உருவகங்களின் ஊர்வலம்- 44

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #44

44. உயரங்களின் விதி அதுவே!

உங்கள் படைகளுக்கான யானை, குதிரைகளை
எங்கள் லாயங்களில் இருந்தே திருடிச் செல்கிறீர்கள்.
உங்கள் ஆயுதத் தளவாடங்களை இழுத்துச் செல்ல
எங்கள் காளைகளையே கடத்திச் செல்கிறீர்கள்.
உங்களுடைய படைகளின் உணவுக்கு
எங்கள் தானியக் கிடங்குகளையே சூறையாடுகிறீர்கள்.
உங்களுடைய போரை
எங்கள் ஆயுதங்களைக் கொண்டே நடத்துகிறீர்கள்.
உங்கள் ஆயுதங்களைக் கைப்பற்றி
உங்களைத் தாக்கலாம் என்று நினைத்தால்
அதிலும் நாங்கள் தோற்கவே செய்கிறோம்.
ஏனென்றால்
எங்கள் கோட்டைகளுக்குள்ளிருந்தே
எங்கள் மீதான தாக்குதலைத் தொடுக்கிறீர்கள்.
நாங்கள் எய்யும் ஈட்டிகள் எல்லாம்
கைவிட்டுப் போன எங்கள் கோட்டை மீதான
தாக்குதலாக இருந்தால்கூடப் பரவாயில்லை.
அதன் காவலர்களாக நிறுத்தி வைத்திருக்கும்
எங்களவர் மீதே பாய்கின்றன.
ஆம்,
எங்களைக் கொண்டே எங்களைத் தாக்குகிறீர்கள்.

உங்கள் போர் முகாம்களைத் தாக்க விரையும்
எங்கள் போர்விமானங்கள்
வானில் தவித்தபடி வட்டமிடுகின்றன.
ஏனென்றால்
எங்களவர்களைப் பிணைக்கைதிகளாக
எல்லா இடங்களிலும் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்.
செஞ்சிலுவைக் குறியிட்ட மருத்துவ முகாம்களுக்குள் ஒளிந்துகொண்டு
எங்கள் மீது தாக்குகிறீர்கள்.
பதில் தாக்குதல் நடத்தினால்
அப்பாவி நோயாளிகளைத் தாக்கியதாக
ஐ.நா.சபையில் விசாரணைக்கு உத்தரவிடுகிறீர்கள்.

*

நாமெல்லாம் ஒன்று என்று எங்களவரை
எம் பக்கம் இழுக்கவும் முடியவில்லை.
நம்மை எதிர்க்கிறார்கள் என்று அவர்களை
எம்மால் தாக்கவும் முடியவில்லை.
இதோ எம் தளபதியே
எமக்கு எதிரே கச்சைகட்டிக் கொண்டு நிற்கிறார்.
இதோ எம் நண்பர்களே எமக்கு எதிரே நிற்கிறார்கள்.
இதோ எம் உறவினர்களே வில்லேந்தி எதிரே நிற்கிறார்கள்.
எங்கள் அர்ஜுனர்கள் மனம் சோர்ந்து
ஆயுதங்களைக் கீழே போடுகிறார்கள்..

கண்ணன் தன் கீதை உரையை ஆரம்பிப்பதற்குள்
க்ரிப்டோ கர்ணனின் நாகாஸ்திரம்
கழுத்தைத் துண்டித்துவிடுகிறது.

*

உங்கள் பக்கம் இல்லாதவரெல்லாம்
உங்களுக்குத்தான் எதிரி.
எங்களுக்கு எதிரில் நிற்பதாலேயே யாரையும் நாங்கள்
எங்கள் எதிரியாகக் கருதுவதில்லை.
அப்படியிருக்க
எங்களுக்கு எதிரில் நிற்கும் எங்களவரை
எப்படி எதிர்க்க எங்களால் முடியும்?

