காவியமும் ஓவியமும் – முன்னுரை

-கி.வா.ஜகந்நாதன்

சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூலின் முன்னுரை இது…

காவியமும் ஓவியமும்

நன்றி:

காவியமும் ஓவியமும் (கட்டுரைகள்)
கி.வா.ஜகந்நாதன்
பதிப்புரிமை கலைமகள் காரியாலயம்
மயிலாப்பூர்,  சென்னை
டிஸம்பர், 1944  

PRINTED AT
THE MADRAS LAW JOURNAL BRANCH PRESS
AT THIRUBHUVANAM, TIRUVADAMARUDUR POST.

***

சமர்ப்பணம்

பெற்றா னில்லை அன்னையென,
      பிறந்தேன் இல்லை மகவென்ன!
மற்றோ அன்பின் வகைஎல்லாம்
      மாணக் காட்டித் தமிழ்பயிற்றிக்
கற்றோர் அவைக்கண் எனைநிறுவும்
      கருணை யாளன்; அமரநிலை
உற்றான், சாமி நாதன்அடி
      மலர்க்கீழ் இந்நூல் ஒளிருகவே!

உள்ளுறை

சமர்ப்பணம்

  1. ‘தானே கள்வன்’
  2. ‘காமமோ பெரிதே’
  3. மாலையின் அக்கிரமம்
  4. கிழவியின் பிரயாணம்
  5. ஆச்சரியம்
  6. இன்ப வாழ்வு
  7. மான் உண்டு எஞ்சிய நீர்
  8. மௌன நாடகம்
  9. சிறு குழலோசை
  10. தேயும் உயிர்
  11. மான் செய்த தந்திரம்
  12. நெஞ்சமும் அறிவும்
  13. அவர் போன வழி
  14. அலமரும் கண்
  15. அவள் நிலை
  16. பெருந்தகு நிலை
  17. ஆண் சிங்கம்
  18. அதே யானை

அரும்பதக் குறிப்பு

$$$

முன்னுரை

சீதாபிராட்டியை ராமபிரான் முதல்முதல் காணும் பொழுது அப்பிராட்டியை வருணிக்கப் புகுந்த கம்பன் அந்த அழகுப் பிழம்பிக்கு உவமையாக என்ன என்ன பொருள்களையோ சொல்லிப் பார்க்கிறான். பொன்னின் சோதியையும் பூவினது நறுமணத்தையும் தேனினது சுவையையும் சொல்கிறான். திருப்தி உண்டாகவில்லை. முடிந்த முடிபாக உயர்ந்த பொருள் ஒன்றைச் சொன்னால் தான் அவனுடைய பாட்டு, பொருளுடையதாகுமென்று தோன்றுகின்றது. கடைசியில் ஒன்றைச் சொல்லியே விட்டான்:  ‘செஞ்சொற் கவி இன்பம்!’ என்கிறான்.

புலன்களால் நுகரும் இன்பத்தை உதவும் ஏனைய பொருள்களைக் காட்டிலும் நேரே உள்ளத்தால் நுகர்ந்து இன்புறும் கவிதை, போகப் பொருள்களிலெல்லாம் தலை சிறந்தது. மதுக்கலசத்தையும் பெண்ணணங்கையும் இன்ப வாழ்க்கைக்கு உறுதுணையாக வேண்டும் உமர் கையாமும், காணி நிலமும் பத்துப் பன்னிரண்டு தென்னமரமும் பத்தினிப் பெண்ணும் வேண்டுகின்ற பாரதியும் அவ்வின்பப் பொருள்களை இன்பமுடையனவாக ஆக்கக் கவிதையையும் வேண்டுகின்றார்கள். கவிதைதான் இன்ப வாழ்க்கைக்கு உயிர். மக்கள் தங்களுக்கு எந்த எந்தப் பொருள்களால் இன்பம் கிடைக்கும் என்று எண்ணிப் பெருமுயற்சி செய்கிறார்களோ அந்தப் பொருள்கள் சில சமயங்களில் தெவிட்டி விடும். மதுக்கலசத்தை விரும்பாத சமயமும் உண்டு; மங்கையின்பம் சலிக்கும் பொழுதும் உண்டு. இன்ப வாழ்க்கையினிடையே இந்தச் சலிப்பு ஒரு கணம் இருந்தாலும் இடையறவுபட்டு விடும். பிறகு அது இன்ப வாழ்க்கை ஆகாது. ஆதலால் இடையறவுபடாத இன்பத்தை உண்டாக்க ஒரு பொருள் வேண்டும். அதுதான் கவிதை.

மதுநுகர்ச்சியால் வரும் இன்பம் உள்ள பொழுதிலும் அந்த இன்பத்தை மிகுவிக்கக் கவிதை உதவுகின்றது. பெண்ணினிமையை உணரும் செவ்வியிலும் கவிதை அவ்வினிமையை ஒன்று பத்தாகப் பெருக்குகின்றது.

அந்த இன்பத்துக்குச் சலிப்பு இல்லையா?–இல்லை.  ‘என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் நின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மை’ கவிதைக்கு உண்டு. ஆயுந் தொறும் இன்பம் தருவது கவிதை; மனித வாழ்வில் அவனுடைய குறைகளை யெல்லாம் மறக்கவைப்பது கவிதை; உலகத்துப் பொருளின் குறைகளையெல்லாம் அழகுபடுத்திக் காட்டுவது கவிதை. துன்ப நிகழ்ச்சிகளிலுள்ள துன்பத்தை மாற்றி ரஸாநுபாவத்துக்கு உரிய பொருளாக அவற்றை ஆக்கிவிடுவது காவியம்.

