-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #47

47. காட்டு ராஜாவின் கடைசித் தருணம்…
மான் கூட்டத்தைச் சுற்றி வளைத்த காட்டு ராஜா
காட்டையே கதிகலங்கவைக்கும் தொண்டையை
மெள்ளக் கனைத்துச் சரி செய்யத் தொடங்கிய தருணத்தில்
எதிர்த்திசையில் இருந்து எழுந்தது கர்ஜனை.
தான் மென்று கொடுத்துப் புகட்டிய மாமிசத்தைத் தின்று வளர்ந்த
தன் குருளையின் தொண்டையில் இருந்துதான்
அது வந்ததென்பது தெரிந்தபோது
இடியோடு சேர்ந்து மின்னலும் தாக்கியது போலானது.
வேட்டைத் துரத்தலில்
தன்னைத் தாண்டிப் பாய்ந்து சென்ற
தனயன் முகத்தில் தென்பட்ட
அலட்சியப் புன்னகை.
தன் கூட்டத்தின் முன்
தலை நிமிர்ந்து அமர்ந்திருந்த போதெல்லாம்
தலை ஆட்டியபடி அருகில் அமர்ந்தவள்,
ஒவ்வொரு மென்னடியாக எடுத்துவைத்து
தன்னைக் கடந்து சென்று
அவன் பக்கம் அமர்ந்தபோது ஏற்பட்ட வலி.
அவள் அருகில் இருந்த வரைதான்
அரசனாக இருக்க முடிந்ததென்பது தெரிந்த
அந்தத் தருணம்.
மீண்டும் இன்னொரு மின்னலும் இடியும்
மிச்சம் இருந்த கெளரவத்தையும் கலைத்துப் போட்டன.
வேட்டைப் பங்கீட்டில்
வெளி விளிம்புக்குத் தள்ளப்பட்ட நாள்…
முண்டியடித்துச் கொண்டு
முன்னே சென்றவற்றின் கண்ணில் தென்பட்ட வெறுப்பு.
அடித்து விரட்டப்படும் முன்
அமைதியாக ஒதுங்கிவிட வேண்டும் என்பது புரிந்த தருணம்.
(தன் தந்தையைத் தானும் இதுபோல
அடித்து விரட்டியது நினைவுக்கு வந்து
சிங்கத்தின் கண்ணில் இருந்து
முதல் கண்ணீர்த்துளி உதிர்ந்த தருணம்).
ஓரங்கட்டப்பட்ட பின்
ஒவ்வொரு நாளையும் தனிமையில் கழித்தபோது
ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன
ஒரு காலத்து காட்டு ராஜாவுக்கு.
முதலில் பறிபோனது கர்ஜனை…
அதன் பின் போனது தலைமை…
அதன் பின் போனது நட்பு…
அதன் பின் சூழ்ந்தது பட்டினி…
இறுதியாக வந்தது முதுமை.
மிக மிக நீண்ட முதுமை……
பட்டினியில்
முதலில் ஒடுங்கியது குடல்…
அதன் பின் தளர்ந்தன கால்கள்…
அதன் பின் மங்கின கண்கள்…
அதன் பின் மூடின காதுகள்.
ஒவ்வொன்றாக ஒடுங்க ஒடுங்க,
வயிற்றில் அக்னி மட்டும்
வளர்ந்துகொண்டே இருந்தது
மென் சதைகளையெல்லாம்
விழுங்கிய வாய்கள் அடங்கிவிட்டன…
கூர் நகங்கள் உதிர்ந்துவிட்டன…
கோரைப் பற்கள் விழுந்துவிட்டன…
வயிற்றில் சுரக்கும் அமிலம் மட்டும் வற்றவே இல்லை.
எந்த வயிற்றில் சுரந்ததோ
அந்த வயிற்றையே அரிக்க ஆரம்பித்தது.
கால் சதைகள் முதலில் அரிக்கப்பட்டன…
கன்னச் சதைகள் அதன் பின் அரிக்கப்பட்டன…
உடலின் ஒவ்வொரு பாகமும் உள்ளுறிஞ்சப்பட்டன..
காட்டு ராஜா மரக்கட்டையானது.
*
சிங்கத்தின் கனவில் கர்ஜனைக் காலம் விரிந்தது…
ஒற்றைக் கர்ஜனையில்
ஒட்டு மொத்த காடும் அதிர்ந்த காலம்.
எந்தத் திசையில் இருந்து வருகிறது என்பதே தெரியாதவண்ணம்
அத்தனை விலங்குகளும் அரண்டு மிரளும் கர்ஜனை.
உயிரைக் கையில் பிடித்தபடி ஓடுபவற்றின் திசைகளில் எல்லாம்
கர்ஜிக்கும் சிம்ஹத்தின் குகைகளே முளைக்கும் அதிசயம்.
