-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #50...

50. கடையேறாத ஆன்மாக்களின் கண்ணீர்த் துளிகள்
ஜன்னல்களற்ற அந்தப் பிரமாண்ட அறையில்
நச்சுக்காற்று சுவாசிக்கப்பட்டு
நச்சுக்காற்றே உமிழப்பட்டு உருவான வெம்மையில்
அந்தப் பழங்குடி ஆன்மாக்கள் எல்லாம்
பதறியபடி துடித்துக் கொண்டிருந்திருந்தன.
மெழுகுவர்த்தித் திவலை சொட்டினால்கூடக் கேட்கும் அளவுக்கு
மயான அமைதி அங்கு நிறைந்திருந்திருந்தது.
(முழு ரத்தமும் வடிந்தபின் ஏற்படும்
அமைதியைப் போன்றதோர் பேரமைதி).
விண் முழுவதும் நிறைந்திருக்கும் பேரொளியின்
ஒற்றைக் கீற்றுகூட ஊடுருவ முடியாதபடி
வளர்ந்து நின்ற பெருங் கானக மரங்களின்
அத்தனை இலைகளும் சேர்ந்து உருவாக்கிய இருள்
அந்த அரங்கிலும் நிறைந்திருந்தது.
ஆனால்,
காவி உடை காற்றில் பறக்க
நீங்கள் கம்பீரமாக நுழைந்தபோது
அந்த ஆன்மாக்கள் அத்தனையும் சிலிர்த்து எழுந்திருந்தன.
பூட்ஸ் காலொலியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட
உங்கள் மரக் காலடிக்குறடுகளின் சப்தம்
பூர்வகுடிகளின் இதயத் துடிப்பைப்போலத் தானே ஒலித்திருக்கும்?
அத்தனை பூர்வகுடி மரபுகளையும் அரவணைத்த
ஆதி தர்ம தேசத்திலிருந்து அல்லவா சென்றிருந்தீர்கள்?
உங்கள் நெற்றியில்
மூன்றாம் கண்ணாகக் குவிந்த குண்டலினி சக்தி
அந்த ஆன்மாக்களுக்கு
அந்த இருண்ட கானகத்தின் இலைகளூடே
கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டும்
கதிரொளியாக இருந்திருக்கும்.
நழுவிய உங்கள் மேலாடையை
மென்மையாக வீசி தோளில் போட்டுக்கொண்டபோது
அத்தனை ஆன்மாக்களையும் ஒரு தென்றல்
அன்போடு வருடிச் சென்றிருக்கும்.
கறுப்பு உடையும் வெள்ளை உடலுமாக
நிறைந்திருந்த அந்த அரங்கில்
உதயத்தின் செம்பொன் கதிர்களை
ஆடையாக நெய்து வந்ததுபோல
நீங்கள் ஏறி நின்றபோது,
செவ்விந்திய ஆன்மாக்கள்
சன்னதம் கொண்டு ஆடியிருக்கும்.
அத்தனை மதங்களுக்கும் ஆதியான
தாய் மதத்திலிருந்து வந்திருந்த உங்களின் வடிவில்
கறுப்பர்களின் ஆன்மாக்கள் எல்லாம் அவர்களுடைய
காளி அன்னையின் பூசாரியைக் கண்டுகொண்டிருக்கக் கூடும்.
அத்தனை தேசத்துக்கு அகதிகளுக்கும்
அடைக்கலம் தந்த தேசத்திலிருந்து வரும் ஒருவருக்காகத் தானே
அந்த ஆன்மாக்கள் அத்தனை ஆவலுடன்
அதுவரையில் காத்திருந்தன?
ஓம் என்று நீங்கள் முழங்கவிருக்கும்
உன்னதத் தருணத்துக்காக
அவை ஓரணியில் திரண்டு நின்றன.
கல்லாய் உறைந்திருந்த கடந்த கால ஆன்மாக்களுக்கு
கடைத்தேற்றம் கிடைக்கவிருந்தது.
அப்போதுதான் நீங்கள்
அந்த வார்த்தைகளைச் சொன்னீர்கள்!
அதைக் கேட்டதும்
அகிலமெல்லாம் அதிர
அமெரிக்காவே எழுந்து நின்று கரவொலி எழுப்பியது.
உங்களுடைய அந்த ஒரு வாக்கியம்
ஆழ்ந்த நித்திரையில் இருந்த இந்துஸ்தானையும்
விழிமின், எழுமின் என வீறுகொண்டு எழச் செய்தது.
காலனிய தேசம் மீது கவிழ்ந்த அந்தக் கார் மேகம்
காமதேனுபோல சுரந்துகொண்டிருக்கிறது
கர்ம யோகத்தின் முடிவற்ற துளிகளை.
அடிமைப்பட்டுக் கிடந்த இந்து ஆன்மாக்கள்
அகிலத்தை வென்ற மகிழ்ச்சியில்
ஆனந்தக் கூத்தாடின.
