உருவகங்களின் ஊர்வலம்- 48

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #48

48. மாம்பூக்கள்… கொன்றை மலர்கள், பவளமல்லிப் பூக்கள்…

பொதுவான சுவர் கொண்ட இரு வீடுகள்.

ஒரே நீண்ட திண்ணையை
முன் வாசல் படிகள் பிரித்தன.

நதிக்கரை நோக்கித் திறக்கும் பின் வாசல்களோ
முட்டளவு மதிலால் இணைத்தன.
(உண்மையில் நதிக்கரையில் இருந்து பார்த்தால்
முன்வாசல் அதுவே).

பரந்து விரிந்த கொல்லையின்
நான்கு பக்க மூலைகளிலும் நான்கு மரங்கள்.
முதல் மூலையில் சாய்ந்திருக்கும் என் மீது
மாம்பூக்கள் உதிரும்.
மூன்றாம் மூலையில் சாய்ந்திருக்கும் அவள் மீது
கொன்றைப்பூக்கள் உதிரும்.
இரண்டாம் மூலையில் அணிலாடும் தென்னை.
நான்காம் மூலையில் மலரும் பவளமல்லிகள்.

மதில் சுவருக்குள் இருப்பதால் வீட்டின் அங்கம்தான்
மேல் கூரையில்லாததால் வெளியின் அங்கமும்கூட.

வான் பார்த்தபடி…
கார் மேகங்கள் பார்த்தபடி…
நிலவு பார்த்தபடி…
நட்சத்திரங்கள் பார்த்தபடி…
நின்று வாழ ஏற்ற இடம்.
ஆதி மொழியில் இருந்தது எங்கள் காதல்.

காற்றில் கரம் கொண்டு அவள்
அங்கு எழுதியதெல்லாம் கவிதைகளே.

அங்கு காலம் ஓடியதா உறைந்து நின்றதா நினைவில்லை.
அங்கு காலம் இருந்ததா என்பதுமே நினைவில்லை…

முதல் மூலையில் இருக்கும் முட்டளவு மதில் தாண்டி
இரண்டாம் மூலைக்கு நான் சென்றால்
மூன்றாம் மூலையிலிருந்து நான்காம் மூலைக்கு நகர்ந்துவிடுவாள்.
நான் மூன்றாம் மூலைக்கு நகர்ந்தால் அவள்
ஒன்றாம் மூலைக்குள் ஒளிந்துவிடுவாள்.

இடையே எப்போதும்
இரண்டு மூலை இடைவெளி.
கை வீசி நடந்தால்
கால் நிமிடத்தில் கடந்துவிடமுடியும் இடைவெளிதான்.
யார் கண்பட்டதோ
ஒரு ஜென்ம இடைவெளியாகிவிட்டது.

மாமரத்தில் சாய்ந்தபடி நான் அனுப்பும் பறக்கும் முத்தங்கள் மீது
கொன்றை மரத்தில் சாய்ந்தபடி
அவள் அனுப்பும் முத்தங்கள் முட்டிக்கொண்டே இருக்கும்.

என் முத்தம் உன்னை வந்தடைந்த பின்
உன் முத்தத்தை அனுப்பு என்று
எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் கேட்க மாட்டாள்.

முடிவற்று அனுப்பப்படும் அக்னி அஸ்திரத்தை
எல்லையற்ற ஜல அஸ்திரத்தால் அணைக்கும் குறும்பு.
ஆம்,
அந்தக் காதல் போரை குழந்தைபோல குறும்பாகவே செய்தாள்
ஆதி தொடங்கி அந்தம் வரை.

விளைவு:
இரண்டு முத்தங்களும் உரிய உதடுகளை
ஒருபோதும் சேரவில்லை.
ஆனால் அது காதலாகவே இருந்தது.

என் அனலில் அவள் ஆடியதே இல்லை…
அவள் புனலில் நான் நீந்தியதே இல்லை…
ஆனால், அதுவே காதலாக இருந்தது.

இன்று நினைத்துப் பார்க்கிறேன்…
கார் கால மரங்கள் தேக்கிவைத்துத் தூவும் மழைத்துளி பட்டுச் சிலிர்த்து
கருங்குயில் தன் துணையைக் கூவி அழைக்கும் தருணத்தில்…
அல்லது
புனலாடும் இரு அன்னங்கள்
இடையில் மிதக்கும் நீர்த்தாவரத்தால்
பிரிக்கப்படுவதைக் கூடப் பொறுக்காமல்
சேர்ந்து சிறகடித்துக் கடக்கும் தருணத்தில்…
ஒன்றாம் மூலையில் இருந்து
நான் நான்காம் மூலைக்கு நகர்ந்திருக்க வேண்டும்.

கார்கால மழைத்தூறல் தந்த சிலிர்ப்பில் மெய்மறந்து
என் நகர்வுக்கு எப்போதுமான எதிர் நகர்வாக
நான்காம் மூலைக்கு அவளும் நகர்ந்திருப்பாள்.
சுய நினைவு வந்து அவள் சுதாரிப்பதற்குள்
என் கரங்கள் அவளின் கரங்களை
என்றென்றைக்குமாக இறுகப் பற்றியிருக்கும்.
(தளிர்க் கரங்களில் வளையல் தடம்
பதியாமல்தான் பற்றியிருப்பேன்).

