உருவகங்களின் ஊர்வலம் -64

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #64...

64. இந்தப் பாடல் ஒருபோதும் முடிவுறாது

(1)


ஒரு சாய்வு நாற்காலியில்
அமர்ந்துகொண்டிருப்பது போலவேதான்
எரிமலையின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறேன்.

என் தலைக்குப் பின்னால் தென்படும் ஒளிவட்டம்
ஒளியாலானது அல்ல;

என் கண்களில் தென்படும் ஈரம்
எஞ்சி நிற்கும் இறுதிச் சொட்டு கண்ணீரேதான்.

(உங்களுக்கு அது என் கண்களை
நீரில் நீந்தும் குதூகல மீனெனக் காட்டுகிறது.
நீருக்கும் மீனுக்கும் எவ்வளவு இதமான பந்தம், இல்லையா?)

முகத்தில் தென்படும் மினுமினுப்பு
இளம் தீயில் வாட்டப்படும்போது ஏற்படுவதுவே.

மயிர்க்கால்கள் தொடங்கி,
சதை, நரம்புகள்,
ரத்த நாளங்கள், சிவப்பு வெள்ளை அணுக்களினூடாக
மரபணுவையும் தாண்டி
அடி ஆழத்து ஆன்மாவரை சுட்டுப் பொசுக்குகிறது.

ஆன்மா தீயால் வேகாது என்பது உண்மையல்ல;
எந்த உடலில் இருக்கிறதோ அந்த உடலின் அனுபவங்கள்
ஆன்மாவில் நிச்சயம் அழுத்தமாகப் பதியவே செய்யும்.

நம்புங்கள்.
அழிக்க முடியாததாக இருக்கலாம்.
அசைக்க முடியாததாக இருப்பதில்லை.

வெறும் அசைவு அல்ல;
நெருப்பிலிடப்படும் பசுந்தளிர்
சுருண்டு கருகித் துடிப்பது போல நெளியும்.

ஆன்மாவுக்கு அழிவு கிடையாது என்பதால்
அனலிடைப்பட்ட அதன் தளிர் நடனம்
முடிவற்றதாகவும் நீடிக்கும்.

அழிவின்மை எனும் பெரு வரம் பெரும் சாபமாகும் தருணம்
ஓர் உடல் கருகிச் சாம்பலாகும் தருணத்தினும்
ஓராயிரம் மடங்கு கொடியது.

*

உண்மையை
உங்களிடம் சொல்லியிருக்கலாம்தான்…
இரண்டு காரணங்கள் தடுத்துவிட்டன.

முதலாவதாக,
உங்கள் காலடியில்
உங்களுடைய செல்ல எரிமலை தகித்துக் கொண்டிருக்கிறது
(சிலருக்குப் பெரு வெள்ளம்,
சிலருக்குப் புயல்,
சிலருக்கு நில நடுக்கம்
வகைகள் மாறினாலும் பேரிடரில் மாற்றமில்லை).

ஆண்டவர் இந்த விஷயத்தில் நம்மை
என்றும் ஆள்பவரே.

அனைவருக்கும்
அவரவருக்கான பேரிடரை
அளந்து அளந்து தந்தவண்ணம் இருக்கிறார்.

உங்கள் பேரிடர் உங்களுக்கு.
என் பேரிடர் எனக்கு.

இரண்டாவது காரணம்
என் எரிமலைக்குள் உங்களால்
எட்டிப் பார்க்கவே முடியாது

ஒரு மென் துகில்
என் எரிமலையை
உங்கள் பார்வையில் இருந்து மறைத்துவிட்டிருக்கிறது.

*

நான் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதுபோலவே
படு ஹாயாக அமர்ந்துகொண்டிருக்கிறது மானுடம்.

பரிணாம அனுபவங்களின் கொதிநிலைக் குழம்பு
பாதாளத்துக்குள் குமிழியிட்டுக் கொண்டிருக்கிறது.

முதலும் முடிவும் இல்லாத காலவெளியில்
கடந்த காலக் குழம்பா, எதிர்காலக் குழம்பா,
ஏதோவொன்று கொதித்துக் கொண்டேயிருக்கிறது
நம் பேரிடர்களைப் போலவே.

பிண்டம் போன்றதுதானே அண்டம்!
பிண்டங்களால் ஆனதுதானே அண்டம்?

ஒரு பிண்டம்
தன்னையே அண்டமாகக் கருதிக்கொள்ளும் மாயை அகன்று
அண்டத்தின் பிரமாண்டத்தை உணரும்போது
ஏற்படும் உணர்வு என்னவாக இருக்கும்?

காலடி நிலத்தினுள் கொதிக்கும் எரிமலைதான்
உலகம் முழுவதும் ஓடுகிறது என்னும் புரிதல்
எல்லையற்ற மலரிதழ்களாக
முடிவற்ற மழைத்துளிகளாக
கோடி கங்குகளை உடம்பில் தூவும்.