உலகில் உள்ள பாலைவனம் சுடுகிறது;  ‘உள்ளின் உள்ளம் வேகு’மென்று மனிதர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் அந்த பாலைவனத்தைக் கவிஞன் தன் காவியத்தில் வருணிக்கின்றான். அவனுடைய சிருஷ்டியாகிய பாலை நிலத்தில் நாம் பலகால் செல்ல எண்ணுகிறோம்; அதோடு நில்லாமல் சென்று சென்று இன்புறுகிறோம்! உலகத்தில் ஈசுவர சிருஷ்டியிலுள்ள பாலைவனத்தின் வெம்மையைப் போக்கி அதற்கு இனிமையை உண்டாக்கிவிடுகிறது கவிஞனது சிருஷ்டி. இதற்காக அவன் புதியதாக ஒன்றையும் செய்து விடவில்லை. உள்ளதை உள்ளபடியேதான் சொல்கிறான். பாலைவனத்தின் வெம்மையைத்தான் தன் காவியத்திலே காட்டுகிறான். கானலை நீரென்று கருதும் மான் உயிர் தேய ஓடுகிறது. மலைபோன்ற உடல் படைத்த யானை ஓய்ந்து போய் மொட்டை மரத்தின் நிழலைப் பெரிதாக எண்ணி அதன் கீழே நிற்கிறது. ஆண் பருந்து மேலே பறக்க அதன் நிழலிலே பெண் பருந்து பறந்து செல்கின்றது. இயற்கையிலே கொடுமை நிறைந்த பாலையில் ஆறலைக் கள்வர் கொடுஞ் செய்கைகளைப் புரிகின்றனர். வழிப்போக்கருடைய உயிரையும் பொருளையும் ஒருங்கே வாங்குகின் றனர். ‘கொள்ளும் பொருள் இலர் ஆயினும்’ முண்டங்கள் துடிப்பதைப் பார்ப்பதிலே அவர்களுக்கு இன்பம். அதற்காக நெஞ்சில் ஈரத்தைத் துடைத்துவிட்டு வழிப்போக்கர் தலையைத் தறிக்கிறார்கள். என்ன கொடுமை! கவிஞனுடைய பாலைவனத்தில் அந்த நில இயல்புகள் எல்லாம் அப்படியப்படியே உள்ளன. அவற்றைப் படிக்கையில் நமக்கு இரக்கம் உண்டாகிறது. ஆனால் அது போலி இரக்கம். உண்மையில் அந்த இரக்கத்தின் அடியிலே இன்ப உணர்ச்சிதான் இருக்கிறது. உலகத்துப் பாலைவனம் கவிஞனது நாவிலே புகுந்து வரும்போது இனிமையைப் பெற்றுவிடுகிறது.

மற்றோர் உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு மடமங்கை தன் நாயகனை இழந்து அழுகிறாள். உலகில் அத்தகைய துர்ப்பாக்கியவதிகளைக் காணும்பொழுது நம் உள்ளம் கரைகிறது. அவளது அழுகை நம்முடைய கண்ணிலும் நீர் சுரக்கச் செய்கிறது. அவள் துக்கத்தை நாமும் பங்கிட்டுக் கொள்கிறோம். இறந்து போனவன் எவ்வளவு கொடியவனாக இருந்த போதிலும் அந்த மெல்லியலாளுக்கு உண்டான பெருந்துயரத்திலே நாம் ஆழ்ந்து போகிறோம்.

கம்பன் சிருஷ்டிசெய்த காவிய உலகத்திலே புகுந்து பார்க்கலாம். ராவணன் ராமன் கை அம்புக்கு உயிர் கொடுத்து மாண்டு கிடக்கிறான். விபீஷணன் பார்த்துக் கதறுகிறான்:

உண்ணாதே உயிர்உண்ணா தொருநஞ்சு சனகிஎனும் பெருநஞ் சுன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்நீயும் சுளப்பட் டாயே!
எண்ணாதேன் எண்ணியசொல் இன்றினிதா எண்ணுதியே எண்ணில் ஆற்றல்
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்தம் பிரளயமே! அமரர் கூற்றே!

கவியைப் படிக்கிறபொழுதே விபீஷணன் கதறுவது நம் காதில் கேட்கிறது.  ‘அண்ணாவோ! அண்ணாவோ!’ என்று சொல்லிப் புலம்பும் புலம்பல் காலத்தைக் கடந்து இடத்தைக் கடந்து இன்று நம் உள்ளத்தின் காதுக்குக் கேட்கிறது. ஆஹா!  ‘அசுரர்கள்தம் பிரளயமே!’ என்ற தொடரில் விபீஷணன் உள்ளத்தின் வேதனையைக் கொட்டி விடுகிறானே!

மண்டோதரி வருகிறாள். உடம்பெல்லாம் சல்லடைக் கண்ணாகத் துளைக்கப்பட்டுக் கிடக்கும் ராவணனைப் பார்க்கிறாள்.

வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்இருக்கும் இடன்இன்றி உயிர் இருக்கும் இடன்நாடி இழைத்த வாறோ!
கள்இருக்கும் மலர்க்கூந்தற் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல்
உள்இருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி!

