-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #57...

57. தவம் செய்ய பக்தர் தயாரா?
செங்கொடி ஏற்றியதால் சினம் கொண்டு
குடிசைக்குத் தீவைத்துக் கொன்ற கைகளுக்கு
விடுதலை வாங்கித் தந்த கால்கள்
அந்த ஆல்பத்தில் இருக்காது.
(காரிலேயே போய் வருபவர்கள் கால் வலிக்க
தீப்பந்தம் ஏந்திச் சென்றிருப்பார்களா என்று
பகுத்தறிவு பேசியவர்களின் கால்கள் அவை).
ஊருக்கு ஒதுக்குப்புறங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி
ஊர் குடிகளை அழிக்கும் துரோக
உடன்பிறப்புகளின் கால்கள்
அந்த ஆல்பத்தில் இருக்காது.
காசு கொடுத்து வாங்கிய பட்டத்தைக் கேலி செய்ததால்
கண்மாய்க்குள் அழுத்திக் கொன்ற கால்கள்
அந்த ஆல்பத்தில் இருக்காது.
அமிழ்தினும் ஆற்ற
சிறுகை அளாவிய கூழ் உண்ட கரங்களாலே
வாய்க்கரிசி போடப்போன கால்களும்
அந்த ஆல்பத்தில் இருக்காது.
தாய்மொழிக் கல்வியை சருகாக்கி மிதித்துச் சென்ற
கான்வென்ட் ஷூ கால்கள் இருக்கும்
கலைவாணி மையத்துக்குள்
காலணி கழற்றிவிட்டு நுழைந்த கால்கள் இருக்காது.
கைத்தடியால் வாரிவிடப்பட்டு
குப்புற விழும் கால்களின் படம்
அந்த ஆல்பத்தில் இருக்கவே இருக்காது.
மூத்திரச் சட்டியை
முச்சந்தியில் வைத்து எட்டி உதைத்த கால்களும்
அந்த ஆல்பத்தில் இருக்காது.
(அது இருந்திருக்க வேண்டும்)
வாரிசு அரசியலை எதிர்த்தவரின் விலாவில்
எட்டி உதைத்து வெளியே தள்ளிய கால்கள் இருக்காது.
கள்ளத் தோணியில்
கால் தடம் பதியாமல் சென்று திரும்பி
கூழைக் கும்பிடு போட்டு
குனிந்து நிற்பவனின் கால்களும் இருக்காது.
தீக்குளித்துச் செத்த தொண்டனின்
இறுதிச் சடங்குக்குச் சென்று திரும்பிய
சாம்பல் படிந்த கால்களும் இருக்காது.
முள்ளி வாய்க்கால் சோகம் தாங்காமல்
தீக்குளித்த தொண்டனின்
ஊர்வலத்துத் தியாகப் பூக்களை
மிதித்துச் சென்ற பூட்ஸ் கால்களும் இருக்காது.
கூலி உயர்வு கேட்டுப் போராடியவர்களின்
குரல்வளையை மிதித்த
கறுப்புக் கால்கள் இருக்காது.
நீதி கேட்டுப் போராடியதால் அடித்துக் கொன்று
நீச்சல் தெரியாமல் இறந்தாக
கதை கட்டிய கால்கள் அதில் இருக்காது.
நடந்த கோரத்தை
மெளனமாகச் சொல்லாமல் சொல்லும்
வீதியெங்கும் அறுந்து சிதறிக் கிடந்த
காலணிகளின் சித்திரம்
அதில் இருக்கவே இருக்காது.
எப்படி இருக்கும்?
ஒரு சொட்டு போலியோ மருந்து கொடுக்காத
பெருமூடர்களின் அலங்கோல ஆட்சியினால்
முடமாகிய கால்களை மறைத்துக் கொள்பவர்களின்
அந்தரங்க ஆல்பத்தில் இவை எப்படி இருக்கும்?
