காவியமும் ஓவியமும் -2

-கி.வா.ஜகந்நாதன்

சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 2…

2. ‘ காமமோ பெரிதே!’

மலைச்சாரலின் மோகனக் காட்சியிலே சிந்தையைப் பறிகொடுத்து நின்று நாலு திக்கையும் கண்களால் அளக்கும் அவன் ஒரு வீரனாகத்தான் இருக்க வேண்டும். ‘உலம் படு தோள்’ என்று கவிகள் வர்ணிக்கிறார்களே, அந்தத் தோள்களை அவன் கொண்டிருக்கிறான்.

அவன் அந்த இயற்கை எழிலைப் பார்த்துச் சொக்கி நிற்கிறானென்று சொல்வது தவறோ? ஆம்; அவன் வேறு எதையோ எதிர்பார்த்து நிற்கிறான். மரங்களினூடே தலையை அங்கும் இங்கும் திருப்பியும் தாழ்த்தியும் பார்க்கிறான். யாரோ வருவதைத்தான் எதிர்நோக்கி நிற்கவேண்டும்.

அதோ வருகிறாள் ஒருத்தி; அவளுடைய உல்லாஸ சோபையிலே மலைப் பிராந்தியங்களின் மணம் தவழ்கிறது. அவளைக் கண்டவுடன் அவனுக்கு முகத்தில் ஓர் ஒளி ஏறுகிறது. ஆனால் அவன் அவளைக் கண்டவளவில் திருப்தி அடையவில்லை. பின்னும் தன் பார்வையை ஓட்டுகிறான். அவளைத் தொடர்ந்து யாராவது வருகிறார்களோ என்று ஆவலோடு கவனிக்கிறான். சிறிது ஏமாற்றக் குறிப்பு அவனது முகத்திலே படர்கிறது.

அவள் வந்துவிட்டாள். வந்து அவன் முன் நின்றாள்.

“உன் யஜமானி வரவில்லையா?” என்று அவளை அவன் கேட்கிறான்.

“உன் யஜமானிதானே?” என்று அந்தக் கேள்வியை மடக்கிக் கேட்டுப் புன்னகை பூக்கிறாள் அந்தப் பெண்ணணங்கு.

“சந்தேகமென்ன? என்னுடைய யஜமானிதான்; என் ஆருயிர்த்தலைவி!”

“அது கிடக்கட்டும்; இரண்டு நாட்களாக ஏன் வரவில்லை?”

அவன் என்னவோ யோசனை செய்து நிற்கிறான்.

* * *

அவனுடைய காதலியின் உயிர்த்தோழி அந்தப் பெண்மணி. காதலனும் காதலியும் அந்தரங்கமாகப் பழகி வருகிறார்கள். இன்னும் திருமணம் நடைபெறவில்லை. காதலனுக்குள்ள கடமைகள் சில நாட்கள் அவனை வரவொட்டாமல் தடுக்கின்றன. இந்த ரகசிய வாழ்க்கை எவ்வளவு காலம் நடை பெறுவது? காதலி மிகவும் துயரம் அடைகிறாள். அதைப் போக்கி அவர்கள் காதல் நிலைபெறச் செய்யவேண்டியது தோழியின் கடமை. உலகறிய மணம் செய்து கொள்ளும்படி காதலனை வற்புறுத்த வேண்டும். நேரே அந்தச் செய்தியைச் சொல்வதை விடத் தலைவியின் நிலையைச் சொல்லி, அதனால் அவனே அந்த விஷயத்தை உணர்ந்து கொள்ளும்படி செய்யவேண்டுமென்ற உறுதியோடு இன்று வந்திருக்கிறாள் தோழி.

* * *

“சாரலையுடைய மலை நாட்டுக்குத் தலைவ, நீ சொளக்கியமாக இருக்கவேண்டும்!”

இந்த ஆரம்பம் ஏதோ ஒன்றச் சொல்லப் போகிறாளென்பதைப் புலப்படுத்தியது. ‘இப்போது எனக்கு என்ன சொளக்கியக் குறைவு வந்துவிட்டது? இவள் எதையோ பிரமாதமாகச் சொல்லப் போகிறாள்’ என்று அவன் ஊகித்துக் கொள்கிறான்.

“ஆமாம்; உன்னுடைய மலைச்சாரலின் அழகே அலாதியானது. அந்தச் சாரலிலுள்ள பலாப்பழங்களுக்கு எத்தனை பாதுகாப்பு? இயல்பாகவே வளர்ந்து ஓங்கி நிற்கும் மூங்கில்களே நெருக்கமாக நின்று வேலியைப்போல உள்ளன. அந்த எல்லைக்குள்ளே பலாமரங்கள் குலுங்கக் குலுங்கக் கனிந்து நிற்கின்றன. அந்தப் பலாமரமோ வேர்ப்பலா; பழங்களெல்லாம் வேரிலே காய்க்கின்றன. பூமியிலிருந்து வெடித்துப் புறப்படுகின்றன. நிலமே அவற்றிற்கு ஆதாரமாக இருக்கிறது. இவ்வளவு பாதுகாப்பாக அவை வளரும்போது அவற்றிற்கு என்ன குறை?” என்கிறாள் அவள்.