மரங்களும் மலைகளும் உருக வாய்திறந்து அரற்றும் மண்டோதரியின் புலம்பல் நம் உள்ளத்துக்குள்ளே சென்று உருக்குகின்றது, கண்ணீர்கூடத் துளிக்கிறது. ஆம்; நாமும் அழுகிறோம்.

முன்னே சொன்ன உண்மையான அழுகையை நாம் கேட்கிறபோது நமக்கு வந்த அழுகையும் உண்மையானது. இங்கே மண்டோதரியின் புலம்பலை வாசிக்கும்போது வரும் அழுகை போலி. இந்த அழுகைக்கு அடியில் இன்பம் இருக்கிறது. மெய்யான அழுகையை நாம் மீட்டும் கேட்க விரும்புவதில்லை. அது துன்பத்தை உண்டாக்குவது. காவியத்தில் உள்ள அழுகை மேலும் மேலும் நம்மைக் கவர்கிறது. பல பல தடவை அந்த அழுகையை அணுகி நாம் அழுகிறோம்; சலிப்பில்லாத அழுகை அது. அழுகையை விரும்புவது மாயமந்திர வித்தை அல்லவா? காவியம் அதைத்தான் செய்கிறது. மண்டோதரியின் அழுகை காவியமாக மாற்றப் படும்போது அதன் உருவம் மாறுவதில்லை. ஆனால் அதன் உயிர் மாறிவிடுகிறது; பயன் நேர் எதிராக அமைகின்றது. கசப்பான சுவையுடைய பாகற் காயைக் குழந்தை விரும்புவதில்லை. சர்க்கரையினால் பாகற்காய்போல நிறம் ஊட்டி ஒரு மிட்டாய் பண்ணினால் அதைக் குழந்தை மேலும் மேலும் விரும்புகிறது. மனித உலகத்து அழுகைக்கும் காவிய உலகத்து அழுகைக்கும் உள்ள வேறுபாடு இதைப் போன்றதே.

கவிஞனுடைய சிருஷ்டியிலே பலபல மூலப்பொருள்கள் இல்லை. உலக சிருஷ்டிக்கு ஆதாரமாக 92 மூலப் பொருள்கள் உண்டென்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். எல்லாம் பஞ்சபூதத்தின் விளைவென்று தத்துவநூல் சொல்கின்றது. காவிய உலகத்தில் மூலப்பொருள் இரண்டே: சொல், பொருள். அவற்றைத் தனித் தனியே பிரித்துச் சொல்வதுகூடப் பிழை. சொல் என்றாலே பொருளும் உள்ளடங்கித்தான் இருக்கிறது. சிவமும் சக்தியும் அபேதமாக நிற்பதுபோலச் சொல்லும் பொருளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. சொல் இன்றிக் கவிப் பிரபஞ்சத்தில் பொருள் இல்லை; பொருள் இன்றிச் சொல் இல்லை. இந்த இரண்டைக் கொண்டும் கவிஞன் அமரனைச் சிருஷ்டி செய்கிறான்; அசுரனையும் காட்டுகிறான். அழுகை வருகிறது; அதன்பின் இன்பமும் இருக்கிறது.

நாகரிகப் பண்பு மிக மிக மனிதன் நிரந்தரமான பயனுடைய செயல்களில் ஈடுபடுகிறான். அறிவு கூராக ஆக அவனுக்கு நித்தியத்துவம் வேண்டுமென்ற ஆசை பிறக்கிறது. உடல் மாண்டு போயும் மாளாது நிற்கும் புகழுக்காகப் போராடுகிறான். எல்லாவற்றையும் மறந்து ஒருமைப்பாட்டின் வழியே இன்பந்துய்க்கக் காரணமான கவிதையை நாடுகிறான். அதற்குமேலும் போய்க் கடவுளது அருளாட்சியிலே புகுந்து இறவாத பெருவாழ்வு வாழ விரும்புகிறான். முக்தி இன்பத்தைத் தேடி அலைகிறான்.

இவற்றுள் முக்தி இன்பத்தைத் தேடி ஸர்வ சங்க பரித்தியாகம் செய்வதென்பது எல்லோருக்கும் எளிதான காரியமல்ல. அதற்கு அடுத்தபடியாகக் கவிதையின் மூலமாக மன ஒருமைப் பாட்டையும் இன்பத்தையும் அடையும் வழி ஓரளவு மக்களுக்கு எளிதில் கிட்டும்படி அமைந்திருக்கிறது. கவிஞர்கள் என்றும் மாறாத நண்பர்களாக நம் அருகிலேயே நிற்கின்றனர். மனம் இருந்தால் கம்பனோடு அளவளாவலாம்; திருவள்ளுவரது அறவுரையைக் கேட்கலாம்; இளங்கோவடிகளுடைய சிலம்பொலியை நுகரலாம்.

இந்தக் கவிதை இன்பத்தை முத்தியின்பத்தை விரும்பிய பெரியோர்களும் சிறப்பாகப் பாராட்டியிருக்கிறார்கள். அப்பர் சுவாமிகள் கவிதை இன்பத்திலே மனத்தைச் செல்லவிட்டு யோகத்துயில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அந்த வழக்கம் உடையவர்களது நெஞ்சில் இருள் நீங்கி ஒளி பாயுமாம்; சிவபெருமான் திருவருள் பொலியுமாம். இதை எதிர்மறை முகத்தால் அவர் சொல்கிறார்:

 “சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித்
    தூங்காதார் மனத்திருளை வாங்காதானை”

என்பது அவர் திருவாக்கு. மனத்து இருளை வாங்குவதற்கு ஏற்ற ஒருவகை யோகம் இது. சொல்லிலே பரவிக் கிடக்கும் பொருளை நுகர்ந்து அதன்கண்ணே ஒன்றுபட்டுத் தூங்க வேண்டுமாம். இந்தக் கவிதாயோகம் ராஜயோகம், ஹடயோகம் முதலியவற்றைவிட எளியதுதானே?

