-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #59...

59. அந்தப் பறை எப்போது முழங்கும்?
தேரோடும் திருவீதியில்
திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பள்ளத்தில் சிக்கிக்கொண்டு
நடு வீதியில் நின்றுகொண்டிருக்கிறது
நான்கு சக்கரத் தேர்.
இதற்கு முன்னும் இதுபோல சிக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அப்போதெல்லாம்
இந்தத் தேருக்கு ஏற்ற மண் பாதையே
தேரோடும் திருவீதியில் இருந்தது.
எங்கெல்லாம் பள்ளம் ஏற்படும்;
எப்படி அதைத் தவிர்க்க வேண்டும்;
பள்ளத்தில் விழுந்தால்
எப்படித் தேரை எழுப்ப வேண்டும் என்பதெல்லாம்
எல்லாருக்கும் தெரிந்திருந்தது.
தூரத்துப் பள்ளங்களை
முன்கூட்டியே கண்டுகொள்ள முடியும் வகையில்
மேலே இருப்பவர்கள் வழிகாட்டுவார்கள்;
வேகத்தைக் கூட்டியும் குறைத்தும்
வழிநடத்துபவர்கள் அதன் படி நடப்பார்கள்;
முரசறைந்து இழுக்கச் செய்பவர்கள்
அதன்படிச் செய்வார்கள்;
முரசுச் சத்தம் கேட்டதும்
தளர்த்திய தேர்வடத்தைத் தூக்கி இழுப்பவர்கள்
அதன்படி இழுப்பார்கள்.
அந்தத் தேர் நான்கு வீதிகளில் ஓடியது;
நன்றாகவே ஓடியது.
மூலவரின் கண் பார்வைக்கு
முன்னால் இருந்து புறப்படும் உற்சவர்,
உற்சாகமாக ஊர்வலம் வந்தபின்
மூலவரின் முன்னால் வந்து
நிற்க வேண்டும் என்பதே இலக்கு.
அதாவது,
எங்கிருந்து புறப்பட்டோமோ
அங்கேயே சென்று சேர வேண்டும்.
பள்ளத்தில் விழுந்த நாளில்
அத்தனை பேரும் பரிதவித்துப் போயினர்.
மண் சாலை மாற்றியமைக்கப்பட்டு
நவீன தார்ச்சாலை போடப்பட்டிருந்தது.
நவீனத் தார்சாலையில்
விழுந்த பள்ளம் விசித்திரமானது…
விபரீதமானது.
மண் தரையென்றால்
மரக்கட்டைகள் போட்டோ
மண்ணை மேடாக்கியோ
சக்கரத்தை மேலே இழுத்துவிட முடியும்.
நவீனத் தார்ச்சாலையில் விழுந்த பள்ளமோ
முன் பாதி சக்கரத்தை விழுங்கிவிட்டது.
எவ்வளவு வேகமாக
எவ்வளவு வலுவுடன்
அத்தனை பேரும் ஒன்று கூடி இழுக்கிறார்களோ
அவ்வளவு ஆழத்தில்
அழுந்திக்கொண்ட வண்ணம் இருக்கிறது.
புதிய பிரச்னைகளுக்கு
புதிய தீர்வுகள் தானே தேவை?
புதிய தலைவர்கள் வந்து,
பின்பக்கமாகச் சிறிது இழுப்போம்.
தேர் சம தளத்துக்கு வந்துவிடும்.
பள்ளத்தைச் சரி செய்துகொண்டு
முன்னோக்கிப் போகலாம் என்றார்கள்.
தேரின் மேலே இருந்தவர்கள் மட்டுமல்ல;
அத்தனை பேருமே அதைக் கேட்டு அலறிவிட்டனர்.
தேரைப் பின்னோக்கி நகர்த்துவதா?
கூடவே கூடாது என்று குரல் எழுப்பினர்.
ஆனால், வேறு வழி இருந்திருக்கவில்லையே.
பரிவட்டம் கட்டிக்கொண்டிருந்தவர்
முதலில் சம்மதித்தார்;
பட்டு வேஷ்டிகள் கட்டிக் கொண்டிருந்தவர்கள்
அதன்பின் சம்மதித்தனர்;
பல்லக்கில் வந்தவர்கள்
ஒவ்வொருவராக சம்மதித்தனர்;
இறுதி மயில் பீலியாக
தேரின் மேலே இருந்தவர்களில் ஒருவரும் சம்மதித்தார்.