அவள் கரம் எட்டாமல் போயிருந்தால்
காற்றிலாடும் தாவணியைப் பற்றியிருப்பேன்.
(மென் தேகத்தில் தாவணித் தடம் பதியாமல்
மென்மையாகத்தான் அதையும் பற்றியிருப்பேன்).

விலகிச் செல்ல அவள் முயற்சி செய்தாலே
வளைக்கரம் அழுந்தும்.
தப்பிச் செல்ல அவள் முயற்சி செய்தாலே
தாவணி இறுக்கும்.
அந்த வலியை அவளுக்கு நான் தந்திருக்க மாட்டேன் .

அவள் விலகிச் செல்ல நேர்ந்தாலும்
அத்தனை அருகில் வந்தவள்
அவள் உடம்பில் பதியும் தடம்
என் உடம்பில் வலிக்குமென்று
அவளும் விலகிச் சென்றிருக்க மாட்டாள்.

அவள் தோளில் முதல் மாலையாக என் கரங்கள் விழுந்திருக்கும்.
என் மார்பின் முதல் சந்தனத்தை அவள் நெற்றி தீட்டியிருக்கும்.

கார்காலக் குயில்கள் கூவத்தான் செய்தன…
நதி தீர அன்னங்கள் பறக்கத்தான் செய்தன…
ஐயகோ!
நான் அவற்றைப் பார்த்தபடியே இருந்துவிட்டேன்.

பவளமல்லி மரத்தடிக்கு அவள் வந்து
பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றிருப்பாளோ?

நகராமல் சிலையாக நின்றிருந்த என்னைப் பார்த்து
நாசூக்காக அவள் மென்மையாகக் கனைத்திருக்கவும் கூடும்.
குயிலின் கமகம் என்று நான் அதை நினைத்து
குறைமதியுடன் நின்றுவிட்டேனா?

அலைபாயும் கண்களால்
பவளமல்லிக் கிளை விலக்கிப்
பரிதவித்துப் பார்த்திருக்கக் கூடும்
அன்னங்கள் பறக்கும் அழகைப் பார்த்தபடி
அசட்டுத்தனமாக நின்றுவிட்டேனா?

இரண்டு மர இடைவெளி
இந்த ஜென்மத்தில் கடக்க முடியாமல் போனது என்னால்தானா?

மாம்பூக்கள் வாடி உதிர்ந்ததெல்லாம் இந்த வேதனையில்தானா?
பவளமல்லிகளில் தீக் கங்குபோல துவாரம் விழுந்ததெல்லாம்
அன்று சொட்டிய அமிலத் துளியால்தானா?

மரங்களே மன்னியுங்கள்…
குயில்களே மன்னியுங்கள்…
அன்னங்களே மன்னியுங்கள்…
நான் செய்த தவறுக்கு
அன்று அவள் உங்களைச் சபித்திருக்கக் கூடும்.

அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் இப்படி
அசட்டையாக இருக்க மாட்டேன்.
கவனக்குறைவால் நான் செய்த பிழையைப் பொறுத்தருளுங்கள்.
உங்கள் குழந்தைதானே நான்?

அவள் காதல் வசப்பட்டுச் செய்த
பிழையைப் பொறுத்தருளுங்கள்.
உங்கள் குழந்தைதானே அவளும்?

நீங்கள் தந்த காதலை
நிர்கதியாய்த் தவிக்கவிட்ட எங்களை மன்னியுங்கள்.

ஒரு சிறு தவறுக்கு
ஒரு ஜென்ம தண்டனை போதும்.

எங்கள் சிதை எரிந்து அடங்காமல் அடங்கிய பின்னும்
கூவுதல் நிறுத்தாதீர் குயில்களே!
பறத்தல் மறக்காதீர் அன்னங்களே!
முகிழ்தல் பிறழாதீர் பவளமல்லி மலர்களே!

இந்த பூமியில்
மாமரம் ஒரு மூலையிலும்,
அணிலாடும் தென்னை அடுத்த மூலையிலும்,
கொன்றைப் பூக்கள் மூன்றாம் மூலையிலும்,
பவளமல்லி நாலாம் மூலையிலுமாகக் காத்து நிற்கும்
இந்தக் காதல் வெளியில்
நாங்கள் மீண்டும் வந்து பிறக்க
நீங்களே எங்கள் ஆன்மாவுக்கு வழிகாட்ட வேண்டும்.

அவள் வளைக்கரங்கள் குலுங்க
காற்றில் எழுதிய முடிவுறாத கவிதைகள்
அங்குதான் என் கண்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன.
அவை வாசிக்கப்பட்டாக வேண்டும்.

மாம்பூக்களின் வாசத்தைச் சுமந்து செல்லும் முத்தங்கள்
கொன்றை மலரடியையும்,
கொன்றை மலர் வாசம் சுமந்துவரும் முத்தங்கள்
மாமரத்தடியையும்,
மறு ஜென்மத்திலாவது சென்று சேர்ந்தாக வேண்டும்.


$$$

Leave a comment