உலகம் முழுவதும் கவிதை இன்பத்தை உணர்கின்றது. பாஷையின் வளப்பத்துக்கு ஏற்றபடி கவிதையின் வளப்பமும் பெருகியும் சுருங்கியும் அமைந்திருக்கின்றது. ஒரு மொழியானது பலகாலம் வழங்கி வந்திருந்தால் அம்மொழியில் கணக்கிறந்த காவியங்கள் உண்டாவதும் கவிஞர்கள் பலர் உண்டாவதும் இயல்பே. கன்னித்தமிழ் என்று பாராட்டும் தமிழ்மொழியின் சரித்திரத்திற்கு, ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை.  ‘தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் – இவள் – என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்’ என்று பாரதியார் பாரததேவிக்குக் கூறும் இலக்கணத்தைத் தமிழ்த் தாய்க்கும் சொல்லிவடலாம்.

சிவபெருமானைப்போல இம்மொழியும்  ‘முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றி’யை உடையதாய் விளங்குகின்றது. காவிய இன்பத்தை நுகர்ந்தும் நுகரச் செய்தும் உலகில் விளங்கிய பல பெருங்கவிஞர்களால், வளம்பெற்ற மொழி இது. தெய்வங்களையே தன் திருத்தொண்டர்களாகப் பெற்ற பெருமையுடையதென்று கதைகள் வழங்குகின்றன. காலவெள்ளத்தில் அமிழ்ந்து அழிந்து போகாமல் நிற்பது ஒன்றைக் கொண்டே இது தெய்வத் தமிழ் என்று சொல்லிவிடலாம்.

கண்ணாலே கண்டும் பிற புலன்களாலே நுகர்ந்தும் மனிதன் உணரும் பொருள்களின் இயல்புகளைச் சொல்லாலே சித்தரிக்கும் புலவர்கள் அன்று முதல் இன்று வரையில் தமிழ்நாட்டில் இருந்துவருகிறார்கள். உள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் உருவில்லாத இயல்புகளுக்கு உருக்கொடுத்து உயிரோவியமாக்கிக் காவிய சிருஷ்டி செய்யும் புலவர்கள் பலர் இன்னும் புகழுடம்போடு தமிழ்நாட்டில் நிலவுகின்றனர். அகத்தியர் முதல் பாரதி வரையில் வந்த கவிஞர் பரம்பரை எத்தனை எத்தனையோ அரிய காவியங்களைத் தமிழர்களுடைய பெருந்தனமாகக் கொடுத்து உதவியிருக்கிறது.

நம்முடைய கைக்குக் கிடைக்கும் அருநிதிகளுள் மிகப் பழமையானவை கடைச்சங்க காலத்து நூல்கள். அவற்றைச் சங்க நூல்கள் என்று இப்போது வழங்கி வருகிறோம். பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று மூன்று பிரிவாக அந்த நூல்களைப் பிரித்திருக்கிறார்கள்.

திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்று பத்து நீண்ட பாடல்களும் பத்துப்பாட்டு என்ற தொகுதியில் இருக்கின்றன.

எட்டுத் தொகை என்ற வரிசையில் எட்டு நூல்கள் அடங்கியுள்ளன. அந்த எட்டு நூல்களில் ஒவ்வொன்றும் பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற பெயருடையவை அவை.

கீழ்க்கணக்கு என்பதற்கு அடிப்படையான நூல் என்பது பொருள். அவை பதினெட்டு ஆகையால் பதினெண் கீழ்க் கணக்கு என்று சொல்வார்கள். இந்த வரிசை முன்னே சொன்ன இரண்டு வரிசை நூல்களுக்கும் பிற்பட்டது என்று ஆராய்ச்சியாளர் சொல்வார்கள். மற்ற நூல்களை நோக்க இவை பழமையுடையனவே.

உலகம் போற்றும் திருக்குறள் இந்தப் பதினெட்டு நூல்களுக்குள் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பெரும்பாலான நூல்கள் நீதி நூல்களாகவே இருக்கின்றன. நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை என்ற நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு என்ற வரிசையாக வழங்கப் பெறும்.

சங்க காலத்து நூல்களுக்கும் பிற்கால நூல்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. உள்ளதை உள்ளவாறே சொல்லுவதை அந்த நூல்களிலே காணலாம். இயற்கையின் எழிலை நன்றாக எடுத்துக் காட்டுவது சங்க காலத்துக் கவிதை.  

