-கி.வா.ஜகந்நாதன்
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளை தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 4…

4. கிழவியின் பிரயாணம்
ஐயோ பாவம்! நடக்கும்பொழுதே தத்தித் தத்தி நடகிறாளே; கால் சோர்ந்து போகிறதே! எதற்காக இந்தக் கிழவி இப்படி புறப்பட்டாள்? கையைக் குவித்துக்கொண்டு எதையோ பார்க்கிறாள். இவள் வயசுக்கு இப்படி நடந்து திரிபவர் யார் இருக்கிறார்கள்? இவளையே கேட்டுப் பார்க்கலாம்.
“பாட்டீ, ஏன் இப்படி இந்த அகன்ற பாலை வனத்திலே நடக்கிறாய்? இங்கே அலையும்படி உன்னை விட்ட விதி பொல்லாததாய் இருக்க வேண்டும்.”
இதென்ன! பாட்டி காதில் என் கேள்வி விழவில்லை. இவள் காதும் மந்தமாகியிருக்கிறதே. இந்த வெயிலில் தங்க நிழல் இல்லாத பாலைவனத்தில் அங்கந் தளர்ந்து திரைந்த இந்தப் பெரியவள் நடந்து அலுத்துப்போய் நிற்கிறாளே. இவள் எதற்காக இப்படிக் கூர்ந்து கூர்ந்து பார்க்கிறாள்?
“அப்பா, யாரப்பா?”
ஆம், பாட்டியின் குரல்தான், இவள் தொண்டையிலுள்ள வறட்சி தொனிக்கிறதே.
“ஏன் பாட்டீ!”
“அதோ வருகிறார்களே; அவர்கள் ஒரு பெண்ணும் ஓர் ஆணுந்தானே?”
“ஆம், பாட்டி, யாரோ காதலனும் காதலியும் போலத் தெரிகிறது.”
“அப்படியா!”
கிழவியின் முகத்திலே ஒரு மலர்ச்சி உண்டாகிறது. சிறிது நின்று பெருமூச்சு விடுகிறாள்; “அப்பாடி!” என்று சொல்லி ஆசுவாசப் படுத்திக் கொள்கிறாள். அந்தத் தம்பதிகளையே பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.
அவர்களோ மெல்ல மெல்லக் கதை பேசிக் கொண்டு இவளெதிரே வருகிறார்கள். கிழவியின் மன வேகத்திற்கு அவர்கள் நடை நேர் மாறாக இருக்கிறது. ஒரு கணத்தில் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்று கிழவி எண்ணுகிறாள். அவர்கள் வேகமாக நடந்து வந்தால்தானே?
அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். பாட்டி கண்ணைத் துடைத்துத் துடைத்துப் பார்க்கிறாள். அவர்கள் இந்த முதியவளை நெருங்கி விட்டார்கள். இவள் தன் கண்ணை அகல விழித்துக் கூர்ந்து கவனிக்கிறாள்.
அடே! இதென்ன! இவள் முகம் ஏன் இப்படித் திடீரென்று மாறுகின்றது? சூரியனது ஒளியிலே பளபளத்த இவள் முகம் மேகத்திரை போட்டாற்போலே சோகப்படலத்தை ஏறிட்டுக்கொண்டு விட்டதே! ஏன்? இவள் உள்ளத்திலே ஏதோ ஏமாற்றம் தோன்றிவிட்டது. பாவம்! அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது.
அந்தக் காதலிரட்டையர் போய்விட்டனர். தளர்ந்து பதிந்த கால்களையும் எடுத்து இரண்டடி மேலே நடக்கிறாள் கிழவி. மேல்மூச்சு வாங்குகிறது. பல்லைக் கடித்துக் கொண்டு இளைய ஆண்மகனைப் போல வீசி நடக்க மனம் முந்துகிறது. காலையும் வீசி வைக்கிறாள். ஆனால் அடுத்த கால் அதை பின் தொடரவில்லை; தளர்கிறது. “ஐயோ!” என்று விழப் போகிறாள். கைத்தடி அவளை விழாமல் நிலைநிறுத்துகிறது.
மறுபடியும் பார்க்கிறாள்: கையை நெற்றியின் மேல் வைத்துப் பார்க்கிறாள். பாலைவனத்தில் மனிதர்கள் அடிக்கடி பிரயாணம் செய்வார்களா? சிறிது நேரம் கழித்து இரண்டு உருவங்கள் நிழலைப் போல் நெடுந் தூரத்திலே தெரிகின்றன. அந்த நிழலை நம்பிக் காத்து நிற்கிறாள். அந்த உருவங்களின் அங்க அடையாளங்கள் ஒருவாறு புலப்பட்டு அவர்கள் ஆணும் பெண்ணுமென்று தெரிந்தால் இவளுக்கு நம்பிக்கை உதயமாகிறது. ஆனால் அருகில் வந்த போது மறுபடியும் அவள் ஏமாந்து போகிறாள். அருகில் வந்ததும் அந்த உருவங்கள் இவள் உள்ளத்திலே இருளைத்தான் புகுத்திச் செல்லுகின்றன.