தேரின் மேலே இருந்த மற்றவர்கள்
அதிர்ந்துபோய் ஆவேசத்துடன் தடுத்தனர்.
கீழே சில முக்கியஸ்தர்கள் சம்மதித்தபின்,
மேலே இருக்கும் ஒருவரும் சம்மதித்த பின்,
மேற்கொண்டு நடப்பதை யாரால் தடுக்க முடியும்?
ஆனால், தேர்வடம் தொட்டிழுத்தவர்கள்
இறுதிவரை தடுத்தனர்.
அவர்களிலும்
முதலில் நான்கு பேர் சம்மதித்தனர்;
பின்னர் நாற்பது பேர்;
பின்னர் நானூறு பேர்.
எறும்பு ஊற ஊறக் கல் தேய்ந்தது.
பின்னால் இழுக்கக்கூடாதென்று நினைத்த
நாலாயிரம் பேர்
நினைத்ததோடு நின்றனர்.
இழுக்க வேண்டும் என்று முடிவு செய்த
நானூறு பேர்
நடத்திக் காட்டவும் செய்தனர்.
சிந்தையைவிட செயலே வலியது அன்றோ
இப்போது தேரைப் பின்னால் எப்படித் தள்ளுவது?
வடங்கள் எல்லாம் முன்னால் அல்லவா இருக்கின்றன!
அத்தனை வடங்களையும் அறுத்து எடுத்து
அவசர அவசரமாகப் பின்னால் கட்டினர்.
தேரைப் பின்னால் இழுக்கும்படி
ஆலோசனை சொன்னவர்,
அடுத்ததாக இன்னொன்றும் சொன்னார்.
தேரை இழுக்கச் சொல்லி முரசறையவென்று
சில மனிதர்களை நியமித்திருப்பது பெரும் பாவம்;
தேரோடு தொடர்புடைய
அத்தனை பேரிலிருந்தும்
அத்தனை திருப்பணிகளில் இருந்தும்
‘தள்ளிவைக்கப்பட்டிருக்கும்’ அவர்களை
முதலில் ’கைதூக்கிவிட வேண்டும்’.
அதற்கான ஒரு புதிய எந்திரம்
நமக்கென்று கண்டுபிடித்துத் தந்திருக்கிறார்கள்
நம் மீதும் காருண்யம் கொண்டவர்கள்
என்று சொல்லி தானியங்கி பஞ்ச வாத்திய முரசொன்றை
தன்னிகரற்ற தேரின் உச்சியில் கட்டினார்கள்.
(அதன் நவீன இசை அத்தனை கம்பீரமாக இருந்தது;
ஆனால் அதன் விபரீதம் பின்னால் தான் புரிந்தது.
புரிந்தபோது எல்லாம் கைவிட்டுப் போயிருந்தது).
தேர் வடத்தைப் பின்னால் கொண்டுவந்து கட்டினார்கள்.
பஞ்ச வாத்தியம் முழங்க ஆரம்பித்தது.
தேர் பள்ளத்தில் இருந்து
சம தளத்துக்கு சீக்கிரமே வந்தும்விட்டது.
ஆனால்…
ஆனால்…
இசைக்க ஆரம்பித்த புதிய வாத்தியத்தை,
சமதளம் வந்ததும் நிறுத்திவிட்டு
வடங்களை முன்பக்கம் கட்டி,
வழக்கம்போல இழுக்க ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஆனால்…
ஆனால்…
முழங்க ஆரம்பித்த பஞ்ச வாத்தியம்
முடிவற்று முழங்கிக் கொண்டே இருக்கிறது.
அதை நிறுத்த யாரும் முன்வரவில்லை.
அதை நிறுத்த யாராலும் முடியவும் இல்லை.
ஏனெனில்-
அதன் ஸ்விட்ச் நம்மவர் கைகளில் இல்லை.
எனவே, அது
முடிவற்று முழங்கிக் கொண்டே இருக்கிறது.
முரசொலி முழங்குவது நின்றாலே,
தேர் வடம் தொட்டு இழுப்பவர்கள் நிறுத்துவார்கள்.
தேர் வடம் தொட்டு இழுப்பவர் நிறுத்தினாலே,
தேரைச் சரியான திசையில் இழுக்க முடியும்.
இரண்டும் நடக்கவில்லை.
பின்னோக்கி இழுபட்ட தேர் முதலில்
அக்ரஹார வீடுகளை இடித்துத் தள்ளிப் பின்னேறியது.