‘அக்காலத்துப் புலவர்களின் கவிதை இயற்கைத் தாயின் மடியில் தவழ்ந்து, தெய்விகக் காதலிலும் அறந்திறம்பா வீரத்திலும் விளையாடி, சமரஸ நிலையில் வீற்றிருக்கின்றது. கவிஞர்களுடைய சிருஷ்டிகளில், அருவிகள் இடையறாது சங்கீதத்தோடு வீழ்வதும், அதில் மகளிர் துளைந்து விளையாடி இன்புற்று மலர்களைப் பறித்துப் பாறையிலே குவித்து அழகு பார்ப்பதும், நாயகன் ஒருவன் வேட்டையாடிக்கொண்டு வருவதும், அவன் அம்மகளிர் கூட்டத்தில் உள்ள நாயகி ஒருத்தியைக் காண்பதும், இருவர் கண்களாகிய மடைவழியாகப் பாய்ந்த அன்பு வெள்ளத்தில் இருவர் உள்ளமும் கலந்து கரைவதுமாகிய நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். ஏழை இடையன் வீட்டில் பந்தற்காலில் கட்டியிருக்கும் தழையை ஆட்டுக்குட்டி உண்பதும், கடற்கரையிலுள்ள வலையர் தெருக்களில் முத்துக்களைக் கிளிஞ்சிலுக்குள் இட்டுக் குரங்குகள் குழந்தைகளோடு கிலுகிலுப்பை விளையாடுவதும், இடையன் மாலைக்காலத்தில் தன்னுடைய புல்லாங்குழற் கீதத்தினால் பசுக்களை யெல்லாம் ஒன்றுகூட்டி வீட்டுக்கு வருகையில் வழியிலே மலர்ந்துள்ள முல்லைப் பூக்களைக் கொத்தோடு பறித்துத் தலையிற் செருகிக் களிப்பதுமாகிய காட்சிகளைக் காண்கிறோம். அரசர்கள் வித்துவான்களோடு கூடிப் பொழுது போக்குவதும், கால வரையறைப்படி அரசியற் காரியங்களைச் செய்வதும், குடிகளுடைய வழக்கை நடுநிலைமை பிறழாது தீர்ப்பதும், விழாக் கொண்டாடுவதும் ஆகிய காட்சிகளையும் பார்க்கிறோம்.

‘நெடுநாட்களாகத் தீமூட்டப் படாமையால் காளான் முளைத்த அடுப்பும் ஓட்டைக் கூரையும் உள்ள வறுமை நிலையம் ஒரு பக்கம் சித்தரிக்கப்படுகின்றது; பல பண்டங்களை விற்கும் இடங்களில், பகலிற் கொடிகளாலும் இரவில் விளக்குகளாலும் பாஷை அறியாதவர்களும் அறிந்து கொள்ளும்படி இன்ன இன்ன பண்டங்கள் விற்கப்படும் என்பதைக் குறிப்பிக்கும் கடைவீதிகளிலும், அரண்மனைகளிலும் திருமகள் நடனம் புரியும் கோலம் ஒரு புறம் சித்தரிக்கப்படுகின்றது. வீரம், காதல், சோகம் முதலிய ரஸபாவங்கள் அங்கங்கே அமைந்து விளங்குகின்றன’

-என்று சங்கத் தமிழை இக்காலத் தமிழுலகத்துக்கு அறிவுறுத்திய தமிழ் வள்ளலாகிய ஐயரவர்கள் சொல்லுகிறார்கள்.

தமிழனுக்குக் காதலையும் வீரத்தையும் பாடுவதில் ஆர்வம் அதிகம். தமிழ்க் கவிதைக்குப் பொருளாக உள்ளவற்றை அகம் என்றும் புறம் என்றும் இரண்டாகப் பகுத்திருக்கிறார்கள். அகம் என்பது காதல் வாழ்வைப் பற்றியது. ஒரு காதலனும் காதலியும் தாம் அன்பினால் ஒன்றுபட்டு இன்புற்றதை இன்னதென்று மற்றவர்களுக்குப் புலப்படுத்த முடியாத பொருளாகி அகத்துக்குள்ளே உணர்ச்சி யுருவமாக நிற்பதால் இன்பப் பொருளை அகம் என்று சொன்னார்கள். மற்றவற்றையெல்லாம் புறமென்று வகுத்தார்கள். மற்றவை பலவானாலும் அவற்றுள் தலைமை வகிப்பது வீரமே.

இன்னதென்று இன்பம் நுகர்ந்தோர் சொல்ல முடியாததைக் கவிஞன் சொல்லிவிடுகிறான். காதலைக் கதையாக்கி, இன்பத்தை நுகர்வதற்கு முன் காதலனும் காதலியும் சந்திப்பதையும், அவர்கள் உள்ளங்கள் கடல் போலக் கொந்தளிப்பதையும், ஐயமும் மயக்கமும் தெளிவும் உண்டாவதையும் கவிஞன் தமிழ்க் கவிதையிலே கோலம் செய்கிறான். காதலர் ஒன்றுபட்ட பிறகு பிரிவதையும் பிரிவிலே அவ்வுள்ளம் இரண்டும் குமுறிக் குமைவதையும் சொல்கிறான். இந்தக் கதை முடிவின்றி வளர்கிறது. அவர்களுடைய உள்ள உணர்ச்சிகள் உரையாக வருகின்றன. காதலி இன்பத்திலும் துன்பத்திலும் தன் உள்ளத்தைக் காதலனோடும் தோழியோடும் வெளிப்படுத்துகிறாள். காதலனும் காதலிக்கும் தோழிக்கும் தோழனுக்கும் தன் உணர்ச்சியை உரையாக்கிச் சொல்கிறான். சங்கநூல்களில் இந்தக் காதல் கதை – அகப்பொருள் – நாடகக் கவியைப் போலப் பாத்திரங்களின் கூற்றுக்களாகவே அமைந்திருக்கிறது. கவிஞன் அந்தப் பாத்திரங்களாக இருந்து நடிக்கிறான். தன்னைத் தனியே காட்டிக் கொள்வதில்லை.

