-ஓகை நடராஜன்
அண்மையில் தமிழில் வெளியாகி உள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம், உறவுகளின் உன்னதத்தைப் பறைசாற்றுகிறது. அதுகுறித்த சிறு அறிமுகம் இங்கே...

சில படங்களை விமர்சிக்க முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும். மெய்யழகன் திரைப்படம் அப்படி மிக அழகான படமாக வந்திருக்கிறது. எண்ணங்களை எழுப்பி, உணர்வுகளை உசுப்பி, அறிவின் நுனிகளை அணுகி, இரண்டு மணி நேரம் கட்டிப் போட வைக்கும் ஒரு படம் அண்மையில் வந்திருப்பது வியப்பும் மகிழ்ச்சியுமான ஒரு கலவை.
படத்தில் கதை என்பது மீச் சிறியது. அதுவும் கதையின் பெரும்பகுதி ஓர் இரவில் மட்டுமே நடக்கிறது. ஏராளமான, தொடர்ச்சியான, இடைவிடாத வசனம் அந்த இரவில் படத்தை தூக்கி நிறுத்துகிறது. இருக்கையில் சற்றே தளர்ந்து, தலைசாய்ந்து, அனுக்கமானவர்கள் உடனிருக்க, கொரித்துக் கொண்டே நிம்மதியாக பார்க்கும்படிக்கு காட்சிகளை செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.
கதை தஞ்சைத் தரணியில் நடக்கிறது. ஒரு டெல்டாக்காரன் என்ற முறையில் எனக்கு அதற்குரிய ஓர் ஈடுபாடு உடனே பற்றிக் கொண்டு விடுகிறது. படம் பார்க்கும் டெல்டாக்காரர்கள் பலருக்கும் உடனே ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதல் கூட வந்திருக்கும். அதிலும் ஓரிரண்டு பேர் அதைச் செய்தும் இருப்பார்கள் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு தஞ்சைத் தரணியின் தாக்கம் படத்தில் விரவி இருக்கிறது. வழக்கமான படங்களைப் போல சண்டை இல்லை; கனவுக் காட்சிகள் இல்லை; காதல் இல்லை; வில்லன் இல்லை; ஏன் கதாநாயகி கூட இல்லை. படம் முழுவதும் இரண்டு நாயகர்கள் மட்டுமே!
ஒரு குடும்பச் சண்டைக் காரணமாக தஞ்சாவூர் விட்டு சென்னைக்குப் புலம் பெயர்ந்துவிட்ட ஒருவனின் (அரவிந்த்சாமி) அதன் கசப்பான அனுபவங்கள் அந்த ஊர்ப் பக்கம் அவனைச் செல்ல விடாமல் வைத்திருக்கிறது. அவனுடைய அன்பிற்கினிய சித்தியின் மகள் திருமணத்துக்கு போக வேண்டிய ஒரு நிர்பந்தத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊருக்கு அருகில் நீடாமங்கலத்துக்கு வேண்டாவிருப்பாக வருகிறான். அங்கே இவனுடைய அனுபவங்கள் வித்தியாசமாக, வேறுபாடாக இருக்கின்றன. இவனைக் கண்டு அன்பொழுகப் பேசும் முன்னாள் முறைப்பெண் அந்தச் சூழலை அவனுக்கும் படம் பார்க்கும் நமக்கும் உணர்த்துகிறாள். படம் மெதுவாக நம்மை உள்வாங்கத் தொடங்குகிறது. இவன் வருகையால் மகிழ்ந்த இவன் தங்கையான மணப்பெண், இவனிடம் காட்டும் ஆழ அகலமான வாஞ்சை ஆரம்பத்தில் சற்று அதீதமாகத் தோன்றினாலும் அப்படிப்பட்ட வாஞ்சை எல்லாம் இருக்கத்தான் இருக்கிறது என்று அழுத்திச் சொல்லும் படம், அப்போது நம்மை முழுதாக உள்வாங்கிவிடுகிறது.
இதன் பிறகு பெயர் , உறவு என்னவென்று தெரியாமல் ஒருவன் (கார்த்தி) வந்து மிக உரிமையோடு ‘அத்தான், அத்தான்’ என்று உறவாடும் காட்சிகள்தான் படத்தையும் நம்மையும் ஆக்கிரமிக்கின்றன. அத்தனை உரிமையோடு உணர்வாற்றும் அவனைத் தெரியாத குற்ற உணர்வும், விடிந்ததும் எங்களை பெயர் சொல்லி வாழ்த்த வேண்டும் என்ற அவனின் அன்புக் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமே என்பதற்காகவும் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு வந்துவிடுகிறான். பிறகு இவனை அந்த ஊரில் நிகழ்ந்த அத்தனையும் பன்மடங்கு பன்மடங்கு ஆட்படுத்தி இயல்பு நிலையை பாதித்துவிடும் நிலையில் இயக்குநர் சிறப்பான காட்சிகளால் படத்தை இனிதே முடிகிக்கிறார்.
ஆரம்பத்தில் பேருந்தில் வரும்போது நடத்துநருக்கு கொசுறாய் ஒரு பழம் கொடுத்துவிட்டுச் செல்லும் ஒரு பாட்டி, முன்னாள் முறைப் பெண், திருமண வரவேற்பில் தங்கை, பிறகு இந்த உறவுக்கார பையனின் மனைவி, ஊரை விட்டுப் போகும்போது கோயிலில் பூ விற்கும் ஒரு பெண் – இந்த ஐந்து பேரும் தான் படத்தின் பெண் பாத்திரங்கள். ஆனால் இவர்களின் பங்களிப்பு மிகவும் சிறிது. படம் முழுவதும் வியாபித்து இருப்பது நாயகனும் அவனுடைய உறவுக்கார பையனும் தான். இவர்களுடன் தன்சைத் தரணியின் மண்ணும் மரங்களும், குளமும் கோயிலும், வயலும் வாய்க்காலும், ஆறும் ஆனையுமாக இந்தப் படத்தில் பின்புலமாக இயங்கும் போது அந்த மண்ணின் வாஞ்சையை அப்படியே இயக்குநர் அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
இப்படம் திரையரங்கில் இல்லாமல் வீட்டில் பார்க்க மிகவும் ஏற்றதொரு படம்.
இந்தப் படம் எனக்கு இரண்டு அன்பு கட்டளைகள் விடுகிறது.
ஒன்று, இந்த படத்தை மீண்டும் பார்க்க வேண்டும்.
இரண்டு, எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்போது ஊருக்கு போய் விட்டு வந்து விட வேண்டும்.
நன்றி மெய்யழகா!
$$$