-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நூற்று மூன்றாம் திருப்பதி...

103. சங்கரர் ஞானம் பெற்ற திருப்பிரிதி
மடிமேல் அமர்த்தி, மனதில் இருத்தி – நாமகிரியாளை நொடிப்பொழுதும் பிரியாத நரசிம்மப் பெருமானே! அடிமூன்று அளந்து, பாற்கடலில் கிடந்து, திருப்பிருதியில் எழுந்தருளியுள்ள பரமபுருஷனே – நீ எனக்கு உடையவனுக்கு அருளியது போல் அருள்வாயே!
திருப்பிரிதி திருத்தலம் எங்குள்ளது என்பதில் அபிப்பிராய பேதங்கள் உள்ளன. ஆழ்வார் பாடிய திருப்பிரிதி, திபெத் நாட்டில் உள்ள மானஸசரோவரம் ஆக இருக்கலாம் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால், தற்போது, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நந்தப்பிரயாகையே (ஜோஷி மட்) திருப்பிரிதி திவ்ய தேசமாக வணங்கப்படுகிறது.
ஆழ்வார் பாடலில் பரமபுருஷர் சயன திருக்கோலத்தில் இருப்பதாக உள்ளது. ஆனால் இங்கு நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். இந்த நரசிம்மரை ஆதிசங்கரர் ஸ்தாபித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. பனிக்காலத்தில் பத்ரிநாத் கோயில் மூடப்படும் சமயத்தில் அங்குள்ள தெய்வச் சிலைகள், இங்குள்ள நரசிம்மர் கோயிலுக்குள் வைத்து வழிபடப்படுகின்றன.

ஆதிசங்கரர் நிறுவிய பத்ரிநாத் சங்கரமடம் இங்கு இருப்பதுவே. இது ஜோதிர்பீடம் எனப்படுகிறது. அதர்வண வேதத்தை நிர்வகிக்கும்படியாக இந்த மடம் நிறுவப்பட்டுள்ளது. இதுவே மருவி ஜோஷிமட் ஆகியிருக்கிறது. நந்தப்பிரயாகையில் நந்நாகினி, அலக்நந்தா ஆறுகள் சங்கமிக்கின்றன.
ஆதிசங்கரர் ஜோதிர் மடத்தில் திவ்யஞானம் பெற்று சங்கரபாஷ்யம் அருளினார்; மேலும் இத்தலத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து தவம் மேற்கொண்ட பிறகு பிரம்மசூத்திரத்துக்கு உரை எழுதினார் என்று கூறப்படுகிறது. தற்போது ஆதிசங்கரரால் கட்டப்பட்ட நரசிம்மப் பெருமாள் கோயிலும், நின்ற கோலத்தில் இருக்கும் நாராயணர் கோயிலும் மட்டுமே இங்கு உள்ளன.
மூலவர்: பரமபுருஷர் (சயன திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: பரிமளவல்லி
கோயிலில் இருப்பவர்: நரசிம்மப் பெருமாள்
விமானம்: கோவர்த்தன விமானம்
தீர்த்தம்; இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸசரோவரம்
மங்களா சானம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 3.00 மணி முதல் 7.00 மணி வரை
எப்படிச் செல்வது?
இதுவும் உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் உள்ள திருத்தலம் (ஜோஷி மட்). ஜோஷி மடம் இமயமலையில் 6,150 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சிப் பகுதியாகும். ரிஷிகேஷத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ளது இத்தலம்; ஹரித்துவாரில் இருந்து 154 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
உடல் ஆரோக்கியமாக இருக்கவும், பகைவர்களை வெல்லவும், மனநிம்மதி கிடைக்கவும் வந்து வணங்க வேண்டிய தலம் ஆகும். 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$