காதல் உணர்ச்சியின் பல்வேறு உருவங்களையும் நிலைகளையும் அலுக்காமல் சலிக்காமல் ஆயிரக்கணக்கான பாடல்களினால் பாடிக் குவித்தார்கள் சங்க காலத்துப் புலவர்கள். இந்தக் காதல் கதையைச் சில சில அழகான வரம்புக்கு உள்ளாக்கி அவ்வரம்புக்குள்ளே கவிதை வெள்ளத்தைப் பாயச் செய்திருக்கிறார்கள் தமிழர்கள். அதனால் அகப்பொருளைத் தமிழர் தமக்கே உரிய தனிச் சொத்தாகப் பெருமிதத்தோடு சொல்லிக் கொள்வார்கள்.

காதல் நாடகம் படர்வதற்கு நிலைக்களமாக இயற்கையை வைத்திருக்கிறார்கள். இயற்கை எழிலும் பருவ காலங்களும் காதலனும் காதலியும் கொள்ளும் உணர்ச்சிக்கு உதவியாகின்றன. இதற்காக இந்தக் காதலை ஐந்து பிரிவாகப் பிரித்திருக்கிறார்கள்.

  • காதலனும் காதலியும் தனிமையிலே சந்தித்து இன்பம் அடைவது ஒரு பகுதி. இதைக் குறிஞ்சி என்ற திணையாக வகுத்தார்கள்.
  • காதலன் தன் கடமையை நிறைவேற்ற வேண்டிக் காதலியைப் பிரிந்து செல்கிறான். இந்தப் பிரிவைப்பற்றிச் சொல்லும் பகுதியைப் பாலை என்று பிரித்தார்கள்.
  • காதலன் பிரியவே தலைவி தன் பிரிவுத் துன்பத்தை ஆற்றிக்கொண்டு தலைவன் வருவான் என்று அறம் திறம்பாமல் இருக்கிறாள். இது முல்லையாகும்.
  • தன் காதலியுடன் வாழும் தலைவன் காமம் மீதூர்ந்தமையால் பரத்தையரை நச்சிச் செல்லத் தலைவி ஊடலை அடைகிறாள். இது மருதத்தின்பாற் படும்.
  • பிரிவுத் துன்பம் தாங்காமல் தலைவி வருந்துகிறாள். இது நெய்தலென்ற பகுதியில் அடங்கும். இந்த ஐந்துக்கும் தனித்தனியே நிலங்கள் வகுத்திருக்கிறார்கள்.

மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம். காதலனும் காதலியும் இன்புறுவதற்கு ஏற்றது அது. நிலமகளின் பருவ எழிலுக்கு அடையாளம்போல வானத்தைத் தொட்டு நிமிர்ந்து நிற்கும் மலைச்சாரலில் இன்னொலியாடு தாவும் அருவியும் பூம்பொழிலும் உள்ள பரப்பில் தனிமை நிலையில் காதலர் ஒன்று படுவது பொருத்தமானது என்று கண்டு அந்நிலத்தைப் புணர்ச்சிக்கு உரியதாக வைத்தார்கள்.

பாலை நிலம் பிரிவுக்கு உரிய நிலைக்களம். பிரிவு துன்ப உணர்ச்சியை விளைவிப்பது. அதைச் சொல்லும் கவிஞனுக்கு அவ்வுணர்ச்சிக்கு உதவி செய்வதாக ஒரு நிலைக்களம் (Back Ground) அமைந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்! உயிரற்ற பொட்டலாக மரம் கரிந்து புனல் வறந்து மான் கலங்க யானை மயங்கும் பாலைநிலம் வெம்மைக்கு இருப்பிடம். அந்த வெம்மை பரப்பிலே பிரிவுத் தீ பின்னும் வெம் மையை அடைகிறது. ஆதலின் பிரிவைப் பாலை நிலத்திலே வைத்துப் பாடினார்கள் கவிஞர்கள். இப்படியே ஏனையவையும் அமைந்தன.

சிறந்த ஓவியன் ஒருவன் தான் எழுதும் சித்திரத்தின் தலைமைப் பொருளுக்கு ஏற்ற நிலைக்களத்தை அமைத்துக் கொள்வது போலவும், இசைவாணன் தான் பாடும் பாட்டுக்கு ஏற்ற சுருதியை அமைத்துக்கொள்வது போலவும் இந்த நிலங்களும் காலங்களும் உதவுகின்றன.

இப்படிப் பலகாலமாக இயற்கை யெழிலை நிலைக்களமாகவும் காதலன் காதலியரை முக்கிய பாத்திரமாகவும் அவர்கள் உள்ளத்தூடே எழுந்து புரளும் உணர்ச்சி அலைகளைக் கவிக்கு உரிய பொருளாகவும் வைத்துப் பாடிய பாடல்கள் காவிய உலகத்திலே எக்காலத்தும் வாடாமல் பச்சென்று இருப்பவை. தமிழனுக்கு இத்தகைய சொத்து ஒன்று இருப்பதைத் தமிழுலகமே சிலகாலம் மறந்திருந்தது. என்னுடைய ஆசிரியப் பெருந்தகையாகிய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் சங்க நூல்களை வெளிக்கொணர்ந்து துப்புத் துலக்கி மெருகிட்டுத் தமிழர்களுக்கு உதவினார்கள். இன்று தமிழ்நாட்டில் பண்டைத் தமிழர் சரிதமும், பண்டைக் கவிதையின்பமும் தமிழர் உள்ளத்திலே விளையாடுவதற்கு அவர்களுடைய முயற்சியே விதையாகும்.

