-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #42

42. வலி தரும் ஒரு துளி!
உலகிலேயே மிக மிகக் கொடூரமான வலி தரக்கூடியது
சூடேற்றிய கத்தியால் குத்தி
குடலை உருவிப் போடுவது அல்ல,
நாவினால் சுடுவதும் அல்ல.
கழுத்தை மென்மையாக அறுத்து
முழு ரத்தமும் சொட்டுச் சொட்டாக
வடிந்து சாகும்வரை
வலியை அனுபவிக்கச் செய்வது அல்ல;
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதும் அல்ல.
கதறக் கதற பாலியல் கொடுமை செய்வது அல்ல
கதவை முகத்துக்கு நேரே அறைந்து சாத்துவதும் அல்ல.
கூர் ஆணிகள் பொருத்தப்பட்ட கட்டையால்
அடித்தே கொல்வது அல்ல.
தூக்குக் கயிறு மாட்டித் துடி துடிக்கக் கொல்வது அல்ல.
கயிறால் கட்டி வைத்து
ஊர் கூடிக் கல்லால் அடித்துக் கொல்வதும்கூட அல்ல.
இவை எல்லாவற்றையும்விடக் கொடியது ஒன்றுண்டு
ஒன்றே உண்டு.
சொட்டுச் சொட்டாக
நீர்த்துளிகளை
உச்சந்தலையில்
முடிவற்றுச் சொட்டிக்கொண்டே இருக்கவைப்பதுதான்.
நம்ப முடியவில்லையா?
உங்கள் மீது தவறில்லை.
தண்ணீர் பொதுவாகவே மிக மிக லேசானது.
ஒரு துளி என்பது உலகத்திலேயே அதி மென்மையானது
சொட்டுச் சொட்டாகச் சொட்ட வைப்பதில்
எந்தவொரு விபரீதமும் இருக்க வாய்ப்பில்லை.
ஆக்ரோஷமாகக் கொட்டும்
அருவி நீரையே தாங்கும் தலை
ஒற்றைச் சொட்டுகளைத் தாங்காதா என்ன என்கிறீர்களா?
வேண்டாம்.
நான் சொல்வதை நம்புங்கள்…
இந்த உலகிலேயே அதி கொடூரமான சித்ரவதை
ஒவ்வொரு சொட்டாக உச்சந்தலையில் சொட்டவைப்பதுதான்.
அமிலத் துளிகளோ
வெந்நீரோ
கொதிக்கும் எண்ணெயோகூட அல்ல.
மாசடைந்த வளிமண்டலத்தினூடாகப் பொழியும்
மழைத்துளி போன்ற துளிகள் போதும்.
ஒரு நிமிடத்துக்கு பத்து துளிகள்
அதாவது ஆறு நொடிக்கு ஒரு துளி என்று
மிக மிக நிதானமாகச் சொட்டுவதாக இருந்தால்கூடப் போதும்.
முதலில் சொட்டும் துளிகள்
மெதுவாகத் தூவும் சாறல் போலவே இருக்கும்.
உங்களுக்கு ஷவர் துளிகள் என்று சொன்னால்தான் புரியும் அல்லவா?
நல்லது
அப்படித்தான் ஆரம்பத்தில் சிலிர்க்க வைக்கும்.
மெள்ள மயிர்க்கால்களைத் தாண்டி
உச்சந்தலையின் மேல் தோல் நையத் தொடங்கும்.
அப்போது லேசாக வலிக்கத் தொடங்கும்.
சொட்டும் துளிகள் அதற்கு மருந்திடுவதுபோல் கூட
சிறிது நேரம் இருக்கும்.
சிறிது நேரம் மட்டுமே.
அதன் பின்
மேல் தோல் புண்ணாகிய பின்
சதையில் ஒவ்வொரு துளியாகச் சொட்டும்.
சதை மெள்ளச் சிதைந்து ரத்தம் கசியத் தொடங்கும்.
சொல்ல வருவது புரிகிறதா?
தலையில் குழி விழத் தொடங்கும்.
அதனால் என்ன…
சதை சிதைந்து மண்டை ஓட்டில் விழத் தொடங்குகையில்
இந்த வலியெல்லாம் நின்றுவிடும்.
கல்லைவிடக் கடினமான எலும்பை
இந்த நீர்த்துளி என்ன செய்துவிடும் என்று தோன்றுகிறதா?
நல்லது.
இனியும் இதமாகச் சொன்னால் புரியாது.
மண்டை ஓட்டில் விழும் ஒவ்வொரு துளியும்
இடி போல் இறங்கத் தொடங்கும்.
ஒவ்வொரு சொட்டு விழும்போதும்
ஒவ்வொரு கூர் ஆணியை அடித்து இறக்குவதுபோல இருக்கும்.
