-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நூற்று ஒன்றாம் திருப்பதி...

101. எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்த தலம் திருவதரியாச்சிரமம்
குசேலர்க்கு அருளினாய் அவல்பிடி உண்டு… சங்கரருக்கு அருளினாய் ஆர்யாம்பாள் மடிகிடந்து… உடையவர்க்கு அருளினாய் உடன் இருந்து… இடையர்க்கு அருளினாய் – பத்ரி நாராயணனே… கடையவனாய் நானும் உள்ளேன், காத்தருள்வாயே!
சார்தாம் எனப்படும் நான்கு பிரதான புனிதத் தலங்களுள் திருவதரியாச்சிரமம் (பத்ரிநாத்) ஒன்று. மற்றவை: கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை. இது ஒரு ஸ்வயம்வ்யக்த ஷேத்திரம். அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள இக்கோயில், இமயமலையின் குளிர் மற்றும் பனி காரணமாக வருடத்தில் 6 மாதங்கள் (ஏப்ரல் கடைசி முதல் நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். பிற ஆறு மாதங்களில் தேவர்கள் பெருமாளை வழிபடுவதாக ஐதீகம்.
படைப்புக் கடவுளான பிரமனின் ஆணவத்தை அடக்க அவரது ஒரு (ஐந்தாவது) தலையை சிவன் கிள்ளினார். ஆனால் அது அவரது கையில் ஒட்டிக் கொண்டது. பிரம்மஹத்தி தோஷம் விலக, திருமாலிடம் முறையிடார் சிவபெருமான். பூலோகம் சென்று ஒரு பதிவிரதையிடம் யாசகம் பெறும்போது பிரம்மனின் கபாலம் கிழே விழுந்துவிடும் என்றார் பெருமாள். அதன்படி சிவன் பூலோகம் வந்தார். அவர் இமயமலைப் பகுதிக்கு சென்றபோது அங்கு பெருமாள் தவக்கோலத்தில் தாரக மந்திரோபதேசம் செய்தார். அவருக்கு இலந்தை (பத்ரி) மர வடிவில் லட்சுமி தேவி நிழல் கொடுத்த்தால் அந்த இடம் பத்ரிநாத் என்று பெயர் பெற்றது. அங்கு லட்சுமிதேவியிடம் பிச்சை வாங்கியவுடன் சிவனின் கரத்தில் ஒட்டில்யிருந்த பிரம்ம கபாலம் கீழே விழுந்த்து. அந்த இடமே பத்ரிநாத் அருகில் உள்ள பிரம்ம கபாலம் ஆகும். இங்கு நீத்தார் சடங்குகள் செய்வது விசேஷம். இங்கு நமக்கு நாமே ஆத்ம பிண்டமும் இட்டுக் கொள்ளலாம்.
இக்கோயிலில், கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கும் மூலவர் பத்ரிநாராயணர் கருப்பு நிற சாளக்கிராமத்தால் ஆனவர். இடது கையில் சங்கும், வலது கரத்தில் சக்கரமும், மற்ற இரு கரங்களையும் இணைத்து யோக முத்திரை, அபய வரதம் காட்டி அருள்பாலிக்கிறார்.
ஆதிசங்கரர் அமைத்த நான்கு திருமடங்களுள் பத்ரிநாத்தும் ஒன்று. மற்றவை: சிருங்கேரி, துவாரகை, புரி. இக்கோயிலில் ஆதிசங்கரர் நிர்ணயித்த வழிபாட்டு முறைகளின்படி கேரளத்து நம்பூதிரிகளே நித்யபூஜைகளைச் செய்து வருகின்றனர்.
இங்கு பாயும் அலக்நந்தா நதி தேவப்பிரயாகையில் பாகீரதி நதியுடன் இனைந்து கங்கையாகிறது. பத்ரி நாராயணர் கோயிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. தப்த குண்டம், நாரத குண்டம், கூர்ம தாரா, பிரகலாத தாரா, ரிஷிகங்கை ஆகியவற்றில் கூர்மதாரா தீர்த்தம் அன்னதானங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தப்த குண்டத்தில் நீராடிய பின்னர் கோயிலுக்குள் செல்ல வேண்டும். தப்த குண்டத்தில் வெந்நீர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலவர்: பத்ரிநாராயணன் (அமர்ந்த திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: அரவிந்தவல்லி
விமானம்: தப்தகாஞ்சன விமானம்
தீர்த்தம்: தப்த குண்டம்
தல விருட்சம்: பத்ரி, இலந்தை மரம்
மங்களா சாசனம்: பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
வருடத்தில் 6 மாதங்கள் (ஏப்ரல் கடைசி முதல் நவம்பர் தொடக்கம் வரை)
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை
எப்படிச் செல்வது?
உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில், இமயமலைப் பகுதியில் இத்தலம் (பத்ரிநாத்) உள்ளது. தில்லியிலிருந்து ரிஷிகேஷ் சென்று அங்கிருந்து பேருந்து வழியாக 187 மைல் மலைப்பாதையில் மீது மேலேறிச் சென்றால் பத்ரிநாத்தை அடைந்து விடலாம். மாநிலத் தலைநகரான டேராடூனில் இருந்து பேருந்து வசதி உண்டு. ஹரித்வாரில் இருந்து 325 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
மோட்சம் பெற விரும்புவோர் யாவரும் வந்து பத்ரிநாராயணப் பெருமாளை தரிசிக்க வேண்டியது அவசியம். திருமணம் கைகூடாதவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து பலன் பெறலாம். இக்கோயிலுக்கு சற்று வடக்கே கங்கைக் கரையின் ஓரத்தில் பிரம்மகபாலம் என்னும் பெரிய பாறை இருக்கிறது. இங்கு சிரார்த்தங்கள் செய்தால் முன்னோருக்கு மோட்சம் கிடைக்கும். 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.
$$$