உருவகங்களின் ஊர்வலம்- 52

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #52...

52. என் சமூகம் உனக்கு முன்பாகவே சென்று கொண்டிருக்கிறது!

கல்வி மையங்கள்
கல்வி மையங்களாகவே
இருக்க வேண்டும்.
உண்மைதான்
ஆன்மிகமும் ஒரு பாடம்தான்.
மதமும் ஒரு பாடம்தான்.
கல்வி மையங்களில் அவையும்
தனிப் பாடமாக
தவிர்க்க முடியாத
பாடமாக இருக்கத்தான் வேண்டும்.

ஆய்வுக்கட்டுரைகள் போலத் தேவையில்லை-
அடிப்படைப் பாடமாக இருக்கலாம்.
‘சிறுபான்மைப் பள்ளி’களில் மாணவர்களுக்கு
செந்தூரத் திலகம் அணிவித்து
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளை
போற்றக் கற்றுத் தரலாம்.
மத நல்லிணக்க அரசின் சலுகையும் காசும் வேண்டும்.
மத நல்லிணக்கம் மட்டும் கற்றுத் தர மாட்டார்களா?

மத நிறுவனம் நடத்தும் பள்ளியென்றால்
அரசாங்கக் காசைத் திருப்பிக் கொடு முதலில்.
அரசாங்கக் காசில் நடத்துகிறாயென்றால்
அனைத்து மதங்களையும் போதித்து
ஆன்மிகக் கல்வியை கற்றுக் கொடு.

இந்து பள்ளிகளில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நடக்கத்தான் செய்கிறது.
சர்ச் கான்வென்ட்களில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடு முதலில்.
உங்களிடமிருந்து அரசியலை நாங்கள் கற்றுக் கொண்டால்தான்
எங்களிடமிருந்து ஆன்மிகத்தை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்
என்பது புரிகிறது.
அது விரைவில் நடக்கட்டும்.

*

கல்வியில் மதம் கலக்கக் கூடாது
சரி…
கலை கலைக்காகவேவா…
கலை மக்களுக்காகவா?

நீதித்துறையில் இந்து விரோதம் நீடிக்கலாம்…
திரைத்துறையில் இந்து விரோதம் திணிக்கப்படலாம்…
வியாபாரத் துறையை இந்து விரோத மாஃபியா வளைக்கலாம்…
ஊடகத்துறையில் இந்து விரோதம் ஊடுருவலாம்…
காட்சி ஊடகங்களில் இந்து விரோதம் கண்மூடித்தனமாக இருக்கலாம்…
கல்வித்துறையிலும் இந்து விரோதம் கண் மறைவாக இருக்கலாம்…
இந்து ஆதரவுக் கருத்து மட்டும் எதிலும் இருக்கக் கூடாது-
அப்படித்தானே?

அந்தந்தத் துறைகள் எல்லாம்
அது அதுவாகவே இருக்க வேண்டுமென்றால்
இந்து இந்துவாகவே
எல்லா இடங்களிலும் இருந்தால்தான் சாத்தியமாகும்.
அது விரைவில் சாத்தியமாகட்டும்.

*

பள்ளிப் பருவம் அறியாப் பருவம்…
பாடங்களை மட்டும் படிக்கட்டும்.
நல்லது.
18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களும் பார்க்கலாம் என்ற
முத்திரையுடன் வரும் முழு நீலத் திரைப்படங்களில்
திரையுலக தெருப்பொறுக்கிகள் காட்டாத ஆபாசமா, அசிங்கமா?

கஞ்சா…ரெளடியிஸம்…
வன்முறை…மலின செக்ஸ்…
ஜாதி வெறுப்பு…தர்ம வெறுப்பு…தேச வெறுப்பு…
தமிழ் ஆசிரியர் என்றால் காமெடியன்…
இந்து கதாபாத்திரம் என்றால் வில்லன்…
கறுப்பு நிறமென்றால் கேவலம்…

கண்டபடி வைவதும்
கை நீட்டி அடிப்பதும்தான் காமெடி…
பகுத்தறிவுப் பன்னாடைகள்தான் நாயகன்.
பொம்பளைப் பொறுக்கிகள்தான்
உச்ச நட்சத்திரங்கள்… இயக்குநர் இமயங்கள்…
கவிப்பேரரசுகள்…

கள்ளச் சந்தை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு
இந்தப் பன்னாடைகள் எடுத்துக்காட்டும்
பாழாய்ப்போன படங்கள் போல அசிங்கங்கள்
இந்தப் பாரில் வேறு எங்கேனும் உண்டா?

கல்வி கல்வியாக இருக்க வேண்டும் என்றால்
திரைப்படம் திரைப்படமாக அல்லவா இருக்க வேண்டும்?
பள்ளியில் கற்பதைவிட இந்த
பாழாய்ப்போன படங்களில் இருந்து கற்பவைதானே
‘புள்ளிங்கோ’ தலைமுறையைப்
புதைகுழியில் தள்ளுகின்றன?