அதன் பின் அரண்மனைகளை இடித்துத் தள்ளியது;
அதன் பின் மாட மாளிகைகளை இடித்துத் தள்ளியது;
அதன் பின்
யானை கட்டிப் போரடித்த களத்து மேடுகளை இடித்தது;
அதன் பின் பட்டறைகளை இடித்தது
அதன் பின்
நீர் வற்றாத வண்ணார் துறைகளைத் தகர்த்தது;
அதன் பின்
கருவறையின்றிக் காவல் காத்து நின்ற
குல தெய்வ பீடங்களைத் தகர்த்தது.
பின்பக்கம் வடம் பூட்டப்பட்ட தேர்
பின்பக்கமாகத் தானே ஓட முடியும்.
பின்பக்கமாக ஓடும்போது
கண்ணில் எதுவுமே தென்படவும் செய்யாதே.
இழுப்பவர்கள்,
தேர் நில்லாமல் இழுபடுவது கண்டு
இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
பஞ்ச வாத்தியம்
முடிவற்று முழங்கிக் கொண்டே இருக்கிறது.
பின்பக்கம் வடத்தைப் பூட்டாதீர்கள்
என்று கெஞ்சியவர்
மேலே பேயறைந்ததுபோல் அமர்ந்திருக்கிறார்.
முன்பு தேர்வடம் அவர் முன்னால் இருந்தது.
இழுத்த மக்கள் திரள் அவர் முன்னால் இருந்தனர்.
இப்போது அவர் முன்னால்
தாங்க முடியாத வெறுமை…
தவிர்க்க முடியாத சூன்யம்…
அற நிலையத் துறையின் பிடியில்
சிக்கிச் சிறைப்பட்ட தெய்வம் போல
திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார்.
உற்சவத் திருமேனி
பார்க்கும் திசையில்தான்
அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், உற்சவரே இன்று
உற்சாகமின்றிக் கிடக்கிறார்.
தீப ஆராதனைகள் எல்லாம் இப்போது அவரின்
பிருஷ்ட பாகத்துக்குக் காட்டப்படுகின்றன.
மலர் மாலைகள் எல்லாம்
முதுகுக்குச் சார்த்தப்படுகின்றன.
தர தரவென
பின்பக்கமாக இழுத்துச் செல்லப்படும் உற்சவரும்
பாவம் திரும்ப வழியின்றி
திக்கற்று நின்று கொண்டிருக்கிறார்.
எதை இழுக்கிறோம்;
ஏன் இழுக்கிறோம்;
எங்கு இழுத்துச் செல்லவேண்டும்
என்பது தெரியாமல்
இழுப்பதே ஆனந்தம் என்று ஆகிவிட்டால்
இப்படித்தானே ஆகும்?
*
ஸ்வாமி தேரின் நிலை இதுவென்றால்
அம்மன் தேரின் நிலையோ அதைவிடப் பரிதாபம்.
அதுவும் அதற்கென்று வெட்டப்பட்ட
அதல பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது.
அம்மன் தேர் பள்ளத்தில் விழுந்ததும்
மேலே இருந்தவரை முதலில்
கீழே வரச் சொன்னார்கள். அதாவது,
கீழே இறக்கினார்கள்.
சின்னஞ்சிறிய உடல் கொண்ட
அவருடைய எடையால்தான்
சிக்கிக்கொண்டது பள்ளத்தில் என்று
யார் முதலில் சொன்னார் என்பது தெரியவில்லை.
ஆனால், அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
பள்ளத்தில் விழுந்த சக்கரத்தை
எந்தத் திசையில் தள்ளுவதென்று
பலர் கூடிப் பேசினார்கள்.
ஒவ்வொருவரும்
சக்கரத்தையும் பள்ளத்தையும்
அவரவர் இருந்த இடத்தில் இருந்து பரிசீலித்துவிட்டு,
அவரவருக்கு உகந்த ஒரு திசையைச் சொன்னார்கள்.
ஒருவர் காலம் காலமாகத் தேர் செல்லும் திசை கிழக்கு…
எனவே கிழக்கு திசையில் தள்ளவேண்டும் என்றார்.
இன்னொருவர் கால மாற்றத்துக்கு ஏற்ப
மேற்கு திசையில்தான் தள்ள வேண்டும் என்றார்.
இன்னொருவர் வடக்கென்றார்
இன்னொருவர் வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது;
எனவே தெற்குப் பக்கமே இழுக்க வேண்டும் என்றார்.
இறுதியாக,
பரிவட்டம் கட்டிக் கொண்டவரிடம் கேட்டார்கள்.
