகிழ்ந்தது. ஒண்ணுதல் முகன் – விளக்கத்தையுடைய நெற்றியையுடையவளது முகம்.]
$$$