*

எனக்குக் கண் பார்வை இல்லாமல் போனதற்கு
முற்பிறவி காரணம் என்பது
இறுமாப்பு அல்லவா…
இகழ்ச்சி அல்லவா…
கொடூர சிந்தனை அல்லவா?

அப்படி இந்து தர்மம் சொல்லவில்லையே அன்பரே,
இன்று நீ நல்லது செய்தால்
நாளை உனக்கு நல்லது நடக்கும் என்றுதான் அது சொல்கிறது.

நாளை எனக்கு நடக்கும் நன்மைக்கு
நான் செய்யும் நன்மையே காரணமாகுமென்றால்
இன்று என் தீமைக்கு
என்றோ நான் செய்த தீமைதான் காரணமா?
என்ற குதர்க்கக் கேள்விக்கு
இந்து மதம் தந்த பதில் அதுவல்ல.

நியாயத் தீர்ப்பு நாளில் எழுதப்படும்வகையில்
ஒரே ஒரு பிறவிதான் என்று
இந்து தர்மம் சொல்லவில்லை.

இன்று நீ அனுபவிக்கும்
உன் குறைகளுக்கும் துன்பங்களுக்கும் விடுதலை
உன் மூலமே கிடைக்கும்.
இன்னொரு பிறவியில் நீ நல்ல வாழ்க்கை வாழ்வாய்.
இன்று நீ நல்லது செய்தால் என்றுதான் அது
இதமாக வழிகாட்டுகிறது.

ஒரு முறை மதிப்பெண் குறைந்தால்
தூக்கிட்டுச் சாகு என்று தூண்டவில்லை
இன்னொரு வாய்ப்பு உண்டு என்று
உற்சாகமூட்டுகிறது.

*

இன்றைய கஷ்டத்துக்கு முற்பிறவியே காரணம் என்பது
யாருக்கும் எந்த உதவியும் செய்ய விடாமல்
முடக்குகிற மூட நம்பிக்கையே.
அப்படி நினைத்து உதவாமல் இருந்த
ஒற்றை இந்துவைக் காட்டு.

கற்பிதக் குற்றச்சாட்டுகளுக்கு
கலாசாரம் பொறுப்பாகாது.

சரி…
மாறாக உன்னிடம்
என்ன மகத்தான விளக்கம் இருக்கிறது?

ஒளி என்றார் தேவன்… ஒளி உண்டானது…
இருள் என்றார் தேவன்… என் கண் குருடானது…
இதுதானா உன் மாற்றுக் கருத்து?

சாத்தான் கண்ணைப் பறித்துவிட்டான் என்றால்
நீ சாத்தானின் குழந்தையா…
கர்த்தரின் குழந்தை இல்லையா..?

கர்த்தரின் குழந்தைதான் என்றால்
அத்தனை குரூரமானவரா
உன்னைக் குருடாக்கிய கர்த்தர்?

குருடரைப் பார்க்க வைக்கிறேன்…
முடவரை நடக்க வைக்கிறேன் என்று
அறிவியல்பூர்வமாக
அமாவாசை ஜெபக்கூட்டங்கள் நடத்துகிறது
உனது வணிக மதம்.

முற்பிறவியில் நீ செய்த செயலே காரணம்
நம் கடவுள் அல்ல என்கிறது இந்து தர்மம்.

உலகைப் படைத்த கர்த்தர்தான்
உன்னையும் குருடாகப் படைத்தார்
என்கிறது உன் விவிலியம்.

உனக்கு உன் கடவுளை இழிவுபடுத்துவது
பிடித்திருக்கிறதென்றால்
இழிவுபடுத்திக்கொள்.
என்னையும் ஏன்
அப்படிச் செய்யச் சொல்கிறாய்?

ஒவ்வொரு மனிதரையும் கடவுளின் அம்சமாக
தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும்
தெய்வக் குழந்தையாகச் சொல்கிறது
என் தர்மம்.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று திடமூட்டுகிறது…
‘அஹம் பிரம்மாஸ்மி’ என்று
ஆனந்தம் கொள்ளச் செய்கிறது.

‘தேவன் என்னை ஏன் குருடாக்கினார்?’ என்று
தசம பாகம் பிடுங்கும் தற்குறிகளிடம் போய்க் கேள்.

*

காஃபிர்களுக்கு எதிரான போரில் களமாட முன்வராதவர்களை
குருடாகவும் முடமாகவும் ஆக்கினாராமே…
இந்த எல்லையற்ற கருணையை ஏற்றுக் கொள்கிறாயா?
உலகைப் படைத்தது அவரே என்றால்,
ஊனத்தைப் படைத்ததும் அவரே தானே?

