-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #62...

62. ஆமாம், நான் பெருமை மிகு திராவிடர்!
செம்பொன் சிலை மீது சேற்றைப் பூசியது
சிறு மதியாளர் கூட்டம்…
வெகுண்டெழுந்த சிலை வணங்கிக் கூட்டமோ
சேற்றைப் பூசியவன் மீதான கோபத்தை
செம்பொன் சிலை மீது காட்டத் தொடங்கியது!
சேற்றில் புரளும் கும்பல் உள்ளுக்குள் சிரிக்கிறது.
அன்புக்குரிய சிலை வணங்கிகளே,
சேற்றைக் கழுவி நீக்கிவிட்டு
செம்பொன் சிலை மீட்டெடுங்கள்.
*
பாரதம் அழகிய வதனம்…
திராவிடம் அதன் அழகிய நெற்றி…
தமிழகம் அதன் நறுமணத் திலகம்….
போலித் திராவிடம் மீதும்
க்ரிப்டோ திராவிடம் மீதும் உள்ள கோபத்தை
உண்மை திராவிடம் மீது காட்டுவது,
தன் கையாலே கண்ணைக் குத்திக்கொள்வது போன்றது.
தன் அடையாளத்தைத் தானே அழிப்பது போன்றது.
திராவிடம் என்றால் தட்சிண பாரதம்.
எதிரி அதை தனி இனம் என்றான்.
தனி இனம் இல்லை என்பதுதான் பதிலே தவிர,
திராவிடனே இல்லை என்பது அல்ல.
சனாதன தர்மத்தவர் என்பதும்
அகண்ட பாரதவாசி என்பதும் பண்பாட்டுப் பேரடையாளம்….
இந்துஸ்தானி என்பது ராஷ்டிர அடையாளம்…
திராவிடன் என்பது தென்னவர் என்ற அடையாளம்…
தமிழர் என்பது மொழி வழி அடையாளம்…
இந்து என்பது தர்ம வழி அடையாளம்…
இன்ன ஜாதி என்பது குல வழி அடையாளம்….
அத்தனையும் நமக்கு
ஆன்ற பெருமைதரும் அடையாளங்களே!
இதில் எந்தவொன்றும் நமக்குப் பகையில்லை…
இதில் எந்த ஒன்றும் நமக்கு இழிவில்லை.
நாம் இந்துவே…
நாம் இந்தியரே…
நாம் தமிழரே…
நாம் திராவிடரே….
சோற்றுப் பானைக்குள் பன்றி வாய்வைத்துவிட்டது என்பதற்காக
சோற்றுப் பானையை உடைக்கத் தேவையில்லை….
சோற்றையே வெறுக்கவும் தேவையில்லை.
பன்றியை அடித்து விரட்டினால் போதும்.
ஆனால்,
அதைத் தவிர அனைத்தையும் செய்கிறோம்.
$$$