மண்டை ஓடு மெள்ள மெள்ள அரித்து, உடைந்து
மூளையின் மிக மென்மையான நரம்புகளில் சொட்டும்போது
உடல் முழுவதும் மின் அதிர்வுகள்
வெட்டி வெட்டிப் பாயும்.
அதாவது,
உங்களுக்குப் பைத்தியம் பிடிக்க ஆரம்பிக்கும்.
உடம்பில் அத்தனை உறுப்புகளும்
உங்கள் கட்டுப்பாட்டில் இருந்து கழறத் தொடங்கும்.
கைகள் கால்கள் கட்டிப் போடப்பட்டிருக்கும்.
திமிறத் தொடங்குவீர்கள்.
கட்டியிருக்கும் கயிறுகள்
அந்தந்த உறுப்புகளை அறுக்கத் தொடங்கும்.
இதற்கும் சொட்டும் துளிக்கும்
நேரடி சம்பந்தம் கிடையாது.
ஆனால், ஒவ்வொரு சொட்டின் போதும்
கால், கை கட்டுகளை அறுத்தெறிய முயற்சி செய்வீர்கள்.
ஆக,
தலையில் மென்மையான நீர் சொட்டச் சொட்ட
கால் கை நரம்புகள் அறுந்து
ரத்தம் பெருகத் தொடங்கும்.
வேறு வழியில்லை.
முழுவதும் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.
புத்தி பேதலிக்கத் தொடங்கியிருக்கும்.
என்றாலும் வார்த்தைகள், குரல் எல்லாம்
எந்த பாதிப்புக்கும் ஆளாகியிருக்காது.
அதாவது உரத்த குரலில் அலறுவீர்கள்.
வசைகள் பெருகும்.
வார்த்தைகள் அர்த்தம் இழந்துவிடும்.
வலி மட்டுமே ஒரே உணர்ச்சியாக இருக்கும்.
அது சீக்கிரம் முடியவும் செய்யாது.
சொட்டுச் சொட்டாக வலிக்கும்.
சொட்டுச் சொட்டாகத் துடிப்பீர்கள்.
சொட்டுச் சொட்டாக இறப்பீர்கள்.
சீக்கிரம் கொன்றுவிடு என்று
ஜெபிக்கத் தொடங்குவீர்கள்.
புரிகிறதா,
உங்கள் கணீரென்ற குரலில்
என்னைக் கொன்றுவிடு
என்னைக் கொன்றுவிடு என்று
எல்லா தெய்வங்களையும் நோக்கி அரற்றுவீர்கள்.
தன்னந்தனியாக
சஹஸ்ர நாமாவளி அல்ல,
லக்ஷார்ச்சனை அல்ல,
கோடி கோடி அர்ச்சனை
நீங்கள் ஒருவர் மட்டுமே
சொல்லி முடிக்க வேண்டியிருக்கும்.
அது ரொம்பவே வலிக்கும் என்று சொன்னால் நம்புங்கள்.
அப்படியான துளிகள் முடிவற்றுச் சொட்டும்போது
தெய்வமே…
இந்த வலியை மற்றவர் யாருக்கும் கொடுத்துவிடாதே என்று
மானசீகக் கரங்கள் கூப்பிச் சூனியவெளி பார்த்துக்
கதறும் ஆன்மா சொல்வதை அப்படியே நம்புங்கள்.
அதன் வேண்டுதல்தான் அந்த வலியை
நீங்கள் அனுபவிக்காமல் மட்டுமல்ல;
புரிந்துகொள்ள முடியாமல் தடுக்கவும் செய்துவிடுகிறது.
உங்களுக்கு அந்த ஆன்மா செய்யும் மிகப் பெரிய உதவி
தனக்குத்தானே வெட்டிக்கொள்ளும் குழியாகவும் இருக்கிறது.
என்றாலும்
யாரோ உற்றுப் பார்க்கிறார் என்பதைத்
திரும்பிப் பார்க்காமலே உணர்வோமே
அதுபோல
ஓர் ஆன்மா அதீத வலியில் துடிக்கிறது என்பதை
ஒரு நொடியாவது புரிந்துகொள்ளுங்கள்.
அது போதும்.
*
சொட்டுச் சொட்டாக
உச்சந்தலையில் விழும் நீர்த்திவலை தான்
உலகிலேயே ஆகக் கொடிய வலி தரக்கூடியது என்றேன் அல்லவா?
அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
அந்த வலி
அடுத்தவரிடம் உதவி கேட்டுக் கெஞ்சவும் வைக்கும்.
ஆனால்,
அது அவர்களுக்குப் புரியவே செய்யாது.
ஏனென்றால்,
உலகிலேயே மிக மென்மையானது நீர்
அதிலும் சிறு துளி என்பது…
அருவி நீரையே தாங்கும் தலை….
நல்லது,
நீங்கள் ஒரு வலியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்
நீங்கள் அதைச் சற்றேனும் அனுபவித்தால்தானே முடியும்?