அவர் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
எனவே…
ஒவ்வொரு தரப்பினரும்
ஒவ்வொரு பிரதிநிதியை அனுப்புங்கள்.
ஓர் ஓலையில் எழுதி குடத்தினுள் போடுவோம்.
தெய்வத்தைக் கும்பிட்டுவிட்டு ஒரு சிறுமி
ஓலையை எடுத்துத் தரட்டும்.
அந்த திசையிலேயே அனைவரும் இழுப்போம் என்றார்.
மரபான வழியென்று என்று
மக்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
ஆனால்,
பழைய பொன்னிறக் குடத்துக்குப் பதிலாக
நவீன வெளிறிய வெள்ளைக் குடம் கொடுக்கப்பட்டது.
அந்தக் குடத்தில் நடுவில்
கண்ணுக்குத் தெரியாத ஒரு தகடு பொருத்தப்பட்டிருந்தது.
அனைவரும் எழுதிப் போடும் ஓலைகளை
அதில் போட்டுக் குலுக்கியதும் அவை
அதன் அடியில் சென்று தங்கிவிடும்.
பரிவட்டம் கட்டியவர் எழுதிப் போட்ட ஓலை மட்டுமே
பக்குவமாக மேலே வந்து நிற்கும்.
அவர் விரும்பிய திசையான மேற்கு என்பதை எழுதி
அவரும் குடத்தில் போட்டிருந்தார்.
குடத்தில் மாயத் தகடைப் பொருத்தியதற்கு
சற்றும் சளைக்காத தந்திரமே
பரிவட்டம் கட்டியவரை மேற்கு திசையென்று எழுத வைத்ததும்.
அதாவது, மேற்கு என்று எழுதுபவரையே
மேலே கொண்டுவந்த தந்திரம்;
விரும்பிய ஓலையை மேலே வரச் செய்வதுபோல
விரும்பிய நபருக்குப் பட்டம் கட்டிய தந்திரம்;
ஒட்டுமொத்த மக்கள் குலங்களையுமே
ஒன்றுக்கும் ஆகாத ஓலையாக்கிய தந்திரம்…
பரிவட்டம் கட்டியவரே
தந்திரக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட
தக்கை ஓலையைப் போலென்றால்,
மற்ற குடவோலைகளைப் பற்றி வேறென்ன சொல்ல?
ஒருவழியாக குழந்தை பக்தி சிரத்தையுடன்
ஓர் ஓலையை எடுத்துக் கொடுக்க,
குழந்தையைவிட்டே அதைப் படிக்கச் சொன்னார்
பண்பிற் சிறந்த பரிவட்டம் கட்டியவர்.
யார் யாருக்கு என்னென்ன விருப்பங்கள் இருந்தாலும்
அனைவரும் கூடி ஒரு முடிவெடுத்துவிட்டால்
அதற்கு ஆண்டவரும் கட்டுப்பட வேண்டும்;
ஆள்பவரும் கட்டுப்படவேண்டும் அல்லவா?
அப்படியாக,
அனைவரும் அம்மன் தேர் சக்கரத்தை
அதல பள்ளத்தில் இருந்து மீட்க ஆரம்பித்தனர்.
பரிவட்டம் கட்டியவர் எப்படித் தன் கொள்கையில் உறுதியானவரோ
மற்றவர்களும் அதுபோல தம் கொள்கையில் உறுதியானவர்களே.
விபரீதம் புரிகிறதா?
அவரவர் எந்த திசையில் தள்ளத் தீர்மானித்திருந்தனரோ
அந்தப் பக்கமே தள்ள ஆரம்பித்தனர்!
கிழக்குப் பக்கம் ஒருவர் தள்ள,
மேற்குப் பக்கம் இன்னொருவர் தள்ள,
தெற்குப் பக்கம் ஒருவர் இழுக்க,
வடக்குப் பக்கம் ஒருவர் இழுக்க
தேர் சக்கரம் அணுவளவும் அசையாமல்
அந்தப் பள்ளத்துக்குள்
ஆணி அடித்தாற்போல் விழுந்து கிடக்கிறது.
ஆனால்
உற்சாகத் தள்ளு முள்ளு மட்டும்
ஒருநாளும் குறையவில்லை.