அப்பெரியாருடைய திருவடிக்கீழ்ப் பல வருஷங்கள் பணி புரிந்து தமிழ் கற்கும் பேறு பெற்றமையால், சங்ககாலக் கவிதையின்பத்தின் சில துளிகளை என் சிறுமதியால் அறிந்து இன்புறும் வாய்ப்பு உண்டாயிற்று. சங்கநூலை நேரே பயின்று இன்புறும் தகுதி யாவருக்கும் இராது. ஆயினும் சங்கநூற் பொருளை உணர்ந்தால் இன்புறுவதற்கு ஒவ்வொரு தமிழனுக்கும் தகுதி உண்டு. ஆகவே சங்க நூலில் உள்ள சில செய்யுட்களைப் புது முறையில் தமிழன்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்ற எண்ணத்தினால்  ‘காவியமும் ஓவியமும்’ என்ற பெயரோடு ஒரு கட்டுரை வரிசையை கலைமகளில் தொடர்ந்து எழுதி வரலானேன்.

காவியம் சொல்லோவியம். அதைப் படிக்கும் பொழுதே உள்ளத்தில் ஓவியக் காட்சி தானே அமைகின்றது. உருவம் இல்லாத பொருள்களையும் உணர்ச்சிகளையும் உள்ளம் உணரும்படி செய்துவிடுகின்றது. காவியத்துக்கு உள்ள பல இயல்புகள் ஓவியத்துக்கும் உண்டு. உலகிற் காணும் பொருள்களின் குறைபாடுகளைப் போக்கி அதற்கு ஓர் அழகை ஊட்டி நித்தியத்துவத்தைத் தருவதில் காவியமும் ஓவியமும் ஒரே நிலையில் இருப்பவை. இரண்டும் வெறும் உருவத்தை மாத்திரம் காட்டுவதோடு நில்லாமல் உணர்ச்சி களையும் காட்டும்போது சிறப்பை அடைகின்றன.

சங்ககாலக் காவிய உலகத்தின் காட்சி ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்திரம். கலைத்திறம் கைவந்த ஓவியர்களுக்குச் சங்கநூல் ஒரு பெரிய களஞ்சியம். வண்ண ஓவியங்களும், புனையா ஓவியங்களும் வரைவதற்குப் பொருள் எங்கே எங்கே என்று தேடவேண்டாம். சங்க நூல்களிலே புகுந்தால் பல்லாண்டுகள் ஓவியம் படைக்கப் பண்டம் இருப்பதைக் காணலாம்.

இந்த நினைவினால் காவியச் சிறப்பை ஓவியத்தாலும் வெளிப்படுத்த வேண்டுமென்ற முயற்சி எழுந்தது. அதற்கு உறுதுணையாக ஓவியர் ஸ்ரீ ராஜம் எங்களுக்குக் கிடைத்தார். இந்திய ஓவியக்கலையில் தேர்ச்சிபெற்ற அவர் காவியத்தின் கருத்தை மனத்திலே பதித்துப் பிறகு அதனைச் சித்திரமாக மாற்றியிருக்கிறார். காவியத்துக்கு ஓவியம் வேண்டுமானால் இந்நாட்டு ஓவியங்களே பொருத்தமாக இருக்கும். நம்முடைய காவியங்களில் குறிப்பினால் பொருளைப் புலப்படுத்தும் முறையை மிக உயர்வாகக் கொண்டாடுவார்கள்.  ‘கடலினும் பெரிய கண்கள்’ என்று கவிதையிலே சொல்லும் போது சீதாபிராட்டியின் உள்ளத்தின் ஆழத்தைப் புலப் படுத்தும் வாயிலாகக் கண்கள் இருக்கின்றன என்றே கருத வேண்டும்.  ‘காதளவு நீண்ட கண்’ என்றால் நாடாவை வைத்து அளந்து பார்த்து,  ‘காதுக்கும் கண்ணுக்கும் இரண்டங்குலம் இடைவெளி இருக்கிறதே!’ என்று குறை கூறலாமா?  ‘கண் நீண்டது, மிக நீண்டது’ என்றுதான் நமக்குச் சொல்லத் தெரியும். கவிஞன் அதைத் தன்னுடைய கவிதை அளவைக் கொண்டு  ‘காதளவு நீண்ட கண்’ என்று சொல்கிறான்.

கவிதையிலே தளிர்போல் மெலிந்த விரல்களையும், கொடிபோல் நுடங்கிய இடையையும் கண்டு அவற்றின் மென்மையை உணர்ந்துகொள்கிறோம். ஆனால் ஓவியத்தில் விரல்களைச் சற்று நீளமாகவும் துவண்டனவாகவும் கண்டால்,  ‘இது இயற்கைக்கு மாறானது!’ என்று சொல்கிறோம். கவிஞன்  ‘தளிர்போன்ற விரல்’ என்று சொல்வதையே ஓவியப் புலவன் சித்திரத்திலே காட்டுகிறான் என்பதை நாம் சற்று ஊன்றிக் கவனித்து உணர்ந்தால் அதையும் அனுபவிக்க முடியும்.

