திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -107

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நூற்றேழாம் திருப்பதி...
திருபாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள்; பட உதவி, நன்றி: ஓவியர் மணியம் செல்வன்

திருநாட்டுத் திருப்பதிகள்

107. இறுதிப் புகலிடம் திருப்பாற்கடல்

ஐம்புலன் அடங்கி, மனமது ஒடுங்கி,
சுழிமுனை விழித்து, விழிமூன்றும் அது திறந்து,
அண்டம், பேரண்டம், லோகங்கள் கடந்து
சூட்சும சரீரமாய் வேதங்கள் போற்றும்
ஆதிசேஷன் மேலுறங்கும் நாராயணனைக் காண்பது எப்போது?

கிடந்தவனை மனம் நினைத்து உருகி,
அமர்ந்தவனின் புகழ் பாடிப் பாடித் திளைத்து,
நின்றவனை, ஆயிரம் நாமம் கொண்டவனை,
நினைத்தது தருபவனின் பாதம் பற்றினால் கிட்டுமே
பாற்கடலில் கிடக்கும் க்ஷீராப்திநாதன் தரிசனமே!

 வைகுந்தநாதனாம் நாராயணன் இறங்கிவந்து வசுதேவன், சங்கர்ஷனன், பிரத்யும்னன், அநிருத்தன் என நான்காகப் பிரித்துக்கொண்டு, திருப்பாற்கடலில் ஆதிசேஷ பர்யங்கத்தில் சயனிக்கிறார் என்கிறது விஷ்ணு புராணம். தேவர்கள் பிரார்த்திக்கும் தலம் இது. 106 திவ்ய தேசங்களையும் த்ரிசித்த புண்ணியர்கள் பரமபதித்த பிறகு அவர்களை நாராயணனே திருப்பாற்கடலுக்கு அழைத்துக் கொள்வார் என்பது ஐதீகம்.

பூலோகத்தில் உள்ள சில திவ்ய தேசங்கள் திருப்பாற்கடலுடன் தொடர்பில் உள்ளதாக ஐதீகம். க்ஷீராப்தி நாதன், வசுதேவன், அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷனன் ஆகிய 5 வியூகங்களின் (பஞ்ச வியூகம்) அடிப்படையில் இவ்வாறு கூறப்படுகிறது.

க்ஷீராப்தி நாதன், திருக்கோஷ்டியூரில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். வசுதேவன், திருநறையூரில் திருமகளை மணந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அநிருத்தன், திருஅன்பில் திருத்தலத்தில் அழகியவல்லி நாச்சியாருடன் அருள்பாலிக்கிறார். பிரத்யும்னன், திருவெள்ளறை திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். சங்கர்ஷனன், உறையூர் தலத்தில் நந்த சோழரின் வளர்ப்பு மகளான கமலவல்லித் தாயாரை மணந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

மூலவர்: க்ஷீராப்திநாதன் (ஆதிசேஷ சயன திருக்கோலம்- தெற்கே திருமுக மண்டலம்)
தாயார்: கடல்மகள் நாச்சியார்
விமானம்: அஷ்டாங்க விமானம்
தீர்த்தம்: அம்ருத தீர்த்தம், திருப்பாற்கடல்
மங்களா சாசனம்: மதுரகவியாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார்.

எப்படிச் செல்வது?

இது நில உலகில் காண முடியாத திருத்தலம். திருபாற்கடலுக்கு இந்த ஸ்தூல சரீரத்தோடு செல்ல முடியாது. சூட்சும சரீரத்தோடுதான் செல்ல வேண்டும் என்பது நியதி. இந்த பூலோகத்தில் இதற்கு முன்பு குறிப்பிட்ட அத்தனை திவ்யதேசங்களுக்கும் சென்றிருக்க வேண்டும். அப்படிச் சென்றவர்களுக்கு பகவான் திருப்பாற்கடலில் நிச்சயம் தரிசனம் தருவார் என்பது நம்பிக்கை.

$$$

Leave a comment