போய்க் கேள்…
கேட்டுவிட்டு
நிரந்தர நரகத்தில்
நியாயத் தீர்ப்பு நாளுக்காகக் காத்திரு.

அன்றும் விடை கிடைக்காமல்தான்
அலறித் துடிக்கப் போகிறாய்-
அப்போதாவது
ஆதி தர்மம் சொன்னதை
ஆற அமர யோசித்துப் பார்.

  • கடவுள் நம்பிக்கை முதலில் வந்துவிட்டது.
    பகுத்தறிவு பின்னால் வந்தது.
    பொம்மையை இறுகப் பற்றிக் கொள்ளும் குழந்தையைப் போல
    கடவுளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு
    ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விளக்கம் சொல்கிறது.

கர்த்தர் நல்லவர்தான்; வல்லவர்தான்
என்னை ஏனோ குருடாக்கிவிட்டார்.
அல்லா நல்லவர்தான் வல்லவர்தான்
என்னை ஏனோ முடமாக்கிவிட்டார்.

உனக்கு நம்பிக்கை உள்ளதை நீ ஏற்றுக்கொள்…
மற்றவரின் நம்பிக்கையை மறுத்துப் பேசாதே.
கடவுளை மறுப்பதானால்
எல்லா கடவுளையும் மறு.

ஆகக் குறைந்த அநீதிகள் கொண்ட மதத்தை,
ஆகக் கொடிய மதத்தின் பின்னால் இருந்துகொண்டு
அழிக்கப் பார்க்காதே.

நாத்திகம் கோழைகளுக்கானதல்ல….
நாத்திகம் நபும்சகர்களுக்கானதல்ல…
நாத்திகம் சந்தர்ப்பவாதிகளுக்கானதல்ல…
நாத்திகம் போலிகளுக்கானதல்ல; புல்லுருவிகளுக்கானதல்ல.

கண்ணீர் சிந்தும் விழிகளைப் பார்க்க வேண்டாம் என்று
என் மீது இரக்கம் கொண்டு
என் கண்களை வாங்கி வைத்திருக்கிறார்.

போர்க்களங்களில் கேட்கும்
மரண ஓலங்களைக் கேட்க வேண்டாம் என்று
என் காதுகளை மூடியிருக்கிறார்.

எந்தவொரு புல்லையும் பூவையும் மிதித்து விடக்கூடாதென்றும்
எந்தவொரு அராஜகவாதிக்கும் எழுந்து நிற்க வேண்டாம் என்றும்
என் கால்களை வாங்கி வைத்திருக்கிறார்.

எந்தவொரு அநீதிமானையும் கூழைக்கும்பிடு
போட்டுவிடக்கூடாதென்று
என் கைகளை வாங்கி வைத்திருக்கிறார்.

என் ஊனக் கண்களைப் பறித்தவர்
ஞானக் கண்களைத் திறந்திருக்கிறார்.

இந்த உலகில்
நான் இருக்கப்போகும் அதி சொற்ப காலத்தில்
அவரையே தியானித்து,
அவர் அருளாலே
அவர் தாள் பணிந்து
அவர் நினைவாகவே ஆயுளைக் கழிக்க
அவருக்கு அருகிலேயே என்னை அமரவைக்க
அவருக்கு அருகிலேயே நான் சென்று அமர
அரிய வாய்ப்பைத் தந்திருக்கிறார்.

ஒரு துயரை எனக்குத் தந்து
ஊருக்கெல்லாம் உதவும்படிச் சொல்கிறார்.

என் ஊனம்
ஊனமுற்ற இந்த உலகில் இருந்து
என்னை மேலெழ வைத்துக்கொள்ளக் கிடைத்த
நல் வாய்ப்பு… நற் பரிசு….நற் கருணை.
நான் செய்தவற்றுக்குக் கிடைத்த நற் பலன்.

*

அதி துய பகுத்தறிவுவாதியென்றால்
உரிய சிகிச்சை தராத மருத்துவர் மேல் வழக்குத் தொடு.
திராவிட அரசாங்கம் மேல் திருட்டுப் பட்டம் சுமத்தி
தெருவுக்கு இழுத்து வந்து சாத்து.
முடியவில்லையென்றால்
மூடிக் கொண்டு இரு.

ஆப்ரஹாமிய மதங்களின்
ஆகப்பெரிய ஞானிகளையும்விட
அதி உன்னதமானவர்
ஆதி தர்மத்தின் ஆகக் கடைசி நிலையில் இருப்பவர்கூட.
எங்கள் தெய்வங்களை நாங்கள் இகழ மாட்டோம்.
உங்கள் தெய்வங்களை நீங்கள் இகழாதீர்.

எங்கள் சமூகம்
உங்கள் சமூகங்கள் அனைத்துக்கும் முன்பாகவே
முன்பும் சென்றது…
இன்றும் செல்கிறது…
என்றும் செல்லும்.

$$$

Leave a comment