-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #41

41. நமக்கான பீமனைக் காண வேண்டும்!
ஊர் உலகம் பரந்து விரிந்திருந்தபோதிலும்
உமக்குப் பின்னால் உடல் சுருக்கி
ஒண்டிக்கொள்ள வேண்டியிருப்பது
உள்ளுக்குள் வலிக்கிறது.
ஆனால்,
சுற்றி வளைத்துப் பெய்யும்
முடிவற்ற சூறாவளி மழையில் இருந்து காக்க
சுண்டுவிரலால் மலையைத் தூக்கிக் காக்கின்றீரா?
நும் சுண்டு விரல் மேலும் பலம் பெறுக.
வண்டி வண்டியாக , வகை வகையான உணவுகளை
வீட்டுக்கு ஒரு பலிதானி என விதி வகுத்து அனுப்புபவரே,
விதவிதமாக சட்டைகளின் வர்ணங்கள் மாறினாலும்
வெளிறிய வெண் உடையே
அனைத்துக்கும் அடியில் இருப்பது
சொல்லாமல் சொல்லும் உண்மை என்ன?
நீவிர் கோழையா என்று
நினைக்கத் தொடங்கிவிட்டோமா –
மலைவிட்டிறங்கி வந்தால்
கையால் அள்ளி விழுங்குவதைவிட
காலில் மிதிபட்டு அழிவது அதிகமாக இருக்குமென்று
நீவிர் கையறு நிலையில் செய்து கொடுத்திருக்கும்
கண்ணீர் ஒப்பந்தம் புரியாமல்?
நும் ராஜ தந்திரம் பொலிக!
வாயில் படிந்திருக்கும் ரத்தக்கறை கண்டு வெகுண்டு
விரட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறோமா-
கடித்துத் துப்பிய
கருநாகங்கள் பற்றித் தெரிந்துகொள்ளாமல்?
நன்கு வளர்ந்த மரங்களையெல்லாம்
வெட்டி வெட்டி எறியும் உம்மை
வெகுண்டு தடுக்கப் பாய்கிறோமா-
சுற்றி வளைத்திருக்கும் காட்டுத் தீ
சுழன்று மேலும் பரவாமல் தடுக்க
இது ஒன்றே ஒற்றை வழி என்பது புரியாமல்.
எதிரி கோட்டைக்கு வெளியில் அல்ல;
உள்ளுக்குள்ளேயே ஊடுருவி கொன்று குவிக்கத் தொடங்கிய பின்னும்
உப்பரிகையில் நின்றுகொண்டு
வெண் புறாவின் சிறகுகளைக் கோதிக் கொடுக்கும்
உம்மைக் குறிவைத்திருக்கும் ஈட்டிகள்
உமக்கு மட்டுமேதான் தெரிந்திருக்கும் இல்லையா?
அத்தனை லாயங்களின் வாசலிலும் பதிக்கப்பட்டிருக்கும்
கண்ணி வெடிகள் பற்றிய உளவுத் தகவல்கள்
உமக்கு மட்டும் கிடைத்திருக்கும்.
ஒன்றும் செய்யாமல்
உள்ளுக்குள் முடங்கி இருந்தாலே
உயர் ஜாதிக் குதிரைகள் எல்லாம்
உயிர் தப்ப முடியும் இல்லையா?
அத்தனை வெடி மருந்துக் கிடங்குகளிலும் ஊடுருவியிருக்கும்
எதிரிக் கூட்டம் உமக்குத் தெரிந்திருக்கும்.
அமைதி காத்தாலே அழிவு குறையும்.
(அவன்கள் வெடிக்க வைத்தால்
நாம் அத்தனை பேரும் அழிய வேண்டியதுதான்).
கிறுக்கல் கையெழுத்துகளில்
புதிது புதிதாக மருந்துகள்
எழுதிக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்
உம்மைப் புரிந்துகொள்ளாமல் திட்டுகிறோமா –
ஆழ வேரோடிய நிரந்தர நோய்களுக்கு
நிரந்தர மருந்துகளே அவசியம் என்பது புரியாமல்?
மரணத்தைத் தடுக்க முடியாதபோது தள்ளிப்போடுவதே
நல்ல மருத்துவரால் சாத்தியம் என்பது புரியாமல்?
குடித்துக் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொண்டவன்
ஒரு மாத்திரையில் ஏன் உடம்பைச் சுகமாக்கவில்லை
என்று கேட்பதுபோல் கேட்கிறோமா?
கோயில்களைக் கொள்ளையடித்துவிட்டு ஓடிய கும்பலை
நாம் வென்றதெல்லாம் கோட்டையில் அமர்த்தித் தானே?
வணிகத்துக்கென்று வந்து
வல்லாதிக்கம் செய்த கும்பலிடமிருந்து தப்பியதெல்லாம்
அவன் வகுத்த விதியுடன் செய்துகொண்ட
விபரீத ஒப்பந்தம் மூலம் தானே?
*
கொடுங்காற்றிலிருந்து
காய்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால்
இலையைக் கிழியக் கொடுத்தே தீர வேண்டும்.
காலடியில் முளைவிடும் கன்றுகள்
காற்றின் கொடுமை புரியாமல்
தண்டின் பலம் புரியாமல்
சீறுகின்றன … சினம் கொள்கின்றன.
கிழியும் மடல் நுனிகளில் கோர்த்து நிற்கின்றன
இலைக் கண்களின் நீர்த்துளிகள்!
வேறென்ன?
மரம் போல உயரமாக வளர்ந்தாலும்
வாழைகள் உண்மையில் மரமே அல்ல தானே?
பக்கக் கன்றுகள் பெரிதாகும்போது புரிய வரலாம்
தாய் வாழைகளின் துயர நிலை.
விவசாயியாலும்
முடிந்த அளவுக்குத்தானே
முட்டுக் கொடுத்து முளைக்கம்புகள் கட்ட முடியும்?
உலகம் காற்றால் அல்ல; புயலால்தான் நிறைந்தது.
உண்மையே.
ஆனால், தனித்தனி மரமாக நின்றால்
புயல் அல்ல, வெறும் காற்றே ஊதித் தள்ளிவிடும்.
தோப்பாகக் கூடி வளர்ந்தாலே
புயல் மழைகளையும் புறமுதுகிட்டு ஓடச் செய்ய முடியும்.
சவுக்குக் கம்புகள் நட்டு
முட்டுக் கொடுப்பதோடு நின்றுவிடக் கூடாது
தோப்புகளைப் பெருக்க வேண்டும் நல் விவசாயி.
இலைகளைக் கிழியக் கொடுப்பதோடு
நின்றுவிடக் கூடாது
தோப்புகளாகப் பெருக வேண்டும் நல் வாழைகள்.
*
தற்காலிகத் தீர்வுகளில்
தன்னிறைவடைந்து விடக் கூடாது.
ஆபத்துக் கால சமரசங்கள் அவசியமே-
அவையே அறமென்றாகிவிடக் கூடாது.
சிலவற்றைத் தள்ளிப்போடுவது
பலவற்றை அழித்துவிடும்.
அடுத்தடுத்து வந்த இரண்டு அரக்கர்களும்
அடிவாரம் வந்து அடித்துக்கொள்ள ஆரம்பித்தால்
அதன்பின் ஒன்றுகூட மிஞ்சாது என்று,
அவரவர் குகைகளுக்கு அவர்கள் கேட்பதையெல்லாம்
அனுப்பிச் சமாளித்து வருவது போதாது.
நம் பீமனை நாம் விரைவில்
தேடிக் கண்டடைந்தாக வேண்டும்.
$$$