-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நூற்றெட்டாம் திருப்பதி... இத்துடன் திவ்யதேச யாத்திரை நிறைவடைகிறது!

108. வாழ்வின் இலக்கு திருப்பரமபதம்
காண்பதற்கு இனிய இருபாதங்கள்! காணக் கிடைக்காத உனது நவசயனங்கள்! நவில்வதற்கு நல்கிய நாலாயிர திவ்ய பிரபந்தங்கள்! நமோ நாராயணனே இவை மூன்றும் போதுமே, நாடி வருமே எமக்கும் பரமபதமே!
நித்ய விபூதி, பரமாகாசம், தெளிவிசும்பு திருநாடு, ஸ்ரீவகுண்டம், பரமவ்யோம்ம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும், திருத்தலமான திருப்பரமபதம், மானிட வாழ்க்கையின் இறுதி இலக்காகும். பகவானால் படைத்து, காக்கப்பட்டு அழைக்கப்படுவது லீலா விபூதி. நித்யமாக இருப்பது நித்ய விபூதி. இவை இரண்டிற்கும் இடையே விரஜா நதி ஓடுகிறது.
வைகுண்டத்தில் பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி எதுவும் கிடையாது. இங்கு காலமோ, திசைகளோ கிடையாது. இவ்வுலகை அடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. அங்கு ஜீவாத்மா பரமாத்வாவை அடைந்து ஆனந்தமாக இருக்கிறது. ஒவ்வொரு ஜீவனும் பரமபதம் (வீடுபேறு) அடைவதே வாழ்வின் சிறந்த பயன்.
பூவுலகில், வைகுண்டம் என்ற பெயரை ஒட்டியே திருவிண்ணகர் – ஒப்பிலியப்பன், காழிச்சீராம விண்ணகரம் – சீர்காழி, வைகுந்த விண்ணகரம் – திருநாங்கூர், அரிமேய விண்ணகரம் – திருநாங்கூர், நந்திபுர விண்ணகரம் – நாதன் கோயில் ஆகிய 5 கோயில்கள் அமைந்துள்ளன. மேலும், மதுரை கூடலழகர் கோயில், திருக்கோஷ்டியூர், காஞ்சி பரமேஸ்வர விண்ணகரம் ஆகிய மூன்று கோயில்களில் வைகுந்தவாசனாகவே அருள் பாலிக்கிறார்.
மூலவர்: பரமபதநாதன் (வீற்றிருந்த திருக்கோலம் – தெற்கே திருமுக மண்டலம்)
தாயார்: பெரிய பிராட்டியார்
விமானம்: சுநந்தரங்க விமானம்
தீர்த்தம்: விரஜா நதி, ஐரம்மத புஷ்கரிணி
மங்களா சாசனம்: ஆண்டாள், குலசேகர ஆழ்வார், பொய்கையாழ்வார், பெரியாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், திருப்பாணாழ்வார்.
எப்படிச் செல்வது?
யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத பதவி ஒன்று இருக்குமானால், அது திருப்பரமபதம் தான். இது பூலோகத்தில் இல்லை. புண்ணியம் செய்து மோட்சம் அடைந்த பக்தர்களுக்கு பகவான் நித்திய தரிசனம் கொடுத்துக் கொண்டிருப்பார். இது பரம வைணவர்களின் மோட்ச ஸ்தலம்.
நமது திவ்யதேச யாத்திரை இத்துடன் நிறைவு பெறுகிறது. இறைவன் ஆளும் திருப்பரமபதத்தை அடைவதுடன் நமது வாழ்வும் முழுநிறைவை எய்தட்டும்!
ஓம் நமோ நாராயணாய!
$$$