-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #46

46. ஆழக் குழிதோண்டிப் புதையுங்கள்!
அந்தக் கண்கள்
நம்பி வந்ததால் கொல்லப்பட்ட
நாம சூத்திரர்களுக்குக் கண்ணீர் உகுக்கவில்லை.
சுயமாகச் சிந்திக்கும் நரம்பு அறுபட்டிருந்த சிறு மூளையை
சீனாக்காரனுக்கே கொடுத்துவிடலாம்.
காலாவதியாகிப் போன கொடியைப் பிடிக்கும் அந்தக் கைகள்
அத்தனை கால மாற்றங்களையும்
கண்மூடித்தனமாக மறைக்கவே பார்க்கின்றன.
(கணினிச் சூரியனைக் கூட
கமிஷன் கிடைக்கும் வரை
கட்டிப் போடத்தான் பார்த்தது).
அந்தக் கால்கள்
பாட்டாளிகளின் அத்தனை உரிமைகளையும்
படிக்கட்டாகப் போட்டு மிதித்து ஏறித்தான்
பன்னாட்டு கார்ப்பரேட்களின்
பக்கத்தில் போய் அமர்ந்துகொள்கின்றன.
நம் தேசத்தின் ஆன்மிக ஆன்மாவுக்கு எதிராகத்தான்
அனு தினமும் துடிக்கிறது
ஆரம்பத்திலிருந்தே அழுகிய அதன் இதயம்.
இந்த முதுகின் பின்னால்தான்
தேச விரோதக் கும்பல்கள்
திட்டமிட்டு மறைந்துகொள்கின்றன.
இந்த கம்யூனிஸ அடியாளின் தோளில்தான்
கார்ப்பரேட் மாஃபியா உட்கார்ந்து கொண்டிருக்கிறது.
ஒட்டிய வயிற்றுடன் அப்பாவித் தொண்டன்கள்
சுரங்க நடைபாதைகளில் உண்டியல் குலுக்க
பொலிட்பீரோ குண்டன்களுடன் சேர்ந்து
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில்
குளிர்பதன அறைகளில் குதூகலிக்கும் உடல் இது.
கேடுகெட்ட காங்கிரஸின்
அறிவிக்கப்பட்ட நெருக்கடி தேசத்துக்கு
அறிவிக்கப்படாத நெருக்கடி
அப்பாவி கம்யூனிஸ்ட்களுக்கு.
அத்தனை அடிகளையும் அவர்கள் வாங்க
அயர்ன் பண்ணிய சட்டை கசங்காமல்
ஆதிக்க எதிர்ப்பு அரசியல் செய்கின்றனர்
சூட்கேஸ் சியர் லீடர்கள்.
மாறி மாறிக் கழகங்களுக்கு
காவடி தூக்குவதையே
கலகச் செயல்பாடாகக் கருதும் கம்மனாட்டி தத்துவம்
இருந்தால் என்ன, இறந்தால் என்ன?
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்புடன்…
ஆதி மதம் ஒடுக்கப்பட்டவர்களின்
ஆனந்தப் பெருமூச்சு என்ற அடிப்படை அறிவுடன்…
தான தர்ம சிந்தனைகளே
தறிகெட்ட மனங்களின் தடுப்பு வேலி என்ற தெளிவுடன்…
ஆப்ரஹாமிய அதிகார மையத்தை
அசராமல் எதிர்க்கும் துணிவுடன்…
அடுத்த பிறவி எடுத்துவரும்படிச் சொல்லி
அழிவற்ற ஆன்மாவை அனுப்பிவைப்போம்.
பாட்டாளிகளின் பேரில் கட்சி நடத்திவிட்டு
பன்னாட்டுப் பணக்காரர்களுக்குப்
பல்லக்கு தூக்கியவர்களின் பாடையைக்கூட
சுடுகாட்டில் இருந்து திரும்பச்
சுமந்துகொண்டு வந்துவிடக் கூடாது.
காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுவிட வேண்டும்.
விஷக் காளான் படர்ந்த உணவு
சாக்கடையில் கொட்டப்பட்டுவிட வேண்டும்.
பொன்னுலகப் போர்வையில்
புதைகுழிக்குள் தள்ளும் கொள்கைகளை
ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு
அதன் மீது
அரை மூட்டை உப்பையும் கொட்டி மூடிவிட வேண்டும்.
இருந்தபோதே உருப்படாத குப்பை
மறு சுழற்சியில் மட்டும் மாணிக்கமாகிவிடுமா என்ன?
$$$