இரு தரப்பிலும் சிந்தும் ரத்தம் எம்முடையதே.
இரு தரப்பிலும் உருளும் தலைகள் எம்முடையவையே.
எங்களுடைய நட்புறவின் கொடிகளில்
ஏன் தெறிக்கின்றன ரத்தத் துளிகள்?

எங்கள் வீரமெல்லாம்
இவ்வளவு அபத்தமாகியிருக்க வேண்டாம்.
எங்கள் தீரமெல்லாம்
இவ்வளவு அபாயமாகியிருக்க வேண்டாம்.
எங்கள் தியாகமெல்லாம்
இவ்வளவு வீணாகிப் போக வேண்டாம்.
எங்கள் பலிதானமெல்லாம்
இவ்வளவு மலினமாகியிருக்க வேண்டாம்.
எங்கள் வியூகமெல்லாம்
இத்தனை குழப்பமடைந்திருக்க வேண்டாம்.

உங்கள் நாட்டில் அமைதி நிலவச் செய்கிறீர்கள்-
உலக நாடுகளின் அமைதியைக் கெடுத்தபடி.
உங்கள் நாட்டில் வளம் கொழிக்கச் செய்கிறீர்கள்-
உலக நாடுகளைச் சுரண்டியபடி.
உங்கள் நாட்டில் ஜனநாயகம் தழைக்கச் செய்கிறீர்கள்-
உலக நாடுகளில் சர்வாதிகாரம் செய்தபடி.
உங்கள் நாட்டில் சுதந்திரம் நிலவச் செய்திருக்கிறீர்கள்-
உலக நாடுகளை அடிமைப்படுத்தியபடி.
உங்கள் நகரங்கள் தூய்மையாக வைத்திருக்கிறீர்கள்-
உலக நாடுகளைக் குப்பைக் கூடையாக்கியபடி.

ஒருத்தியை பட்டத்து மகிஷியாக்கிவிட்டு
உலக மகளிர் அனைவரையும்
உங்கள் அந்தப்புர மகளிர் ஆக்கிவிட்டீர்கள்!

*

பல வீரர்களை பலி கொடுத்து
பிணைக் கைதிகளை தீவிரவாதிகளிடமிருந்து மீட்ட
பாதுகாப்புப் படையினரின் முகத்துக்கு நேரே
நடுவிரல் காட்டுகிறார்கள்,
நல்லபடியாகக் காப்பாற்றப்பட்டவர்கள்.

கடத்திச் சென்ற கயவர்களில் ஒருவன்
கர்ப்பிணிப் பெண் ஒருத்திக்கு
கால் நீட்டிப் படுத்துக்கொள்ள கருணை காட்டினானாம்.
தவித்த வாய்க்கு ஒரு மிடறு தண்ணீர் கொடுத்தானாம்.

நாங்கள் எதற்குப் போரிட வேண்டும்?
நாங்கள் எதற்குக் காப்பாற்ற வேண்டும்?
நாங்கள் யாருக்காகப் போரிடுகிறோம்?
போர்வீரனின் கதறலைக் கேட்டு
கள்ளத்தனமாகச் சிரிக்கின்றன
பிணந்தின்னிக் கழுகுகள்!

*

பூர்வகுடி அழித்தொழிப்புக்கு
காலனியக் கொடுமைகள் மேல்;
காலனியக் கொடுமைகளுக்கு
கார்ப்பரேட் சுரண்டல்கள் மேல்;
ஆரம்பத்தில் இரும்பு ஆணிகள் கொண்ட சாட்டை
அதன் பின் கம்பால் அடி.
இப்போது கண்ணாலே மிரட்டுகிறார்கள்.
எல்லா காலங்களிலும் சொல்லும் ஒரே உத்தரவு
என் முன் மண்டியிடு.

கண்ணால் மிரட்டினாலே மண்டியிட்டு விடும்போது
கம்பும் சாட்டைகளும் தேவையே இல்லையே.
நுண்ணுணர்வு கொண்ட மனங்களுக்கே
மண்டியிட்டு நிற்பது புரிகிறது.
மாயச் சாட்டைகளின் வீச்சு வலிக்கிறது.
மரத்துப் போன உடல்கள்
என்றோ நடந்ததை நினைத்து ஏன் புலம்புகிறாய் என்கின்றன.
உங்களுக்கு இன்றைய நிலை புரிய வேண்டுமென்றால்
ஒரே ஒரு முறை திமிறிப் பாருங்கள்.