ஆப்ரஹாமிய மதம்
அணுகுண்டு வீசி உலகை அதிர வைத்தது பின்னாளில்….
நீங்கள்
அன்பான வார்த்தைகளின் மூலம்
அகிலத்தை அதிரச் செய்திருந்தீர்கள் முன்னதாகவே.
ஆனால்…
ஆனால்…
நாணேற்றப்பட்ட காண்டீப ஒலி கேட்டு
நடுங்கிய நாகங்கள் போல் உறைந்து ஒடுங்கின,
அந்த சபிக்கப்பட்ட அறையில்
சனாதன மீட்சிக்காகக் காத்திருந்த சகலஆன்மாக்களும்.
கறுப்பர்களைக் கொன்று குவித்த பாதிரிகள்…
அமெரிக்கப் பூர்வ குடிகளை அழித்த
ஆப்ரஹாமிய அரசர்கள்….
அகிலத்துப் பூர்வகுடிகளையும் பூண்டோடு அழித்த
ஆப்ரஹாமிய வணிகர்கள்…
அத்தனை பேரும் நீங்கலான
அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே என்றுதானே
அன்று நீங்கள் முழங்கியிருக்க வேண்டும்?
அத்தனை அமெரிக்கரும்
உங்கள் சகோதர சகோதரிகளாக
எப்படி ஆனார்கள்?
ஏன் ஆனார்கள்?
என்றிலிருந்து ஆனார்கள்?
தேவர்களுக்கு அபய ஹஸ்தம்…
அரக்கர்களுக்கு ஆயுத ஹஸ்தம்…
அந்த அறையில்
அனைத்து மத மாநாட்டுத் தொடக்கமாக ஒலித்த மணி
மத மாற்றத்துக்கான சாவுமணி என்றல்லவா
உரத்த குரலில் நீங்கள் உச்சரித்திருக்க வேண்டும்?
ஒவ்வொருவரும் எந்த வடிவில் என்னை வணங்குகிறார்களோ
அந்த வடிவில் அவர்கள் முன் தோன்றுகிறேன்
ஏனென்றால்
உலகம் முழுவதுமே
நான் வகுத்த பாதையில்தான்
நாளும் நடை பயில்கின்றன –
இது நம் தெய்வம்
பூர்வ குடிக் கடவுள்களை அழிக்காத
நமக்குள்ளான பூசல்களை விலக்க
நமக்காகப் போதித்தது.
சனாதன தர்மத்தை நிலைநாட்ட
மதமாற்ற அரக்கர்களை அழிக்க
ஒவ்வொரு யுகமும் நான் அவதரிப்பேன் என்பதுதானே-
பூர்வ குடிகளை அழித்தவர்களைப்
புனிதர்களாக மதிக்கும் பூமியில்
போதித்திருக்க வேண்டிய கீதை?
கிருஷ்ணனாக வழிபடுபவர்களுக்கு கிருஷ்ணனாகவும்
கிறிஸ்துவாக வழிபடுபவர்களுக்கு கிறிஸ்துவாகவும்
நானே இருக்கிறேன் என்பது
கீதாச்சார்யனின் பெருமை அல்ல…
கிறிஸ்துவுக்கான மகிமை மட்டுமே.
என்னையும் கும்பிடு என்பவருக்கும்
என்னை மட்டும் கும்பிடு என்பவருக்கும்
எந்த வேறுபாடும் இல்லையா என்ன?
முற்பகலில் கொலை செய்தவர்களுக்கு
பிற்பகலில் கிடைக்க வேண்டியது என்ன?
பல தெய்வ வழிபாடு பகலவன் போல ஒளி வீசும்…
ஓரிறைக் கொள்கை உலகை இருளில் தள்ளும்…
உன்னத தத்துவத்தின் குழந்தைகள் ஓரமாக நிற்கிறோம்…
ஒற்றைப்படையைத் திணித்த நீ உலகின் மீட்பனா?
சர்வ மதக் கூட்டம்
சனாதன தேசத்தில் அல்லவா நடக்க வேண்டும்?
தேர்வில் எழுதிய விடைகளுக்குத்தான்
தேர்ந்த ஆசிரியர் மதிப்பெண் தர வேண்டும்
என்ன எழுதினாலும் 100 மதிப்பெண் கொடுப்பவர்
என்னவகையான ஆசிரியராக இருப்பார்?
எல்லாரையும் சமமாக நடத்துவதென்றால்
எல்லாருக்கும் ஒரே மதிப்பெண் தருவது அல்ல.
கடைசி பெஞ்சில் இருப்பவனுடைய
கல்வியில் கருணை காட்டலாம்…
மதிப்பெண்ணில் கருணை காட்டலாமா?
சனாதனத்தின் சாரம் எல்லாரையும்
சகோதர சகோதரிகளே என்று விளிப்பதில் இல்லை…
சத்தியத்தைப் பேசுவதில் இருக்கிறது….