ஓடியவையெல்லாம்
சிங்கத்தின் கூர் நகங்களில் சிக்கின…
ஒடுங்கியவையெல்லாம்
சிங்கத்தின் கோரைப் பற்களில் சிக்கின…
அன்று அது இந்த சிங்கத்தின் காலமாக இருந்தது…
அன்று இது இந்த சிங்கத்தின் காடாக இருந்தது…
கைக்குக் கிடைத்த முதியவற்றை விட்டு,
காலடியில் இடறிய குட்டிகளை விட்டு,
விரைந்தோடும் இளம் கூட்டத்தை
விரட்டி விரட்டி வேட்டையாடிய காலம்.
அதைத் தொடர்ந்து
மெள்ளக் கனவிலும் கவிழ்ந்தது முதுமை…
நிலவொளியில் ஒளிரும் புல்வெளியில் மூத்த சிங்கம்
இல்லை இல்லை… முதிய சிங்கம்.
மண்ணோடு மண்ணாக
மரக்கட்டையாகப் படுத்திருக்கிறது.
சுற்றிலும் மேய்கின்றது காட்டுப் பசுக் கூட்டம்.
முதிய சிங்கம் கால்களை அசைக்கப் பார்க்கிறது-
முடியவில்லை.
வாலை வீசப் பார்க்கிறது – முடியவில்லை.
தாடையை அசைக்கப் பார்க்கிறது- முடியவில்லை.
கர்ஜிக்கப் பார்க்கிறது-
குரல் அதன் காதுக்கே விழவில்லை.
நா வறண்டு தவிக்கிறது.
முதன்முதலில் கொன்ற விலங்கின் கதறல் காதில் விழுகிறது…
முதலில் வேட்டையாடிக் குடித்த
உதிரத்தின் வெம்மை
உடம்பெல்லாம் தகிக்கிறது…
கூர் நகங்களால்
துடிக்கும் இதயத்தைக் கிழித்தபோது
அந்த மென் விலங்கின் கண்களில் தென்பட்ட கெஞ்சல்…
தப்பித்துவிட்ட சக விலங்கு புதர் மறைவில் நின்று
தவித்தபடியே அலறிய கதறல்…
காட்டு ராஜா கண்ணீர் வடிக்கிறது.
கனவுப் புல்வெளியில் மென் விலங்குகள் மேய்கின்றன…
நின்றாலே மறைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும்
இந்தப் பசும் புல்லைத் தின்றே வாழும்படி
என்னையும் படைத்திருக்கக் கூடாதா என் இறைவா?
ஓட ஓட விரட்டிக் கொன்ற உயிர்களின் சாபம்
ஓட அல்ல,
நடக்க அல்ல,
நகரக்கூட முடியாதபடி இப்படி என்னை
இத்தனை நீண்ட முதுமையில் முடக்கிப் போடவேண்டுமா?
மண்ணோடு மண்ணாகப் படுத்திருக்கும் அந்த வழியே
காட்டுப் பசுக் கூட்டம் கடந்து செல்கிறது.
மடி நிறைந்த தாய் ஒருத்தியின் கண்களில்
மடிந்து கொண்டிருக்கும் காட்டு ராஜா,
‘அடுத்த பிறவியில் எனக்கு
அரைத்து உண்ணும் தாடைகள் கொடு’ என்று
அண்டவெளியைப் பார்த்துக்
கையெடுத்துக் கும்பிடுவது தெரிகிறது.
சிங்கத்தின் இறுதி இறைஞ்சல் தாயின் காதில் விழுகிறது.
இறுதிக் கைகூப்பல் கண்ணில் தெரிகிறது
அருகில் சென்று நாவால் மெள்ள வருடுகிறது.
முலை உண்ணக்கொடுக்கிறது.
தடையற்றுச் சுரக்கிறது தாய்மை.
காட்டுப் பசுக்கள் கடந்து சென்ற பின்
சிங்கக் குருளை ஒன்று
குட்டிக்கரணம் அடித்தபடி ஓடி வருகிறது…
மூத்த சிங்கத்தின் முன்னால் வந்து விழுகிறது…
எழுகிறது.
நாவால் வருடுகிறது..
உலராத பால் துளி அதன் நாவில் ருசிக்கிறது.
அதில் இருந்தது
உதிரத்தை பாலாக்கிய அன்னையின்
ஒரு துளி உயிரன்றோ?
குருளையின் மரபணுவில்
மிக மென்மையாக ஏதோ ஒன்று தடம் புரள்கிறது…
இல்லை இல்லை…
சரியான தடத்துக்குத் திரும்புகிறது.
மூத்த சிங்கம்
இல்லாத பல் கொண்டு கடித்து
ஒரு புல்லிதழை குருளைக்கு ஊட்டுகிறது.
கண்களை மூடியபடி
பால் பற்களால் அதை மெள்ள மெல்லுகிறது குருளை.
பக்கவாட்டில் அசையத் தொடங்குகிறது அதன் தாடை.
நேற்றைய காட்டு ராஜா மெள்ளக் கண் மூடுகிறது…
நாளைய காட்டு ராஜா மெள்ளக் கண் திறக்கிறது…
$$$