-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #55...

55. உண்மையான சிலை உடைப்பு போர் எப்போது?
நாம் தமிழர்கள் மாத்திரமே; இந்துக்கள் அல்ல என்பது
நம் தாயின் ஒரு முலை மட்டும் போதும்
இன்னொரு முலை தேவையில்லை என்பதைப் போன்றது…
தேவையில்லை என்று சொன்னால் கூடப் பரவாயில்லை
அதை அறுத்தெறிய வேண்டும் என்றும்
அராஜகம் பேசுகிறாய்.
சரி…
நம் அன்னையின் தமிழ் முலைப் பாலையாவது அருந்துகிறாயா?
அதுவும் இல்லை.
விநாயகர் அகவல் பாடியவளை வெறுக்கிறாய்…
வில்லிபுத்தூராரை விலக்குகிறாய்…
ஆண்டாளை அவமதிக்கிறாய்…
அரக்கர் கூட்டத்தை ஆதரிக்கிறாய்…
திருவள்ளுவரைப் போற்றுகிறாய்- ஆனால்
திருக்குறள் பேசும் சனாதனத்தைத் தூற்றுகிறாய்…
இரண்டு வரிக் குறளில்
ஒற்றை வரியை மட்டும் உயர்த்திப் பிடிப்பதென்பது
இடதுகையை மட்டும் வெட்டி
இதுவே இவர் என்பது போன்ற கொடூரம்.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட
தீ வலம் செய்து கட்டினாலே அது தமிழ்த் தாலி.
மோதிரம் மாட்டிய முன்னோன் ஒருவனை
மூவாயிரம் ஆண்டுகளில்
ஏன், முப்பதாயிரம் ஆண்டுகளில் கூட
காட்டு பார்க்கலாம்.
காகித ஆவணத்தில் கையெழுத்திடுவது
கடல் கொண்ட கபாடபுரத்து வழக்கமா?
*
இந்துக் கோயில்கள் அல்ல;
தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில் என்கிறாய்…
கயிலைச் சிவன் வேறு,
கபாடபுரச் சிவன் வேறு என்கிறாய்…
குன்றுதோறாடும் குமரன் வேறு,
சரவணப் பொய்கை ஷண்முகன் வேறு என்கிறாய்…
பழனி பஞ்சாமிர்தத்தை
பாய்க்கும் பாதிரிக்கும் ஊட்டி
ஒரு விழா எடுத்துக் காட்டேன்.
அதுசரி…
பழனி முருகனுக்கு மாநாட்டை
பழனி முருகன் காசில் ஏன் நடத்துகிறாய்?
ஹஜ் மானியத்தையும்,
நோன்புக் கஞ்சியையும்,
மசூதிப் பணத்தில் இருந்தா எடுத்துக் கொடுக்கிறாய்?
அதுவும் அரிசிக்குப் பதிலாக
அரசு கஜானா பணத்தைக் காசாகவே
அள்ளிக் அள்ளிக் கொடுப்பது,
’ஆம்புலன்ஸ்’ நாலு
கூடுதலாக வாங்கி விட்டுக்கொள்ளவா?
நாமக்கட்டி வாங்கின கணக்கில் நாலு கோடி…
முருகனுக்கு மொட்டை போட்ட கணக்கில் முன்னூறு கோடி…
இதில்தானே,
செடி அப்படியே இருக்க
வேர்க்கடலையைத் திருடும்
விஞ்ஞான ஊழலின் விஷ வேர் ஊன்றியிருக்கிறது?
*
அரக்கர் பிடியில் இருந்த தென்னாட்டை மீட்ட
அண்ணல் அவதரித்தது வட நாட்டில்தானே?
தென்னாட்டில் ஒரு பிரச்னையென்றால்
வட நாட்டில் இருந்து வராமல்
வாடிகனிலிருந்தா வரவேண்டும் தீர்வு?
*
தமிழ் இலக்கியங்கள் எல்லாம் பக்தியைப் பேசுகின்றன…
’பகுத்தறிவைப்’ பேசவில்லை;
வைதிகத்தைப் போற்றுகின்றன…
வையத்து வாழ்வை வெறுக்கின்றன என்று
அவற்றை முற்றாக நிராகரிக்கச் சொன்ன
முழு மூடனே தந்தையென்றால்
பிறப்பவையெல்லாம் எப்படி இருக்கும்?
தந்தை, எட்டு சாக்கடையில் புரண்டால்
தனையர்கள் பதினாறு சாக்கடையில் புரளுவார்கள்.
