-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #56...

56. பனிமலையின் சிறு நுனி
அனைத்து இடங்களிலும் ஊடுருவியிருக்கும் க்ரிப்டோக்கள்
ஆலயத்தை மட்டும் விட்டு வைத்திருப்பதாக
அசடுகள்தான் நம்பும்.
அதனால்
நாம் நம்புகிறோம்.
*
நாம் அபிஷேகத்துக்குத் தரும் பாலில்
நம் கொழுப்பு கலந்திருக்கிறது.
நாம் ஏற்றும் கற்பூரங்களில்
மெழுகுத் துகள் கலந்திருக்கிறது.
கருவறைக்குள் நுழைந்துவிட்ட மெழுகின் புகை
நம் தெய்வங்களுக்கும் நமக்கும் இடையில்
விரிக்கிறது மெல்லிய சாம்பல் திரையை.
காலப்போக்கில் அதன் கனம் கூடும்.
நம் தூபக்கால்களில் தூவப்படுவது
நம் மலினத்தின் மரத்துகள்களே.
ஊர் கூடி இன்று நாம் இழுப்பது
நம் தர்மத்தின் தேரை அல்ல.
நம் பங்குக்கு நாம்…
க்ரிப்டோக்கள் பங்குக்கு க்ரிப்டோக்கள்.
*
ஒரு மசூதிக்குள் ஒரு அரசியல்வாதி புகுந்து
பாலின சமத்துவ கோஷம் முழங்க முடியாது.
ஒரு பாவமன்னிப்புக் கூண்டுக்குள்
பாதிரியாரின் இடத்தில்
பாதிரியாரிணியை உட்காரவைக்க முடியாது.
ஆனால்,
நாத்திக நயவஞ்சகன் பேரில்
நம் ஆலயக் காசில் வடித்துக் கொடுக்கும் தெவசச் சாப்பாட்டை
நக்கித் தின்ன நமக்குக் கூச்சமே இல்லை.
அங்கு செய்ய வேண்டியவற்றைக் கூடச் செய்ய முடியாது
இங்கு எத்தனை அவமதிப்பென்றாலும்
எந்த எதிர்ப்பும் எழாது.
*
பெருமாள் கோயில் பிரசாதத்தில் கலப்படம் என்றால்
பெருமாள் பக்தர் கலங்கலாம்.
நாம் ஏன் கலங்குகிறோம்?
திருக்கோயில்களை திருடர் கூட்டத்திடம் ஒப்படைத்திருக்கிறோம்…
ஆலயக் குடிகள் அத்தனை பேரையும் அடித்து விரட்டியிருக்கிறோம்…
ஆகமங்கள் அனைத்தையும் அத்துமீறியிருக்கிறோம்…
சோம வாரம் சிவனுக்கானது…
செவ்வாய் முருகனுக்கானது…
வியாழன் குருவுக்கானது…
வெள்ளி அம்மனுக்கானது…
சனி பெருமாளுக்கானது..
அத்தனை நாட்களும் அசைவம் தவிர்த்த
முன்னோரின் விரத ஆகமம் இன்று
முழுவதுமாகக் கைவிடப்பட்டுவிட்டது.
டாப் டென் கோயில்களில்
தங்க மோதிரங்கள்,
வைரக்கடுக்கண்கள் மின்ன,
பெருந்தொந்தியுடன் இருக்கும்
பார்ப்பனக் குருக்களை இகழ்ந்து ஏசுவோம்.
ஒற்றை பக்தர் வராத போதும்
ஒரு நாள் பூஜை கூட முடக்காமல்
அன்போடு உருகி அகம் குழைந்து
ஆகமமும் காக்கும் அர்ச்சகர்களுக்கு
ஒரு நாளும் உரிய மரியாதை தரவும் மாட்டோம்.
தியாகங்களைப் போற்றத் தெரியாதவனுக்கு
குறைகளைச் சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?
*
நம் ஆசிரியர்களில் இல்லாத கலப்படமா?
நம் கல்வியில் இல்லாத கலப்படமா?
நம் மருத்துவர்களில் இல்லாத கலப்படமா?
நம் மருந்துகளில் இல்லாத கலப்படமா?
நம் அரசியல்வாதிகளில் இல்லாத கலப்படமா?
நம் அரசியலில் இல்லாத கலப்படமா?
நம் கலைகளில் இல்லாத கலப்படமா?
நம் உணவில் இல்லாத கலப்படமா?
நம் ஆன்மாவில் இல்லாத கலப்படமா?
*
பாரம்பரியக் கல்வியில் முதலில்
பரங்கிகளின் பாடங்களைக் கலப்படம் செய்தார்கள்…
முன்னோர்களின் மூலிகைத் தோட்டங்களில்
ஊடுபயிராக ஒட்டுண்ணிகளைப் பயிரிட்டார்கள்….
காவி தேசக் கொடியில்
இரண்டு நிறங்களைக் கலப்படம் செய்தார்கள்…
தர்மச் சக்கரத்தின் ஆரக்கால்களை
ஒவ்வொன்றாகப் பிரித்தார்கள்…
செங்கோலைப் பேழைக்குள் வைத்து
சிவப்பு நாடாவால் கட்டிப் போட்டார்கள்…
பிரசாதத்தில் கலப்படத்தை
வெகு பிந்தியே செய்திருக்கிறார்கள்…
அல்லது
வெகு பிந்தியே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
*
காதும் காதும் வைத்தாற் போல
சரி செய்திருக்க வேண்டிய ஒன்றை
ஊர் முழுக்க தம்பட்டம் அடிப்பதன் பின்னால்
உள்ள தர்க்கம் புரியவே இல்லை.
அறியாமல் பிரசாதம் உண்ட
அத்தனை பக்தர்கள் மனதையும்
இதுதானே அதிகம் புண்படுத்துகிறது?
க்ரிப்டோக்களை அம்பலப்படுத்துகிறீர்களா?
நல்ல தொடக்கம்.
அருமையான அதிரடி.
அடுத்ததாக,
கல்வி மையங்களின் கலப்படங்களை அம்பலப்படுத்துங்கள்…
மருத்து மையங்களின் கலப்படங்களை அம்பலப்படுத்துங்கள்…
அரசியலின் கலப்படங்களை அம்பலப்படுத்துங்கள்…
சவப்பெட்டியில் அடக்கம் செய்யும்போதுதான்
சகாவு சனாதன எதிரி என்பதே புரியவருகிறது.
பிரசாத லட்டு
பனிமலையின் சிறு நுனி.
வெளியில் தெரிவதைக் கண்டுபிடிக்கவே
இத்தனை காலமென்றால்,
ஆழ வேரோடிய ஆப்ரஹாமிய மலையை
அடையாளம் காண்பது எப்போது?
அப்புறப்படுத்துவது எப்போது?
இதைச் செய்பவர்கள்
அதையும் செய்ய வேண்டும்.
செங்கல் சூளையில்
சரிகிறது ஒற்றைச் செங்கல்.
அஸ்திவாரத்தைத் தாங்கும்
ஆதாரச் செங்கல்களை
அடுத்தடுத்து உருவ வேண்டும்.
$$$