சத்தியத்துக்காகப் பேசுவதில் இருக்கிறது….
இந்துஸ்தானில் மாபெரும் எழுச்சிக்கு
இந்த முதல் உரை பயன்பட்டது
அமெரிக்காவின் ஆப்ரஹாமிய ஆன்மாவை
அது அணு அளவுகூட அசைக்கவில்லை.
பூர்வ கலாசாரங்களை அழிக்க
அந்தப் புற்றிலிருந்து
வீரியன் பாம்புக் குட்டிகள் வெளிவந்தவண்ணமே இருக்கின்றன.
விஸ்வ குருவாக வேண்டுமென்று
2047க்கு நமக்கொரு இலக்கு இருக்கிறது.
கிறிஸ்தவ இந்தியா என்று
2047க்கு அவர்களுக்கும் ஓர் இலக்கு இருக்கிறது.
இருபது தலைமுறைகளில் முடியாதது
அடுத்த இருபது ஆண்டுகளில் மட்டும் முடிந்துவிடுமா?
அதற்குள் முடியாமல் போகலாம்-
ஆனால்
அதை முடிக்காமல் அவர்கள் போக மாட்டார்கள்.
அமெரிக்காவின் பழங்குடி ஆன்மா இன்றும்
அழுதுகொண்டிருக்கிறது.
கறுப்பர்களின் கண்ணீரைத் துடைக்க
அமெரிக்கப் பழங்குடிகளின் ஆன்மாவை விடுவிக்க
பூர்வ கலாசாரங்களின் புனிதங்களைக் காக்க
இன்னொரு ஜென்மம் எடுக்க வேண்டியதில்லை நரேந்திரரே!
இன்று வாழும் உடல் ஒன்றுக்குள் புகுந்து
இன்னொரு வீர உரை ஆற்றுங்கள் போதும்!
மத மாற்றத்தை மறுதலிக்கும்
மதிப்புக்குரிய சகோதர சகோதரிகளே…
என்று ஆரம்பியுங்கள் அடுத்த உரையை!
சர்ச்களை மூடுவதால் பலனில்லை…
பாதிரிகளை முடக்க வேண்டும்.
ஏகாதிபத்திய கிறிஸ்தவத்துக்கு எதிராக
எழுமின் விழிமின்…
இலக்கை அடையும்வரை நில்லாது உழைமின்…
தப்பிக்கும் வழிகளை அடைக்காமல் தீவைத்தால்
பொந்துக்குள் இருக்கும் எந்த விஷ ஜந்துவும் சாகாது,
உலகம் முழுவதும் சென்று ஒருவரையும் வாழ விடாது
என்று முடியுங்கள் இரண்டாம் உரையை.
அந்த இரண்டாம் வருகை இனிதே நிறைவேறட்டும்.
உலகக் கறுப்பர்களின் துணையுடன்…
உள்ளூர் செவ்விந்தியர்களின் நட்புடன்…
எஞ்சியிருக்கும் பூர்வகுடிக் குலங்களின் ஆதரவுடன்…
ஒரு புதிய போரை
உண்மையான புதிய உலகிலிருந்து கட்டமையுங்கள்.
அத்தனை பேருக்கும் ஒரே எதிரி…
அத்தனை போருக்கும் ஒரே வியூகம்…
உங்கள் முதல் உரையால் இந்தியா எழுந்தது.
நீண்ட கரவொலி எழுப்பிய அமெரிக்கா
அதோடு நிறுத்திக்கொண்டுவிட்டது.
இம்முறை முடிவற்று ஒலிக்கும் கரகோஷம்-
உலகக் கயவர்களே ஒன்று கூடுங்கள் என்று இரு கை விரித்து
உலகெலாம் உலவும் உயிர்த்தெழுந்த சாத்தானை
சவப்பெட்டியில் பூட்டி அடிக்கும்
இறுதி ஆணியாக அமையட்டும்!
ஒவ்வொரு பாம்புகளாக அடித்துக் கொல்ல முடியாது…
உற்பத்திப் பண்ணையை அழிக்க வேண்டும்.
ஊருக்குள் அமைதி திரும்ப வேண்டுமென்றால்
ஊர் சண்டியனைத் திருத்தியாக வேண்டும்.
உலகில் அன்பும் அறமும் தழைக்க வேண்டுமென்றால்
உலகச் சண்டியனை நம் வழிக்குத் திரும்பியாக வேண்டும்.
காதில் விழுகிறதா நரேந்திரரே,
பூர்வ கலாசாரங்களின் நிறைவேறா பிரார்த்தனைகள்
கண்ணில் தெரிகிறதா நரேந்திரரே!
கடையாந்தரத்திலிருந்து மன்றாடும்
ஆன்மாக்களின் கண்ணீர்த் துளிகள்…
$$$