யார் பக்கமேனும்
அரை அங்குலம் நகர்ந்துவிட்டால்,
அவர்கள் பக்கம் ஆர்ப்பாட்டம், அமர்க்களம், ஆனந்தம்…
அடுத்த கணமே அதன் எதிர்ப்பக்கத்தினர் ஆவேசத்துடன்
அவர் பக்கம் இழுத்து
அந்தப் பக்கம் அதே ஆனந்தம்… அமர்க்களம்… ஆர்ப்பாட்டம்…
அனைவருடைய சக்தியையும் செலவிடப்பட்ட பின்னும்
அந்த அம்மன் தேர்
அன்று விழுந்த பள்ளத்திலிருந்து
அணுவளவும் நகராமல் முடங்கிக் கிடக்கிறது.
வெற்றி முரசுகளும்
வீர முழவுகளும் ஒலிப்பது நிற்கவே இல்லை.
தேர் சக்கரம் நகரவே இல்லையென்றாலும்
யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றுக் கொண்டேதானே இருக்கிறார்?
ஸ்வாமி தேர்
ஊர் முழுக்கத் தகர்த்தபடி
உருண்டுகொண்டிருக்கிறது.
அம்மன் தேர்
ஆணி அடித்தாற்போல் உறைந்து கிடக்கிறது.
செயற்கை மின்னூட்டம் பெற்ற
பஞ்சம வாத்தியங்கள் முடிவற்று ஒலிக்கும்வரை
இந்தத் தேரோட்டத் திருவிழாக்கள்
இப்படியே பெரும் உற்சாகத்துடன்
பெரும் ஆரவாரத்துடன்
பின்னோக்கிய திசையில் நடந்துகொண்டே இருக்கும்.
நமக்குப் புரிய வேண்டிய உண்மைகள் இரண்டு:
ஒன்று:
பஞ்சம வாத்தியத்தின் ஸ்விட்ச் நம் கையில் இல்லை.
இரண்டு:
பஞ்சம வாத்தியத்தின் ஸ்விட்சை இயக்கும் கைகள்
பஞ்சம வாத்தியத்துக்கு ஏற்ப இயங்கும்
நம்மையும் சேர்த்தே இயக்குகின்றன.
ஸ்விட்சின் பொம்மை பஞ்ச வாத்தியம்;
பஞ்ச வாத்தியத்தின் பொம்மை நாம்.
பஞ்ச வாத்தியத்தின் மீதான நம் பக்தி
அதை இயக்கும் கைகளின் தந்திரத்துக்கு
நம்மைப் பலியாக்கிவிட்டது.
எவ்வளவு திட்டமிட்ட துல்லியத் தாக்குதல் பாருங்கள்.
பிரமாண்டத் தேரையும்
அதை இத்தனை காலம் இழுத்த
அதைவிடப் பிரமாண்ட மக்களையும்
ஒற்றை ஸ்விட்ச் மூலம் உருக்குலைத்துவிட்டார்கள்.
தேரோட்டத்தின் விதியைத் தீர்மானிக்க வேண்டுமா?
பஞ்ச வாத்தியத்தைக் கைப்பற்று;
குடவோலை முடிவைத் தீர்மானிக்க வேண்டுமா;
குடத்தைக் கைப்பற்று.
*
முன்பு முரசறைந்தவர்கள்
ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்;
நவீன பஞ்ச வாத்தியங்களால்
முதன்முதலில் ஓரங்கட்டப்பட்ட
அவர்களுடைய முரசுகள் தொய்ந்து விட்டன.
அணையப் போகிற தீப்பந்தத்தில்
அதைச் சூடேற்றிக்கொண்டு
ஆதி சக்தியின் கரம்
அதை என்றைக்கு அறையப்போகிறதோ
அன்றைக்கே அனைவருடைய உடம்பிலும்
ஓர் அதிர்வு ஊடுருவும்.
அதுவே
தேரை எங்கு இழுத்துச் செல்ல வேண்டும்…
எப்படி இழுத்துச் செல்ல வேண்டும்…
எதற்காக இழுத்துச் செல்ல வேண்டும்
என்பதை எல்லோருக்கும் புரியவைக்கும்.
மூலவரின் முன்னால் வந்துதானே தீர வேண்டும்
உற்சவர்களின் எல்லா தேர்களும்.
அந்தப் பறை
என்றைக்கு, எங்கு, யாரால், ஒலிக்கப்படப் போகிறது?
தெய்வத் திருமேனியின் கையில்தான் அது இருக்கிறது.
ஒரு ருத்ர தாண்டவத்தின் முடிவாக,
இன்னொரு ருத்ர தாண்டவத்தின் தொடக்கமாக
அது உரிய காலத்தில் ஒலித்தாக வேண்டும்.
ஓம்
ஓம்
ஓம்.
$$$