-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #45

45. கறுப்பு தேவதைகள் சிம்மவாஹினிகள் ஆகட்டும்!
ஆதியிலிருந்தே நாங்கள்
அந்தகக் கறுப்பு உடை போர்த்திக்கொண்டுதான் இருக்கிறோம்.
பால்யத்தில் தந்தை…
பருவத்தில் கணவர்…
முதுமையில் மகன் என…
ஒன்றுக்கு மூன்று மடங்கு அன்பு கிடைத்ததை
ஒடுக்குமுறையாக நீங்கள் சொன்னபோது,
நாங்கள் அந்த மூவராலும்தான்
கறுப்பு உடைக்குள் திணிக்கப்பட்டிருந்தோம்.
பெண்ணை வைத்து ஆடுவதற்கு முன்
தம்பிமார்களையும்
தன்னையும் வைத்து ஆடித் தோற்றவனை
ஆகக் கொடிய அயோக்கியனாக
நீங்கள் சொன்னபோது
ஒருவர் அல்ல…
அதுபோல ஓராயிரம் பேரை
ஒரு லட்சம் பேரை
ஒரு கோடி பேரை
அடிமைச் சந்தையில் விற்றவர்களின் பக்கம் நின்றே
அதைச் சொன்னீர்கள்.
அப்போதும் நாங்கள்
அதே கறுப்பு உடைக்குள் அடிமையாக
உங்கள் கண் முன்னால்தான் நின்றிருந்தோம்.
அங்கு ஒரே ஒரு திரெளபதி
ஒரே ஒருமுறை
அதுவும் கடைசியாகப் பணையம் வைக்கப்பட்டாள்
இங்கு..?
மாதவிலக்கு ஆரம்பிக்கும் காலம் தொடங்கி,
அது நிற்கும் காலம் வரையிலும் மட்டும்
அனுமதிக்கப்படாத ஒற்றைக் கோயிலைச் சுட்டிக்காட்டி
ஆணாதிக்கத்தின் ஆகக் கொடூரம் என்று
மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினீர்களே,
பெண்ணாகப் பிறந்த ஒற்றைக் காரணத்துக்காக
எல்லையற்ற அருளாளனின் முன்னால்
மண்டியிட்டு மன்றாடக்கூட அருகதையற்றவராக
வாழ்நாள் முழுவதும் முடக்கப்பட்ட நாங்கள்
உங்கள் அருகில்
அதே மனிதச் சங்கிலியில் கை கோர்த்தபடிதான் இருந்தோம்.
சொல்ல மறந்துவிட்டேனே
அதே கறுப்புப் பர்தாவைப் போர்த்தியபடிதான்
அங்கும் நின்றுகொண்டிருந்தோம்.
தினம் தினம் ஆண்களைத் தொழுகைக்கு
உரத்த குரலில் அழைக்கும் பாங்கொலி
எங்களை வராதே வராதே என விலக்குகிறது.
ஒரே ஒரு நாளில் மட்டுமே
சேவல் கூவும் முன்
அதுவும் மூன்றுமுறை மட்டுமே
தேவ குமாரன் மறுதலிக்கப்பட்டான்.
நாங்களோ சேவல் கூவும் ஒவ்வொரு தினமும்
ஐந்து முறை மறுதலிக்கப்படுகிறோம்.
வர நினைக்காதே… வராதே… வந்துவிடாதே…
வந்தால் தொலைந்தாய்… வந்தால் திரும்ப மாட்டாய் என,
வைகறை, நண்பகல், பிற்பகல், பின் மாலை, இரவு என
ஒவ்வொரு இனிய தருணத்திலும்
ஒரே மிரட்டல் ஒவ்வொரு வடிவில்.
வேத காலத்திலிருந்தே வித்தைகள் அனைத்தும்
கற்ற பெண்களும் கற்பித்த பெண்களும் நிரம்பிய தேசத்தில்,
மலாலா படிப்பகங்களை ஆரம்பிக்கிறீர்கள்.
நேற்று பள்ளிக்குச் சென்றதால் சுடப்பட்ட…
இன்று பள்ளிக்குச் சென்றால் சுடப்படும் …
நாளை பள்ளிக்குச் சென்றால் சுடப்படவிருக்கும்…
மலாலாக்கள் நிறைந்த தேசத்தில் அல்லவா
சரஸ்வதி மையங்களை ஆரம்பிக்க வேண்டும்?