‘இந்தக் குறத்தி என்னவோ சொல்லப் போகிறாள். அதற்காகத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறாள்’ என்று எண்ணிய காதலன், “அந்தப் பலாப்பழ விசாரம் இப்போது எதற்கு?” என்று கேட்கிறான்.

“எதற்கா? அந்த விஷயம் யாருக்குத் தெரியப் போகிறது!”

“எந்த விஷயம்?”

“எங்கள் சாரலிலே விளையும் பலாப்பழத்தின் நிலையை அறிவது எளிதல்லவே! அதுவும், வேரிலே பழுத்து, நிலத்தால் தாங்கப்பெற்று, மூங்கில்வேலியின் காவலுக்குள்ளே உள்ள பழத்தையுடைய உங்கள் மலைசாரலை மாத்திரம் அறிந்தவர்களுக்கு எங்கள் ஊர் விஷயம் எப்படித் தெரியப் போகிறது?”

“உங்கள் சாரலில் மட்டும் என்ன தனிச் சிறப்பு இருக்கிறது?”

“அதைத்தான் சொல்ல வருகிறேன். அதோ பார் அந்த பலா மரத்தை. அதில் எவ்வளவு பெரிய பழம் தொங்குகிறது, பார்!”

“அடே அப்பா! உண்மையிலே பெரிய பழந்தான்.”

“அதன் காம்பைப் பார்த்தாயா? அது எவ்வளவு சிறியது பார்த்தாயா? அதைத் தாங்கும் கொம்பு எவ்வளவு சிறிதாக உள்ளது? அவ்வளவு சிறிய கொம்பிலே பழுத்து முதிர்ந்த அந்தப் பெரிய பழம் எவ்வளவு காலம் இப்படியே தொங்கும்?”

“பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எந்தச் சமயத்தில் முதிர்ந்து விழுந்துவிடுமோ என்ற கவலைகூட உண்டாகிறது.”

இது சொன்னதுதான் தாமதம்; தோழி, “ஆ! அதுதான் சொல்கிறேன்” என்று உணர்ச்சியோடு கூவினாள். தலைவன் அவளை உற்று கவனித்தான்.

“நீ இவ்வளவு காலமாக உன் காதலியின் தன்மையை அறிந்திருந்தால், அவளும் இந்தப் பலாப் பழம் போல இருப்பதை உணர்ந்திருக்கலாமே. அவள் உன்னிடத்தில் எவ்வளவு காதலாக இருக்கிறாள் தெரியுமா? அவளுக்குள்ள காதல் எவ்வளவு பெரிது என்பதை அறிவாயா?”

தலைவன் பெருமூச்சு விடுகிறான்.

“இந்தச் சிறிய கொம்பிலே பெரிய பழம் தொங்குவதைப் போல உன் காதலியின் உயிர் மிகச் சிறிது; அவள் கொண்டிருக்கும் காதலோ பெரிது. அவள் உயிருக்கும் காதலுக்கும் உள்ள பிணைப்பு அறாமல் இருக்கவேண்டும். அதற்கு வழி உன்னிடந்தான் இருக்கிறது.”

தோழியின் மந்திரம் பலித்துவிட்டது. அவன் மறுபடியும் அந்தச் சிறுகோட்டுப் பெரும் பழத்தைப் பார்க்கிறான். ‘அந்தப் பழம் விழுந்துவிட்டால் யாருக்குப் பிரயோசனம்? அதனை நுகர்வதற்கு உரியவன் பறித்துப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வீணாகி விடும். நம் காதலியை நாமும் தக்க பருவத்தில் மணந்து பாதுகாக்கவேண்டும்’ என்ற சங்கற்பம் அவன் உள்ளத்தே உதயமாகிறது. விடைபெற்றுச் செல்கிறான்.

“இவள் உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே” என்று தோழி கூறிய வார்த்தைகள் அவனுக்குள் ரீங்காரம் செய்கின்றன.

தோழி கூற்று

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட, செவ்வியை ஆகுமதி;
யாரஃ தறிந்திசி னோரே? சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே!

      -குறுந்தொகை - கபிலர் பாட்டு.


[வேரல் – மூங்கில். வேர்க்கோட் பலவு – வேரிலே பழக்குலையையுடைய பலாமரம். சாரல் – மலைச்சரிவு. செவ்வியை ஆகுமதி – சொளக்கியமாக இருப்பாயாக. அறிந்திசினோர் – அறிந்தவர்கள். சிறு கோட்டு – சிறிய கொம்பில். தூங்கியாங்கு – தொங்கினாற்போல. தவ – மிகவும்.]

$$$

Leave a comment