காவிய உலகம் இந்த இயற்கை உலகத்துக்குப் புறம்பானதாக இருந்தாலும், பலகாலும் கேட்டுப் கேட்டுப் பழக்கமாகி விட்டமையால்  ‘இது கவிதை’ என்றும்,  ‘இதைப் பார்க்கும் கண்ணே வேறு’ என்றும் தெரிந்து கொண்டிருக்கிறோம்.  ‘கவிஞனை நம்முடைய உலகத்துப் புழுதியிலே இழுத்து வந்து காண முடியாது. கவிஞனது உலகத்திலே நாம் புகுந்து பார்த்து இன்புறவேண்டும்’ என்றே அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்திய ஓவியக்கலையும் காவியத்தைப் போலத் தனக்கென ஒரு தனி உலகத்தை உடையது. கண்ணினாலே காணப்படும் பொருளை உள்ளது உள்ளபடியே  போட்டோப் படமாகக்  காட்டுவதைவிட உணர்ச்சியையும் கருத்தையும் புலப்படுத்தும் சில வகைக் குறிப்பினாலே காட்டவேண்டும் என்பது ஓவியப் புலவனது நெறி. நாம் நம் நாட்டுக் கலையை மறந்துவிட்டோம். அதனால் அது புதிதாகவும் இயற்கைக்கு மாறாகவும் படுகிறது. சப்பளம் கூட்டி உட்காரும் கிராமத்துக் குழந்தைகளைக் காணும்போது முழு உறை போடும் பட்டணத்து உத்தியோகஸ்தன்,  ‘ஐயோ! இந்தக் குழந்தைகளை இப்படி உட்காரவைத்துச் சித்திரவதை செய்கிறார்களே!’ என்று எண்ணுகிறான். அந்த இளங்குழந்தைகளைக் கேட்டால்  ‘பூமகளாகிய அன்னையின் மடியில் இப்படி உட்காருவதுதான் எங்களுக்கு இன்பத்தைத் தரும்’ என்று சொல்லுவார்கள்.

இந்திய ஓவியம் உள்ளுறை பொருளோடு நிற்பது. அதுதான் அதற்கு உயிர். இந்த நாட்டுச் சிற்பமும் ஓவியமும், கோலமும் கூத்தும், காவியமும் புராணமும் இந்தக் குறிப்புப் பொருளை உடையனவாக இருப்பதனால்தான் பிற நாட்டினருக்கு விளங்காத புதிர்களாக உள்ளன. அவர் களுக்கு விளங்காதது தவறல்ல. நமக்கே விளங்கவில்லை என்றால் நாம் திருந்த வேண்டுவதை விட்டு அவற்றை இகழ்வது நியாயமாகுமா?

தமிழ்க் காவியத்துக்கு ஏற்ற தமிழ் ஓவியத்தை அன்பர் ராஜம் வரைந்து தந்தார். அவர் எழுதிய ஓவியங்களின் அழகைப் போகிற போக்கில் விளம்பரப் படங்களைபோலக் கண்டு நுகரமுடியாது. காவியத்திலே ஆழ ஆழ இன்பம் பெருகுவதுபோல, இந்த ஓவியங்களிலே ஆழ்ந்து நின்றால் இவற்றின் சிறப்புப் புலப்படும்.

இதில் உள்ள பதினெட்டுக் கட்டுரைகளில் பதினாறு காதற் சித்திரங்கள். பின் இரண்டும் வீரச் சிறப்பைப் புலப்படுத்துவன. எட்டுத் தொகையிலிருந்து நான்கும், பதினெண் கீழ்க் கணக்கிலிருந்து மூன்றும் ஆக ஏழு நூல் களிலிருந்து எடுத்த பாடல்கள் இதில் உள்ளன. இவற்றைப் போல நூற்றுக் கணக்கான பாடல்கள் உண்டு.

கூடிய வரையில் கட்டுரைகளை வெவ்வேறு தோரணையில் எழுத முயன்றிருக்கிறேன். பாடல்களில் உள்ள சொற்கள் கட்டுரையினூடே வரும்படியாக வருணனைகளையும் கூற்றுக் களையும் பொருத்தியிருக்கின்றேன்.

கலைமகளில் இக்கட்டுரைகள் வெளியானபோது பல அன்பர்கள் இவற்றைப் பாராட்டினார்கள். அந்தப் பாராட்டே இவற்றைத் தொகுத்துப் புத்தக உருவத்தில் வெளியிடத் தூண்டியது. ஆதலின் அவர்களுக்கு என் நன்றி உரியது.

காவியத்துக்கு ஏற்ற ஓவியங்களை வரைந்து உதவிய ஸ்ரீ ராஜத்துக்கு வெறும் நன்றியுரை சொன்னால் மட்டும் போதாது. தமிழ் நாட்டார் இந்திய ஓவியத்தின் சிறப்பை நன்கு உணரும் காலம் வரும். அப்போது ராஜத்தின் ஓவியங்கள் வாடாமலராக இருந்து மணம் வீசும் என்பதில் சந்தேகம் இல்லை. இனி வரும் தமிழுலகத்தினர் நான் இப்போது அவர்பாற் காட்டும் நன்றியுணர்வைக் காட்டிலும் பல மடங்கு விரிந்த நன்றியைக் காட்டுவார்கள். அந்த்ப் புகழ் அவருடைய முயற்சிக்கு ஏற்ற பயனாக இருக்குமென்ற நம்பிக்கையினால் அவரை நான் வாழ்த்துகிறேன்.

இங்ஙனம்
கி. வா. ஜகந்நாதன்.

$$$

Leave a comment