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு…
எங்களை வைத்தல்லவா எழுதப்பட்டிருக்க வேண்டும்?
ஒளவையும் காரைக்கால் அம்மையும் தொடங்கி
கண்ணகியும் மணிமேகலையுமாக வளர்ந்து
ஜான்சி ராணியாகவும் மங்கம்மாவாகவும் கோலோச்சி
ஆயிரமாயிரம் ஆணுக்கு நிகராக
அத்தனை துறைகளிலும்
நிமிர்ந்த நடைபோட்டவர்களிடமும்
நேர்கொண்ட பார்வையுடன் அதற்கான
நியமங்கள் வகுத்துத் தந்தவர்களிடமும் சென்று
வாய்ச்சவடால் பேசும் விடியா மூஞ்சிகளே,
எங்கள் திருமண விழா மேடையில்
கறுப்பு பர்தா போர்த்திக்கொண்டு நிற்கக்கூட
எங்களுக்கு இடம் கிடையாதென்பது தெரியுமா தெரியாதா?
பெண் உடலைப் பார்த்தால்
காமம் தலைக்கேறுமென்றால்
கண்களுக்குக் கறுப்புப்பட்டி மாட்டிக்கொள்.
அல்லது
குறிகளுக்குக் கூர் ஆணிகள் கொண்ட பூட்டு போட்டுக்கொள்..
என்று பேச எந்தத் தூயவதிக்கும் துணிச்சல் இல்லையே!
உங்கள் அனைவருக்கும் நிறக்குருடா…
காவி மட்டுமேதான் உங்கள் கண்ணுக்குத் தென்படுமா…
அதையும் கிழித்தெறிய மட்டுமே
உங்கள் கைகள் துடிக்குமா..?
எங்கள் இந்தக் கறுப்பு பர்தாவை
காவிக்கு மாற்றிக்கொண்டால்
அடுத்த நிமிடமே உங்கள் கண்களில் பட்டுவிடும் அல்லவா
அதற்கு அடுத்த நொடியே அந்தப் பர்தாவை
கிழித்தும் எறிந்துவிடுவீர்கள் அல்லவா…?
அப்படியானால்
எங்களை இறுக்கிப் போர்த்தும்
இந்தக் கறுப்பு பர்தாவிலிருந்து விடுதலை பெறும் சாவியும்
அந்தக் காவியில்தான் இருக்கிறதா?
அல்லது அதைப் பார்த்ததும்
புனித ஜிஹாத் போராளிகள் போல
கூண்டோடு எரித்தோ
நீருக்குள் மூழ்கடித்தோ கொன்றுவிடுவீர்களா?
தனித்தனி கல்லறைக்கு
தனித்தனி மண்ணள்ளி போட்டுமூடச் சோம்பல் பட்டு
பிரமாண்ட குழியின் விளிம்பில் நிற்கவைத்து
சுட்டுச் சுட்டு குழியை நிரப்பி
ஒரே டோஸரால் ஒரே லோடு மண்ணை அள்ளிப் போட்டு
அதன் மேல் புனித மசூதி ஒன்றைக் கட்டிக் கொண்டு போய்விடுவீர்களா…
எதுவானாலும் பரவாயில்லை…
எந்தக் கறுப்பும் இனி
எங்களை மூடக்கூடாது.
எங்கள் நிழலுக்கு இனி
நீலச் சாயம் பூசுவோம்.
எங்கள் உடல்; எங்கள் உடை என்பது
எங்கள் உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டிய முழக்கம்.
உங்களின் புரட்டுப் போராளிக் குரலாக அல்ல.
அன்புக்குரிய இந்து சகோதர சகோதரிகளே
எங்கள் கறுப்பு பர்தாவுக்கு
காவிச் சாயம் பூசிக் கொள்கிறோம்.
எங்கள் கூட்டம் அதை அப்போதுதான் கிழித்தெறியும்.
தூணைப் பிளக்கும்போது வெளிப்படும் நரசிம்மமாக
காவிப் பர்தாவைக் கிழிக்கும்போது
சிம்ம வாஹினிகளாக கர்ஜித்து வெளியே வருகிறோம்.
அந்தக் காவியே எங்களுக்கு
அந்த வலிமையைக் கொடுக்கும்.
வேறென்ன,
அதர்மம் உச்சத்தை எட்டும்போதுதானே
அவதாரம் நிகழ முடியும்?
அது நிகழட்டும்.
$$$