தூரத்திலே எது தெரிந்தாலும் இவள் கூர்ந்து கவனிக்கிறாள். காலோய்ந்த யானை வருகிறது; பயந்து சாகிறாள். வேறு யாரோ ஆடவர்கள் வருகிறார்கள். அவர்களை என்னவோ கேட்கிறாள். “நீ எங்கேயம்மா போகிறாய்?” என்று அவர்கள் கேட்கிறார்கள். இவள் விடை கூறவில்லை. இவளுக்கே எங்கே போகிறோமென்று தெரியவில்லை. ஆம்; இவளுடைய லக்ஷ்யம் ஓரிடமல்ல; வேறு ஏதோ!
“பாட்டீ, எங்கே போகிறாய்?”
“எனக்கே தெரியாதப்பா.”
“எவ்வளவு நாழிகை இப்படி நடந்துகொண்டே இருப்பாய்?”
“தெரியாதப்பா!”
“எப்பொழுது உன் பிரயாணத்துக்கு முடிவு நேரும்?”
“வாழ்க்கைப் பிரயாணத்துக்கா?”
“உன் காலில் வன்மை இல்லையே?”
“ஆம் அப்பா, என் கால் தவறுகிறது; நான் ஓர் இடத்தில் வைத்தால், அது ஓரிடத்தில் போகிறது.”
“எதையோ மிகவும் ஆவலாகப் பார்க்கிறாயே?”
“பார்த்துப் பார்த்து என் கண்ணில் இருக்கிற அரைக்காற் பார்வைகூட மங்கிவிட்டது.”
“எதைப் பார்க்கிறாய்?”
“என் துரதிருஷ்டத்தைப் பார்க்கிறேன்.”
“ஒன்றும் விளங்கவில்லையே பாட்டி!”
“நான் பார்க்கிறேன்; சூரியனும் சந்திரனும் இல்லாத வானத்திலே அந்த இரண்டு சுடருருவங்களையும் தேடிப் பார்க்கும்போது ஆயிரக் கணக்கான நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. எல்லாம் நட்சத் திரங்கள்; மதியில்லை; கதிரவனும் இல்லை!”
“அது போல–?”
“நான் பார்க்கிறேன். என்னைச் சேர்ந்தவர்களைத் தேடிப் பார்க்கிறேன். அகலிரு வானத்து மீனைக் காட்டிலும் பலர் இங்கே போகிறார்கள்; இந்த உலகத்திலுள்ள எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக இங்கே வருகிறார்களென்று தோற்றுகிறது. இவ்வளவு பேர்களில் எல்லோரும் பிறரே. அவர்களைக் காணவில்லை.”
“அவர்கள் யார் பாட்டீ?”
“எழில் திரண்ட நங்கை ஒருத்தி; அவளுக்குப் பற்றுக்கோடாக நின்ற ஆண் மகன் ஒருவன்.”
“அவர்கள் இங்கே ஏன் வந்தார்கள்?”
“என் பாவம்! எங்களவர் செய்த பாவம்! பாவமல்ல; எங்கள் அறிவின்மை.”
“கதையை முழுவதும் சொல்லு பாட்டீ!”
“அவள் என் மகள். நான் அவளை வளர்த்த செவிலி. மார்மேலும் தோள்மேலும் வைத்து வளர்த்தேன். அவளுடைய உள்ளத்தைக் கொள்ளைகொண்ட ஆண் சிங்கம் ஒன்று உண்டென்ற உண்மையை உணரும் சக்தி எனக்கு இல்லை. அவள் அவனுடைய அன்பிலே இன்பங் கண்டாள். அவள் குறிப்பறிந்து அவனை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும் பாக்கியம் எங்களுக்கு இல்லாமற் போயிற்று. அவளுடைய காதல் எவ்வளவு அருமையானது என்பதைத் தெரிந்துகொள்ளவில்லை. அவர்கள் எங்களிடமென்று நன்மை உண்டாகுமென்று எதிர்பார்த்தார்கள். எங்கள் மனம் இளகவில்லையென்று தெரிந்தது. இரு பறவையும் பறந்து போயின. அவள் போன பிறகே அவளருமை தெரிகிறது. என்ன பிரயோசனம்? தெய்விகக் காதலால் பிணிக்கப் பட்ட அந்தக் கொடியும் அது படர்ந்த கொம்பு போன்ற அவனும் இவ்வழியாக வருவார்களென்று பார்க்கிறேன்.”
கிழவி மேலே தன் பிரயாணத்தைத் தொடங்கினாள். அன்பின் அருமையை உணராமல் கை நழுவவிட்ட கிழவியின் பிரயாணம் வாழ்க்கைப் பிரயாணம்போல ஏமாற்றம் நிறைந்ததாகவே இருக் கிறது. அன்பற்ற கொடியவரது நெஞ்சம் போலே அழலெரிக்கும் அந்தக் கொடுஞ் சுரத்தில் அன்பே வடிவமென்று எண்ணத்தகும் இரண்டு உருவங்களை, ‘காதல் ஒன்று, அதனைப் பேணிக்காக்கும் வரம் ஒன்று’ என்று சொல்லத்தகும் இரண்டு பேர்களை, இன்னும் கிழவி கண்டாளோ இல்லையோ!
செவிலி கூற்று
காலே பரிதப் பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே;
அகலிரு வானத்து மீனினும்
பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே.
-குறுந்தொகை - வெள்ளி வீதியார் பாட்டு.
[பரி தப்பின – நடை தவறின. வாள் – ஒளி. அகல் இரு வானத்து – அகன்ற பெரிய வானத்திலுள்ள. மீன் – நட்சத் திரம். மன்ற – நிச்சயமாக. பிறர் – அயலார்.]
$$$