*

இன்று படையெடுப்புகள் இல்லை.
ஆனால்,
எல்லைகள் எப்போதோ ஊடுருவப்பட்டுவிட்டன.
(எதிரிகள் எல்லோருடைய முதுகுக்குப் பின்னாலும் இருக்கிறார்கள்).

அசந்து தூங்குபவர் கண் திறந்து பார்த்தால்
அங்கே ஒருவர் ஆயுதத்துடன் இருப்பார்.

ஆலய இடிப்புகள் இல்லை;
ஆனால் ஆகமங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
அடிமைச் சந்தைகள் இல்லை;
ஆனால்,
வளர்ப்பு மிருகங்களாக்கப்பட்டுவிட்டனர்.

படுகொலைகள் இல்லை;
பாலியல் வன்கொடுமைகள் இல்லை;
பூர்வகுடிகளின் எண்ணிக்கை மட்டும் குறைந்து கொண்டிருக்கிறது.
ஜெஸியா வரி இல்லை;
அதீத சிறுபான்மைச் சலுகை மட்டுமே இருக்கிறது.

செயற்கைப் பஞ்சம் இல்லை.
மரபணுக்கள் மாற்றப்பட்டுவிட்டன.
ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் இல்லை;
தேசியக் கொடி மட்டுமே கிழிபடுகின்றது..
நெசவாளர்களின் கைகள் உடைக்கப்படுவதில்லை;
பாரம்பரிய உடைகள் ஓரங்கட்டப்பட்டு
பனிப்பிரதேச உடையே
பாலையாகும் நிலத்துக்கும் போர்த்தப்படுகின்றன.

*

நம் அர்ச்சக அரசர் தான் இப்போது ஆள்கிறார்
ஆனால், ஆலயங்கள் நம் வசம் இல்லை.
அதிகாரமும் நம் வசம் இல்லை.

கோயில்களில் கூட்டம் குவிகின்றன-
பக்தி வெளியேறிவிட்டது.
அம்பானிகளும் அதானிகளும்தான் கோலோச்சுகிறார்கள்.
ஆனால்
அவர்களைத் தவிர அத்தனை வணிகமும்
ஆப்ரஹாமியர் வசம் போய்விட்டது.

அம்பானி குடும்பத்திலும்
ஒரே ஒரு ஆப்ரஹாமியர் ஊடுருவினால் போதும்
அத்தனையும் அப்படியே
அந்தப் பக்கம் உறிஞ்சப்பட்டுவிடும்.

*

நாத்திக அரசும் அன்னதானம் போடுகிறது…
ஆலயத் திருப்பணிகள் செய்கிறது…
தேர் இழுக்கிறது…
தெருவில் உருளுகிறது…
பல்லக்குத் தூக்குகிறது…
சமாதியில் பஜனையும் செய்கிறது…
அதனால்,
எங்கள் அரசியல்வாதிகளும்
ஆன்மிகம் வளார்க்கிறார்கள்.

பிரச்னையே அங்குதான் இருக்கிறது.
உங்கள் அரசியல்வாதிகள் செய்யும்
ஆன்மிகமும் அரசியலே.
அது புரியாமல் எங்கள் அரசியல்வாதிகள்
ஆர்வமிகுதியுடன் ஆன்மிகம் பேசுகிறார்கள்.
புரிகிறதா….

அரசியல் செய்யவேண்டியவர்கள்
ஆன்மிகம் பேசும் அபத்தம்
ஒரு போர்வீரன் துவக்கைக் கீழே போட்டுவிட்டு
மலர் கொத்தைக் கையில் ஏந்தி நிற்கும் அபத்தம்.