பேரொளியில் இருந்து பிரிந்து வந்த பூமிக்குள்
பெருந்தீதானே தகிக்க முடியும்?

அஹம் பிரம்மாஸ்மி
மம அக்னி மஹா அக்னி
அஸ்மாக(ம்) அக்னி பிரம்மாக்னி?

*

போர்வெறிக் கூச்சல்களினூடேதானே
பேரன்பின் வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன

மாளாத் துயரப் பெருவழிச் சாலையின்
இரு மருங்குகளில்தானே
மலர்ந்து உதிர்கின்றன நம் காதல் மலர்களெல்லாம்

விண் முட்டும் வளங்களின் மாளிகைகள் எல்லாம்
வியர்வைச் சாந்து கொண்டுதானே எழும்பி நிற்கின்றன.
ஒளியின் பிரகாசம் இருளாலேயன்றோ?

ஆலய முற்றங்களில் சிந்தும்
பக்தர்களின் கண்ணீரையும் குருதியையும் பார்த்தபடி
உறைந்து நிற்கும் தெய்வங்கள்
அபிஷேக காலங்களில் அழுதுகொள்வார்களாக இருக்கும்.

நமக்கு அதுதானே
ஆன்மிகப் பெரு எழுச்சி நல்கும் தருணங்கள்!

*

தென்றலில் ஆடும் கிளைபோல
பனிக்குட நீரில் மிதக்கும் சிசுபோல
ஆடிய காலம் ஒன்றிருந்தது.

தூளியில் இட்டுத் தாலாட்டப்பட்ட காலம் ஒன்றிருந்தது.
மடியில் இருத்தி முலையூட்டப்பட்ட காலம் ஒன்றிருந்தது.

மேலே மேலே வெகு உயரத்தில்
கிலிகிலுப்பை ஒலி எழுப்பியது.

இடை இடையே
தெய்வத்தின் மலர்ந்த முகம் தென்பட்டது.
இனிமையான தாலாட்டுப் பாடல்
மெள்ளக் கண்களைச் செருகச் செய்தது.

அழுத அடுத்த நொடி அமுது கிடைத்தது.

தூங்கு குழந்தாய் தூங்கு.
இந்த உலகம் விழி திறந்து பார்க்க ஏற்றதல்ல என்று
தாலாட்டிச் சீராட்ட
இப்போதும் ஏன் இல்லை ஒருவர் நமக்கு?

தளிர் பாதங்கள் பதியும் தகுதி இந்தத் தரைக்கு இல்லை
என்று இடுப்பில் ஏந்தியவர் எங்கே போனார்?

காலடி நிலம் தகிக்கிறது
தாங்கிப் பிடித்த தாய் மடி எங்கே…
தாலாட்டிய தூளி எங்கே?

அழுத போதெல்லாம் அலறி அடித்து ஓடிவந்து
முலை ஊட்டிய அவளுக்கு ஏன் தெரியாமல் போனது
எவ்வளவு வேகமாகப் பருகுகிறதோ
அவ்வளவு வேகமாக
இந்தக் குழந்தை தூளி விட்டு இறங்கவேண்டியிருக்கும் என்று.

அவள் கை பற்றி நடந்த குழந்தை
தானாக எடுத்து வைக்கும் காலடி
தன்னிடமிருந்து பிரிக்கும் பெருவழிப் பயணத்தின்
முதல் காலடியென்பது
அவளுக்குத் தெரியாமல் போனதேன்?

தாயைப் பிரிந்த குழந்தை.
கடவுளைப் பிரிந்த உலகம்.

ஆரம்பித்த உடனே நின்றுபோய் அதன் பின்
கேட்கவே போகாத தாலாட்டுக்கு ஏங்கும் செவிகள்தானா
கடைசிவரையான வாழ்க்கை?

பெரு வெடிப்பில் முளைத்து
கருந்துளைக்குள் அடங்கும் நம் அகிலம்
நம்மைப் போலவே கைவிடப்பட்ட குழந்தையேதானா?

ஆதி தர்ம காலம் மட்டுமே
ஆனந்தமயமாக இருந்ததுதான் அதன் தலைவிதியுமேவா?

(2)

மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கச் செய்வதுதான்
ஒரே இலக்காக இருக்கிறது.

மரபின் கயிறுகளைக் கொண்டு கட்டிப்போட்டதோ,
தோல் உரிந்து சதை பிளந்து
குருதி கொப்பளிக்கவைக்கும் சாட்டையடிகளோ,
உப்பரிகையில் அமர்ந்தபடி
சவக்களை பொருந்திய முகத்தில்
க்ரூரப் புன்னகை தோன்ற ரசிப்பதோ,
எதுவுமே கலங்க வைக்கவில்லை

ஆனால், ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்…
நான் ஆருயிராக நேசிப்பவர் மட்டுமல்ல,
என்னை ஆருருயிராக நேசிப்பவருமானவரின் கையிலேயே
அந்தச் சாட்டையைக் கொடுத்து அடிக்கச் செய்திருக்கும்
உன் சாமர்த்தியம் என்னைக் கொஞ்சம்போல
நிலைதடுமாற வைக்கத்தான் செய்கிறது.

