உருவகங்களின் ஊர்வலம்-67

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #67...

67. எல்லா இடங்களிலும் கிறிப்டோக்கள்!

மறைந்து நின்று போரிடுவதில் வல்லவன் க்ரிப்டோ மாயாவி.

முதலில் பட்டமரத்தின் பின்னால் வெறிச் சிரிப்பு கேட்கும்.

சட்டென்று கூர் அம்பு ஒன்றை அதன் மீது பாய்ச்சுவீர்கள்.
மரத்தைப் பிளந்து அது வீழ்த்தும்.

எரியம்பைப் பாய்ச்சினால்
மரம் பற்றியெரியக்கூடச் செய்யும்.

ஆனால், அடுத்ததாக,
இல்லாமலே இருக்கும் திராவிட ஆகாயத்தில்
அந்த ஆணவச் சிரிப்பு கேட்கும்.

ஏனென்றால்,
நீங்கள் எய்த அம்புகளினால் பட்டமரம்தான் அழிந்திருக்கும்
க்ரிப்டோ மாயாவி அழிந்திருக்க மாட்டான்.

திராவிட ஆகாயத்தை நோக்கி
அம்பறாத்தூளி காலியாகும்வரை அம்பெய்வீர்கள்.
வானம் முழுவதும் சர மழையால் பற்றி எரியும்.

ஆனால்
அடுத்ததாக, ஆகம கோபுரத்தின் பின்னால் இருந்து
அரக்கச் சிரிப்பு கேட்கும்.

இப்போது நீங்கள்
இரண்டு முறை தோற்ற ஆவேசத்தில்
ஆகம கோபுரத்தை நோக்கி அஸ்திரங்களை எய்வீர்கள்.

பரிசோதனை எலிபோல் உங்களை அவன் பயிற்றுவித்துவிட்டான்.

உங்கள் ஆயுதங்கள் உங்கள் கைகள்
ஆனால்,
நீங்கள் எங்கு எய்ய வேண்டும் என்பதை அவனே தீர்மானிப்பான்.

எவையெல்லாம் அவனை வீழ்த்துமோ,
அதன் பின்னால் எல்லாம் சென்று மறைந்துகொள்வான்.
அங்கிருந்துகொண்டே அரக்கச் சிரிப்பு சிரிப்பான்.

நீங்கள் அவனை அழிப்பதாக நினைத்து
உங்கள் காப்பரண்கள் மீதே அம்பெய்வீர்கள்.

மாயாவியுடனான போரில் வெல்ல வேண்டுமென்றால்
மாயாவியைப் போல் சிந்திக்க வேண்டும்.

வெறிச் சிரிப்பு கேட்கும் திசையை நோக்கியெல்லாம்
அம்புகளை எய்யக் கூடாது;
அவன் அங்கு இருக்கவே மாட்டான் என்பதுதான்
அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம்.

மாயமாக மறைந்து தாக்கும் கலை தெரியாமல் இருப்பதில் தவறில்லை.
மாயாவி எங்கிருப்பான் என்பதையே தெரிந்துகொள்ளாவிட்டால்
ஒரு பயனும் இல்லை.

அம்புகள் முகத்தைக் குறிவைக்க வேண்டும்
முகமூடிகளை அல்ல.

புதரைச் சுற்றி அடித்தால் பாம்பு சாகாது-
தடி தான் உடையும்.

திராவிடத்தை எதிர்த்தால் க்ரிப்டோ அழியாது.
ஊழலை ஒழித்தால்
சிறுபான்மைப் போர்வையிலான வல்லாதிக்க ஒட்டுண்ணிகள் அழியாது.
கடைக்கோடி கிராமத்துக்கும் சாலை வசதி வந்தால்
கடைக்கோடி கிராமத்தின் வளமும்
அதன் வழி சுரண்டவே படும்.

அது சரி…
நம் நிலத்தில் உதிக்கும் சூரியனே போலி என்றானபின்
உதிர்ந்த இலைகளையும்
மலராத மலர்களையும்
கசக்கும் கனிகளையும்
பற்றிச் சொல்ல என்னதான் இருக்கிறது?

இங்கு பச்சை என்பது வளமை அல்ல.
இங்கு வெண்மை என்பது தூய்மை அல்ல;

சுற்றுலா மையங்களாகிவிட்ட புண்ய க்ஷேத்ரங்களில்
கொடியில் பறக்கும் காவிகள் எல்லாம் ஆன்மிகமல்ல.

எதிரிகளில் க்ரிப்டோக்கள் இருந்தாலே
எதிர்ப்பது கடினம்.

எல்லா இடங்களிலும் இருந்தால்..?

$$$

Leave a comment