-கி.வா.ஜகந்நாதன்
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 3…

3. ‘மாலையின் அக்கிரமம்’
அவள் பிறர் பார்வைக்குக் கன்னிதான், ஆனாலும் அவளுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒருவன் இருக்கிறான். அவளது காதல் இன்பத்தை நுகர்ந்தவன் அவன்.
எழிலும் உருவும் திருவும் பொருந்திய அந்த மடமங்கையின் உள்ளத்திலே வீற்றிருக்கும் அவன் அவளுக்கு ஏற்ற அழகுடையவன்; வீரமுடையவன்; செல்வமும் உடையவன். அவன் ஒரு நாட்டுக்கே தலைவன்; சிற்றரசன். வீரம் செறிந்த அரசர் வழி வந்தவன்.
அவனுடைய நாட்டில் இயற்கையின் முழு வளமும் குலுங்குகிறது. மலைகள் நிரம்பிய குறிஞ்சி நிலம் வேண்டுமா? அவன் நாட்டில் இருக்கிறது. பல பல அருவிகள் குதித்தோடும் மலைச்சாரல்களிலே அடர்ந்து வளர்ந்த காடுகளைக் கண்ட புலவர்கள் அவனை, “கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்” (தொகுதியைக் கொண்ட அருவிகளும் காடுகளும் பொருந்திய மலைநாட்டை உடையவன்) என்று பாராட்டுகிறார்கள்.
கானாறும், மாடு மேய்க்கும் ஆயர்கள் வாழும் காடும் நிரம்பிய முல்லை நிலச்செல்வமும் அவனுக்கு உண்டு. அதனால் அவனை, “குறும்பொறை நாடன்” (சிறிய கற்களையுடைய நாட்டையுடையவன்) என்று புகழ்கிறார்கள்.
அவனுடைய செல்வத்துக்குத் தனியடையாளமாகச் சிறந்து நிற்பது அவனுக்கு உரிய மருத நிலச் செல்வம். நெல்லும் கரும்பும் காடுபோல அடர்ந்து விளைந்து பல நாடுகளுக்கு உணவு அருத்தும் நல்ல வயல்கள் அந்த நிலத்து ஊர்களில் உள்ளன. எல்லாம் அவனுக்குச் சொந்தம். “நல்வய லூரன்” என்ற சிறப்புக்கு அவன் எவ்வகையிலும் தகுதியுடையவன்.
இவை மட்டுமா? முத்தும் பவழமும் பிறக்கும் பெருங்கடற்கரையளவும் அவன் நாடு பரந்திருக்கிறது. கடற்கரையை அடுத்துள்ள நெய்தல் நிலப் பரப்பையும் அவன் பெற்றிருப்பதால், “தண்கடற் சேர்ப்பன்” (தண்ணிய கடல் துறையை உடையவன்) என்ற பெயரால் சில சமயங்களில் அறிஞர்கள் அவனப் புகழ்வதுண்டு.
இப்படிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலத்துக்கும் தலைவனாகிய அவனுக்கு இப்போது காதற் பயிர் விளைக்கும் அவள் கிடைத்தாள். இனி அவனுக்கு என்ன குறை?
இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஏற்றவர்களே. கடவுள் திருவருளால் கண்டார்கள்; காதல் கொண்டார்கள்; அளவளாவினார்கள். இப்போது அவன் பிரிந்து போயிருக்கிறான். மறைவாகக் காதல் புரியும் ஒழுக்கத்தை அவர்கள் விரும்பவில்லை. உலகறிய மணம் புரிந்துகொள்ளவே விரும்பினர். அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்ய அவன் பிரிந்து சென்றான்.
* * *
இவ்வளவு வயசு ஆகும் வரையில் அவனைப் பிரிந்திருந்தாளே; இப்போது ஒரு கணமேனும் பிரிந்திருக்க முடியவில்லை. அவனை அறியாமல் இருந்த காலம் எவ்வளவு நீண்டதாக இருந்தாலும் அவளைத் துன்புறுத்தவில்லை. அவன் வரவுக்காக அவள் காத்திருந்தாள். அவள் அழகு காத்திருந்தது; அவள் உணர்வு காத்திருந்தது; உயிரே காத்திருந்தது. இன்னும் அவனைக் காணாமல் இருந்திருந்தால் இந்த உலகம் அழியும் வரையில் அவள் அவனுக்காகக் காத்திருப்பாள். அப்பொழுதெல்லாம் அவள் கன்னி. இப்போது அவள் காதலி. ஒரு நாள் போவது ஒரு யுகமாக இருக்கிறது. தனிமை அவளை வருத்துகிறது. தனியிடத்தே சென்று அவனையே நினைந்து புலம்புகிறாள்.
ஓடைக்கரையிலும், சுனைக் கரையிலும், கழிக் கரையிலும் சென்று தன் பார்வையை நீர்மேல் நிமிர்ந்து நிற்கும் மலர்க் கூட்டத்தில் செலுத்துகிறாள்.
பகல் நேரத்தில் சென்று அவனுடைய நினைவிலே தன்னை மறந்து வீற்றிருக்கிறாள். அவள் கண் முன்னே சில நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. அதை அவள் உணரவில்லை; அவள் உள்ளம் கண்பார்வையோடு கலக்கவில்லை.
திடீரென்று அந்த ஆச்சரிய நிகழ்ச்சி கண்ணில் படுகிறது. அவள் அங்கே வந்து அமர்ந்தபொழுது தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன; நீல மலர்கள் குவிந்திருந்தன. இப்போதோ தாமரைகள் குவியத் தொடங்கின; நீல மலர்கள் இதழ் விரிந்தன.