புன்னகையின் அளவை அதிகரித்துக்கொள்ள வேண்டாம்.

என் வேதனையின் கேவல்களை
உணர்வெழுச்சிப் பாடலாக மாற்றிக்கொள்ள
எனக்குத் தெரியும்.

என் வலியின் கூக்குரல்களை
அழகிய வரிகளாக ஆக்கிக்கொள்ள எனக்குத் தெரியும்.

மண்டியிடாதது மட்டுமல்ல;
சாட்டை அடிகளையெல்லாம்
பாடலாக மாற்றிக்கொள்ளும்
என் வீரியம் கண்டு உன் கண்களில் கொப்பளிக்கிறது-
ஆதி வேட்டை விலங்கின் அளவற்ற வெறி.

முதலில் ஒரு விளையாட்டாகத்தான்
இதை ஆரம்பித்திருந்தாய்…
எளிதில் வென்றுவிட முடியும் என்ற இறுமாப்பு
மதர்த்த முலைகளைப்போல திமிறிக் கொண்டிருந்தது.

என்னைப் போல் எத்தனையோ பேரைப் பார்த்தவள்
என்ற திமிர் உன் நாளங்களில் ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால்,
என்னைப் போல எத்தனை பேரைப் பார்த்திருந்தாலும்
என்னை எதிர்கொள்வது இதுவே முதல் முறை என்பது
உனக்குப் புரிந்த தருணமே
நான் வெற்றி பெறத் தொடங்கிய தருணம்.

புன்னகை இடம் மாறத் தொடங்கிவிட்டது
என் இனிய எதிரியே…

உன் ஆயுதக் கிடங்கிலிருந்து ஆவேசத்துடன்
இன்னொரு சாட்டையை வீசினாய்…

பளபளக்கும் கூர் ஆணிகளாலான சாட்டை.

அதை என் ஆருயிர்க் கரங்கள்
சுழற்றி அடித்ததில் பக்கத்து மரத்தூணின் சிலாம்புகள்
தெறித்துப் பறந்தன.

என் சதை கிழித்து குருதி பெருக்கெடுக்கச்
செய்தவற்றையெல்லாம்விட
பெரும் கிலியை அடி வயிற்றில் அதுவே கிளப்பியது.

வேடிக்கைதான் இல்லையா…
உடம்பு அனுபவித்த வலிகளைவிட
அனுபவிக்க நேரும் என்று நினைப்பவை ஏற்படுத்தும் கிலி
அதிகமாக இருக்கும் அதிசயம்.

எப்படியும் அது உடம்பைப் பதம் பார்க்கத்தானே போகிறது?

ஆனால், அன்புக்குரிய எதிரியே…
நீ மீண்டும் தவறு செய்கிறாய்…
இந்தக் கால்கள் உன் முன் ஒருபோதும் மண்டியிடாது.

குருதி வற்றும்வரை
இந்தப் பாடல் ஒருபோதும் முடிவுறாது.

ஏனென்றால், நீ மோதுவது என் உடம்புடன் அல்ல…

தவறாக எழுதிவிட்ட வேதனை விதியை ஈடுகட்ட
தெய்வாதி தெய்வம் இறுதி நொடியில் சுதாரித்து
இயன்ற சக்தி முழுவதையும் கொடுத்து உருவாக்கிய ஆன்மா.

புரிகிறதா இயற்கையெனும் சூனியக்காரியே…
தெய்வம் தன் முழு சக்தியையும் குவித்து
உருவாக்கிக் கொடுத்த ஆன்மாவுடன் நீ மோதுகிறாய்.

வெட்டுப்பட்ட மரம்போல
முழு உடம்பும் மண்ணில் முறிந்து விழுந்தாலும்
இந்தக் கால்கள் மண்டியிடாது.

அடுத்த ஆயுதத்தை நீ தயார் செய்துகொள்.

உன் முன் ஒருபோதும் மண்டியிடவே போகாத கால்களில் இருந்து பெருகிய குருதி
நிலத்தில் சிறு நதியாகப் பாயத் தொடங்குகிறது.

(அதில் தென்படும் உன் பிம்பம் மெள்ள நடுங்குவது எனக்குத் தெரிகிறது).

உன் உடம்பிலிருந்து ஒரு துளி உதிரம் சொட்ட வைக்காமலே
உன்னை வீழ்த்தப் போகும் போர் இது.

இதன் வெற்றி ஆதியிலேயே தீர்மானமானது…

எப்படி என்று குழம்புகிறாயா?

பெருகி வழியும் குருதியில் வீசும் தாய்ப்பாலின் வாசம்
நாசிகளை எட்டுகிறதா?

அத்தனை ஆயுதங்களையும்
அது வெல்லுமன்றோ

அத்தனை போர்களையும்
அதுவே வெல்லுமன்றோ?


$$$

Leave a comment