உங்கள் தரப்பிலிருந்து
ஒரு அப்பாவி
சந்தன மாலை அணிவிக்க வந்தால் கூட
மடியில் பெல்ட் பாம் கட்டிக்கொண்டுவருவாள்.
எங்கள் தலைவிகள் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் கூட அணியாமல்
ஃபுல்லி லோடட் மிஷின் கன்களின் முன்னால் வந்து நிற்பார்கள்
(அதாவது அந்த நேரம் பார்த்து
அந்தக் காவலர்கள் அங்கு சென்று சேர அந்தக் கதவுகள்
உள்புறம் இருந்தே திறந்துவிடப்படும்)

எங்களுக்கான அரசியல் வியூகங்களுமே
உங்களால்தான் வகுத்துத் தரப்படுகின்றன.
ஆன்மிகக் குழப்பங்கள் உங்களுக்கு அறவே கிடையாது.
லெளகிகம்…
இந்த உலக வாழ்வு…
மத அரசியல்
ஜீவனும் சத்தியமும்
உங்களுக்கு அதுவே.

உங்கள் பாதிரி ஒரு காயத்துக்கு மருந்திட்டால்
அதற்கு முன் சிலுவைக்கு முத்தமிட்டுவிட்டே
களிம்பு பூசுவார்.
(அநேகமாக அந்த சிலுவையால் கீறிய காயமாகவே அது இருக்கும்).

அடுத்த நிமிடமே
காயம்பட்டவரும் சிலுவைக்குறி இட்டாக வேண்டும்
இல்லையென்றால் இட்ட களிம்பை
புண்ணோடு கீறி வழித்துக்கொண்டு போய்விடுவார்.

ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி ஓடவிட்டாலும்,
கஞ்சா கடத்தலுக்கும்
கத்தியால் வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பவும்
புக் ஆகாமல் இருந்தாலே
மருத்துவமனை நோக்கி பயணம் செய்யும்.

நீங்கள் கொடுக்கும் கல்வி என்பது
அறியாமையைப் பெருக்கும்…
குடும்பத்தில் இருந்தும்
மரபில் இருந்தும் துண்டிக்கும்…

நீங்கள் எழுதும் வரலாறு
பூர்வகுடிகளின் மண்டையோட்டுக்கு
நீங்கள் நிர்ணயித்த விலை பற்றிப் பேசாது….
அவர்களின் தோலைக் கிழித்து
நீங்கள் செய்த முரட்டுக் காலணிகள் பற்றிப் பேசாது….
கடுங்கோடையிலும் அதைவிடக் கடும் பனியிலும்
கால்நடையாக , ஆம், கால்நடையாகவே
கண்டத்தின் ஒரு கோடியிலிருந்து
மறு கோடிக்கு துரத்திக் கொன்றதைப் பேசாது….

ஒற்றை வரி மன்னிப்புடன்
ஒட்டுமொத்த அராஜகங்களையும் கடந்துவிடும்.
காலனிய தேசங்களைக்
கைதூக்கிவிட்டேன் என்று கதைவிடும்.

உண்மைதான் நீங்கள் ஆளப்பிறந்தவர்கள்தான்.
உங்களுக்கான போரை
நாங்கள் போட்டுக் கொண்டிருக்கும்வரையில்
நீங்கள் ஆளாமல் யார் ஆள முடியும் இந்த அகிலத்தை?

ஆனால்,
எத்தனை உயரத்தில் இறுமாந்து நிற்கிறீர்களோ,
அத்தனை அதலபாதாளத்தில்
அலறிக் கொண்டு விழுவீர்கள்!
உயரங்களின் விதி அதுவே…
சதிகளின் முடிவு அதுவே…
சாம்ராஜ்ஜியங்களின் கதி அதுவே…
துரத்தித் துரத்தி வேட்டையாடிய டைனசர்கள் அழியும்…
துரத்தப்பட்டவற்றின் முன்னங்கால்கள் இறக்கைகளாகி
சுதந்தர வானில் முடிவற்றுப் பறக்கும்.

அது நடக்கும்.
அதுவே நடக்கும்.

$$$

Leave a comment