“அட! மாலைக் காலம் வந்துவிட்டதுபோல் இருக்கிறதே!” என்று திரும்பிப் பார்க்கிறாள். சூரியன் ரத்தத்தைக் கக்கிக்கொண்டு மலை வாயில் விழுந்து கொண்டிருக்கிறான். பார்த்தவுடன் பகீரென்கிறது அவளுக்கு.
மாலைக் காலத்தைக் கண்டால் அவளுக்கு யமனைக் கண்டதுபோல் இருக்கும். ஊரெல்லாம் குறட்டை விட்டுத் தூங்க, தான் மட்டும் தனித் திருக்கும் இரவுக் காலத்தை அறிவுறுத்துவதல்லவா அந்தப் பாழும் மாலை! அதற்கு எப்படித் தப்புவது?
“இதென்ன! நான் இப்பொழுதுதானே வந்தேன்! அதற்குள் எப்படி மாலைக்காலம் வந்தது? பெரிய அக்கிரமமாக இருக்கிறதே!”
அவள் அங்கிருந்து ஓடி உப்பங்கழியின் பக்கத்திலே சென்று பார்க்கிறாள். அங்குள்ள நெய்தல் மலர்கள் அவளுடைய உள்ளத்தைப் போலக் கூம்பியிருக்கின்றன. காலத்தை உணர்த்தும் இயற்கைக் கடிகாரம் அவை.
“சந்தேகமே இல்லை. மாலைதான் வந்துவிட்டது. அதற்கு இப்போதுதான் வரவேண்டுமென்ற நியதி இல்லையோ! இந்தப் பட்டப் பகலிலே மாலை வரும் அக்கிரமத்தைக் கேட்பவர்கள் ஒருவரும் இல்லையா!” மாலை, இரவு, நள்ளிரவு, இவற்றால் வரும் தாபங்கள் எல்லாம் அவள் உள்ளக் கண்ணிலே ஒன்றன்பின் ஒன்றாக வந்து பயமுறுத்துகின்றன.
“சரிதான்! கேட்பாரற்ற ஊரிலே யார் எதைச் செய்தால்தான் என்ன? என்னுடைய உயிர்க் காதலர் என்னைப் பிரிந்திருக்கிறார். இந்தச் சமயம் பார்த்து இப்படியெல்லாம் அக்கிரமம் நடக்கிறது. என்னடா ஆச்சரியம்! இந்த மாலைக் காலந்தான் தவறுதலாக வந்து விட்டதென்று நினைத்தால் இதன் கூட்டாளிகளுமா இப்படிச் செய்யவேண்டும்? சூரியன் இவ்வளவு சீக்கிரம் அஸ்தமித்துவிட்டான்! நெய்தல் மலர்களும் இவ்வளவு சீக்கிரம் குவிந்துவிட்டன! எல்லாம் வாஸ்தவமாக முன்பெல்லாம் நடக்கிற மாதிரியே இருக்கின்றன. ஆனால், பொய்! பொய்! இது நல்ல கடும்பகல். இந்தக் கடும்பகலில்தான் வஞ்சகமாக மாலை வந்திருக்கிறது.”
பெருமூச்சு விடுகிறாள்; கண்ணை வெறித்துப் பார்க்கிறாள். மாலை ஏதோ ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு அவள் முன்பு நிற்கிறதா என்ன? அவள் அதோடு பேசுகிறாளே!
“என் செயலெல்லாம் அழியும்படி வந்த மாலையே!”
மாலைக்காலம் வந்தால் அவள் செத்த பிணம் போலத்தான் ஆகிவிடுவாள். விரகவெந்தீ மாலைக் காலத்தில்தான் கொழுந்தோடிப் படரும். அவள் அதனால்தான் அதைக் கண்டு துடிதுடிக்கிறாள்.
“மாலைப்போதே! என் தலைவர் பிரிந்தார். இதுவே சமயமென்று, நீ முன்பெல்லாம் வருவது போலவே வருகிறாயென்று எல்லோரும் நினைக்கும்படி என்னவோ செய்து ஏமாற்றிக் கடும் பகலிலேயே வந்துவிடுகிறாய். உன்னைக் கேட்பவர் ஆர்? வளைந்து செல்லும் கழியில் உள்ள நெய்தல் மலர்கள் குவியும்படி, காலையிலே நீ வந்தாலும் உன்னை மாற்றுபவரோ இங்கே இல்லை; நீ வைத்ததுதான் சட்டம்” என்று அவள் குமுறுகிறாள். அவள் நோய் அவளுக்கல்லவா தெரியும்?
தலைவி கூற்று
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாடன் நல்வயல் ஊரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை,
கொடுங்கழி நெய்தலுங் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே.
-ஐங்குறுநூறு - அம்மூவனார் பாட்டு.
[கணம் – தொகுதி. கான் – காடு. கெழு – பொருந்திய. குறும்பொறை நாடன் – முல்லை நிலத்தவனது பெயர். ஊரன் – மருதநிலத் தலைவன். சேர்ப்பன் – நெய்தல்நிலத் தலைவன்; சேர்ப்பு-கடற்றுரை. பிரிந்தென-பிரிய. பண்டையின் – முன்போலத் தோற்றும்படி. வருதி-வருகிறாய். கையறு – செயலறுதற்குக் காரணமான. கொடுங்கழி – வளைந்த உப்பங்கழி. கூம்ப-குவிய. களைஞர்-விலக்குபவர்.]
$$$