அதை உங்களுக்குப் புரியவைத்தால்
நிச்சயம் உதவ ஓடோடி வந்து விடுவீர்கள்.
உங்கள் மென்மையான கரம் நீட்டி
சில நிமிடங்களாவது
சொட்டும் துளிகளைத் தடுக்கலாமென்று நினைப்பீர்கள்.
ஆனால்,
உங்கள் கையில் குழி விழ ஆரம்பித்துவிடும்.
முடிவற்றுச் சொட்டும் நீர்த்திவலைகளிலிருந்து
கை நீட்டித் தடுத்துக் காப்பாற்ற வரும் கைகளில்
குழி விழவைக்க எப்படி மனம் வரும்?
உதவி கேட்டுக் கூக்குரல் எழுப்பிய ஆன்மாவில்
விழும் குழியாக அல்லவா அது ஆகிவிடும்?
ஆனால்,
அந்தச் ‘சிறிய’ வலியைத் தராமல்
இந்த உச்சந்தலையில் சொட்டும் வலியை
இன்னொருவருக்கு எப்படிப் புரியவைக்க?
முன்னால் போனால் கடிக்கும்…
பின்னால் வந்தால் உதைக்கும்…
தனக்குள் தாங்கிக் கொண்டால் உடல் வலி.
தடுத்துக் காப்பாற்ற உதவி கேட்டால் ஆன்மாவில் வலி.
பற்றிக்கொள்ள கொம்பு தேடும் தவிப்பினும் கொடியது
கிடைக்கும் கொம்பின் கழுத்தை நெரிக்கும்
படர்கொடியின் கையறு நிலை.
நீருக்குள் தத்தளிப்பவர்
உதவிக்கு வருபவரை அழுத்தும் அபாயம்
ஆக, ஒவ்வொரு சொட்டாக
உச்சத்தலையில் அறையப்பட்டுக் கொண்டிருக்கும் ஆணி தரும் வலியை
அடுத்தவர் கைகளில் அறையாமல்
புரிய வைக்கவும் முடியாது.
தலையில் சொட்டும் வலியைவிட
அதைச் சொல்லவும் முடியாமல்
சொல்லாமல் இருக்கவும் முடியாமல் இருக்க நேர்வது
அதிகம் துடிக்க வைக்கும்.
அவரவர் தலைக்கு மேல் இருக்கும் வானத்தை
அவரவர் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
அவரவர் உலகில்
அவ்வப்போது பாயும்
மழை வெள்ளங்களில் தத்தளிக்கிறார்கள்.
அவரவர் கப்பல்கள் புயலில் சிக்குகையில்
உடைந்து எஞ்சும் மரத்துண்டு பற்றி
ஏதோவொரு தீவில் உயிர் ஒதுங்குகிறார்கள்.
முடிவற்றுச் சொட்டும் நீர்த்திவலைகள் பற்றி
அவர்களிடம் சொல்ல வேறொன்றும் இல்லை,
அது ரொம்பவே வலிக்கிறது என்பதைத் தவிர.
அருகில் நின்று உதவ யாருமே இல்லையா?
மிகவும் நியாயமான கேள்விதான்.
கைநீட்டித் தடுக்க வேண்டிய வளைக்கரமே
கலசம் தீரத்தீர
குளிர்ந்த நீரால் நிரப்பிக்கொண்டே இருக்கிறது
குளுமைக்கு நேர் விகிதத்தில் வலி.
*
ஆறுதல் தேடிச் சென்ற ஆலயத்தில்
எம்பெருமான் சிரசில் பக்தர்கள்
வெண்கலக் கெண்டியில்
முகந்து முகந்து ஊற்றும்
முடிவற்ற அபிஷேக தீர்த்தம்
துளித்துளியாகச் சொட்டிக் கொண்டேயிருக்கிறது
என்னப்பனே
எங்கள் துயர் மிகு பிரார்த்தனைகளின் வலி முழுவதையும்
உன் சிரசில்
ஒவ்வொரு துளியாகச் சொட்ட வைத்துக்கொள்கிறாயா?
இரு கண்களால் பார்க்க நேர்வதைத் தடுக்கவும் முடியாமல்
மூன்றாம் கண்ணைத் திறந்து முழுவதை அழிக்கவும் மனமின்றி
ஒவ்வொரு துளியையும்
உனக்குள் தாங்கிக் கொள்கிறாயா?
நீ யாரிடம் சொல்லி அழ முடியும்
உன் தலையில் சொட்டும்
முடிவற்ற திவலைகளின் வலியை?
அப்பனே…
ஒரு வளைக்கரம் சொட்டும் துளிகளையே தாங்க முடியவில்லையே
உலகின் கரங்கள் எல்லாம் சொட்டும் துளிகளை
எங்ஙனம் தாங்குதியோ?
அஹம் பிரம்மாஸ்மி…
கிம் த்வம் அஸஹாய மானவஹ?
$$$