*
அரச மரத்தடி பிள்ளையார் வேறு…
ஆர்.எஸ்.எஸ். பிள்ளையார் வேறு தானே?
வாருங்கள், அரசரடிப் பிள்ளையாருக்கு
செவ்வரளி தூவி வழிபடுவோம்.
இந்து களிமண் பிள்ளையார் வேறு…
இந்துத்துவ பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பிள்ளையார் வேறு தானே?
வா… இல்லந்தோறும் இந்து பிள்ளையாரைக் கும்பிடு.
வாதாபி பிள்ளையார் வேண்டாமென்றால்,
ஒளவையின் அகவலைப் பாடு.
*
சேரத் தமிழருக்கு சோழத்தமிழர் பகைவர்…
சோழத் தமிழருக்கு பாண்டியத் தமிழர் பகைவர்…
ஆ சேது ஹிமாச்சல இந்துவுக்கு
அகிலம் முழுவதுமே ஒரே குடும்பம்.
‘சர்வே பவந்து சுகினக’ என்ற சனாதனக் குரல்தான்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று
வந்தாரை வாழவைக்கவும் வழிகாட்டி வந்திருக்கிறது.
மாமாவழியில் வந்த மஹமதியர்களை
மருமகன் வழி வந்த மஹமதியர்கள்
மசூதிக்குள்ளேயே கொன்று குவிக்காதவண்ணம்
அரணாக நின்று காப்பது,
ஆதி அந்தம் இல்லாத இந்து தர்மமே.
சீர்திருத்தம் பேசிய கிறிஸ்தவர்களுக்கும்
பேசாத கிறிஸ்தவர்களுக்கும்
சிலுவைப் போர் மூளாமல் காப்பது
சிந்து நதி தீரத்தில் பிறந்து
சீரிளமைத் திறமையுடன் திகழும் சனாதன தேசமே.
*
நாத்திகத் தடியால் அடிப்பதென்றால்
முதலில் தெருவுக்குத் தெரு நிற்கும்
திருட்டு திராவிடக் கும்பல் தலைவர்களின்
சிலைகளைத் தான் உடைக்க வேண்டும்.
அந்தச் சிலைகளுக்குப் போடும் மாலைகளைத்தான்
அறுத்தெறிய வேண்டும்.
அதிலும்
தனக்குத்தானே சிலை வைத்துக்கொண்ட
தற்குறியின் சிலையைத்தான்
முதலில் உடைக்க வேண்டும்.
ஈவெரா மண்ணில்
அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்குச் சிறைக்கூண்டு!
பார் புகழும் சமூக சமத்துவ மாடலுக்கு
இதைவிடச் சான்று வேண்டுமா என்ன?
*
ஆன்மிக பூமியின் அத்தனை ஊர்களையும்
அசிங்கப்படுத்தும் அரக்கர் கூட்டத்தின் சிலைகளை
அடித்து உடைக்கத்தான்
நம் வேழ முகத்து விநாயகன்
ஒவ்வோர் ஆண்டும்
ஒரு வாரம் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்.
பயிற்சி வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு
படுத்துத் தூங்குகிறது பக்தர் கூட்டம்.
அடிவாரத்திலேயே
முகாமிட்டுப் படுத்துக்கொள்ளும் கூட்டம்
மலை உச்சியில்
கொடியை எப்படிப் பறக்கவிட முடியும்?
ஒவ்வோர் ஆண்டும்
கடல் நீர்மட்டம் அதிகரிப்பது ஏன் என்பது புரிகிறதா?
ஒவ்வோர் ஆண்டும்
கடல் உப்பின் அடர்த்தி அதிகரிப்பது ஏன் என்பது புரிகிறதா?
ஒவ்வொரு தெருமுனையிலும்
ஓரமாக நின்று மன்றாடுகிறார்:
என் பானை வயிறை உடைத்து
போலிப் பகுத்தறிவுவாதங்களை
உடைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
என் வேழ முகத்தைச் சிதைத்து
வேத விரோதிகளை வெல்லக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வீதியாக ஊர்வலம் வந்து
உருக்கத்துடன் கேட்கிறார்:
என் அங்குசத்தை உடைத்து
ஆப்ரஹாமிய அராஜகங்களை
அழிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
என் கிரீடத்தை உடைத்து
க்ரிப்டோ ஊடுருவலைக்
கிழித்தெறியக் கற்றுக் கொள்ளுங்கள்.
கடல் தண்ணீரில் மூழ்கடிக்கப்படவிருக்கும் விநாயகர்
கண்ணீர் மல்கக் கேட்கிறார்:
உண்மையான சிலை உடைப்புப் போரை
எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்?
$$$