எம் கால்களை ஏன் முடமாக்கினீர்கள் என்ற
அறச்சீற்றம் கொள்ள முடியாமல்
நான்கு சுவர்களுக்குள் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு
நட்சத்திரங்களைப் பார்த்துக் கண்ணீர் சிந்தும் ஆன்மாக்களுக்கு
ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்ல முடியாமல் போனதற்கு,
அந்த அறையின் நடுவில்
பிறை நிலா போல மின்னும் சக்கரம் கொண்ட நாற்காலி
நம் இனத்தின் குருதி கொட்டிய சாலையில்
உருண்டுதானே இலாகா பிச்சை எடுக்கச் சென்றது என்பதை
நினைவுறுத்திக் கொண்டிருப்பதுதானே காரணம்?.
எந்தத் துப்பறிவாளனின் உருப்பெருக்கியினாலும்
கண்டுபிடிக்கவே முடியாத வகையில்
காலடித் தடமே பதியாமல்
உருண்டு செல்லும் சக்கர நாற்காலியையே
காலாகக் கொண்டவர்களின் ஆல்பங்களில்
கொலைகாரக் கால்களின் படம் எப்படி இருக்கும்?
ஆனால் வரலாற்றின் ஹால் ஆஃப் பேமில்
இந்தக் கேடு கெட்ட கால்களின் ஆல்பம்
மிக மிகத் தெளிவாக,
கண்ணிருப்பவர்கள் எல்லாம் பார்க்கும்படியாக,
கால் உள்ளவர்கள் எட்டி உதைக்கும்படியாக,
காட்சிப்படுத்தப்பட்டுத்தான் இருக்கிறது.
*
ஒற்றைச் சிற்றெரும்புகூட மிதிபட்டுவிடக் கூடாதென்று
உதிர்ந்த மயிலிறகுகளால்
உலகம் முழுவதும் விசிறிச் சென்ற
தர்மவான்களின் கால்கள் நம்முடையவை.
பிரபஞ்ச நடனத்தை
ஒரு கால் ஊன்றி
மறு கால் தூக்கி ஆடிக்காட்டும்
கால்கள் நம்முடையவை
கருநாகக் காளிங்க வம்சத்தின்
நஞ்சு முழுவதையும் கக்கவைத்து
நடனமாடும் கால்கள் நம்முடையவை.
அரக்கர் கோனின் தலையை
அதல பாதாளத்துக்குள் அழுத்தும்
கால்கள் நம்முடையவை.
பாம்பணை விட்டிறங்கி
பாற்கடல் விட்டு நீங்கிக்
காலடி எடுத்து வைக்கப்போகிறது.
பரமனின் பனை ஓலைக்குடை
செல்லரித்துவிடவில்லை.
சூரியனையே ஒளிந்துகொள்ளவைக்கும்
பிரம்மசாரியின் தேஜஸ். …
தர்ம விரோத ஆச்சார்யனின்
கண்ணைக் குத்தும் கூர்மை…
தர்ப்பைப் புல்லுக்கு
இன்றும் இருக்கிறது
அரக்கர் கூட்டத்தின் காலடித் தடத்தில்
தேங்கிய குருதிப்படலம்
மெள்ள அதிர்வது தெரிகிறதா?
அஸ்தமனத்தின் உதயம்
ஆரம்பித்துவிட்டது.
அரக்கனை
அவன் போலி கிரீடத்துடன் அழுத்தும்
அந்தக் காலடியின் சித்திரம்
உங்கள் மனக்கண்ணில் விரிகிறதா?
ஒவ்வொருவர் மனதிலும் அந்தக் காலடி
ஓங்கி உயர்ந்தாக வேண்டும்.
அழுத குழந்தைக்கே பால் கிடைக்கும்…
அபயம் கோரும் பக்தருக்கே
அவதார தரிசனம் கிடைக்கும்.
வரம் தர தெய்வம் தயார்!
தவம் செய்ய பக்தர் தயாரா?
$$$