-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்றேழாம் திருப்பதி...

97. நவ நரசிம்மர்கள் அருள்பாலிக்கும் சிங்கவேள்குன்றம்
நாலுயுகம், நாலு வர்ணம், நவசயம் கொண்ட பெருமானே! நாலு வேதம், மூன்று உலகம் போற்றும் மும்மூர்த்திகளில் முதன்மையானவனே! மகாபலம் கொண்டு அகோபிலம் வந்த லக்ஷ்மி உடனுறை நரசிங்கப் பெருமானே! சரணாகதி நீயேகதி என வந்த பக்தன் என்னைக் காத்தருள்வாயே!
சிங்கவேள் குன்றம் எனப்படும் அஹோபிலம், நவநரசிம்ம ஷேத்திரமாகும். அகோ என்றால் சிங்கம், பிலம் என்றால் குகை. அதாவது சிங்கம் (நரசிம்மர்) வீற்றிருக்கும் குகை கொண்ட குன்றம் (மலை) இது. அஹோபில, வராஹ, பாவனா, காரஞ்ச, சக்ரவட, பார்கவ, ஜ்வாலா, மாலோல, யோகானந்த நரசிம்ஹர்கள் அருள் பாலிக்கின்றனர். கருடன் தவமிருந்த மலை என்பதால் கருடாத்ரி என்று பெயர் பெற்ற மலை இது.
இங்கு நவகிரகங்களின் அம்சமாக ஒன்பது நரசிம்ம மூர்த்திகள் வீற்றுள்ளனர். கருடாத்ரி மலையின் கீழ் உள்ள அகோபிலத்தில் பார்க்கவ நரசிம்மர் (சூரியன்), யோகானந்த நரசிம்மர் (சனி), சக்ரவட நரசிம்மர் (கேது) கோயில்கள் அமைந்துள்ளன. மலையின் மேலுள்ள அகோபிலத்தில் அகோபில நரசிம்மர் (குரு), வராஹ நரசிம்மர் – குரோதா நரசிம்மர் (ராகு), மாலோல நரசிம்மர் (வெள்ளி), ஜ்வாலா நரசிம்மர் (செவ்வாய்), பாவன நரசிம்மர் (புதன்), காரஞ்ச நரசிம்மர் (திங்கள்) கோயில்கள் உள்ளன.
நரசிம்மர் அவதரித்த இடமான அகோபிலம் மொத்தம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அவற்றுள் ஒன்று மலை அடிவாரத்தில் உள்ள கீழ் அகோபிலம். இங்கே பிரகலாதவரதர் கோயில் உள்ளது. மற்றொன்று மலைமேல் சுமார் மூன்றாயிரம் அடி உயரத்தில் உள்ள அகோபிலம். இதில், அகோர நரசிம்மர் வீற்றுள்ளார். மலைகோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட உக்கிரஸ்தம்பம் (தூண்) உள்ளது. இங்குள்ள மலைக்கோயில்களை தரிசிப்பது ஒரு சாகச அனுபவம். இங்கு ஒருவாரமேனும் தங்கினால்தான் அனைத்து நரசிம்மர்களையும் தரிசிக்க முடியும்.
மூலவர்: பிரகலாதவரதன், லக்ஷ்மி நரசிம்மன் (அமர்ந்த திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: அம்ருதவல்லி, செஞ்சுலட்சுமி
உற்சவர்: அஹோபில நரசிம்ஹர்
விமானம்: குகை விமானம்
தீர்த்தம்: பாபவிநாசினி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 1.00 மணி வரை
மாலை 3.00 மணி முதல் 8.00 மணி வரை
எப்படிச் செல்வது?
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இத்திருத்தலம் (அஹோபிலம்) உள்ளது. சென்னை – மும்பை ரயில் பாதையில் உள்ள கடப்பாவில் இறங்கி அங்கிருந்து பேருந்துமூலமாக சுமார் 72 கி.மீ. தொலைவில் உள்ள சுர்வகட்டா என்ற ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து இன்னொரு பேருந்தில் சென்றால் ஒரு மணி நேரத்தில் அஹோபிலம் சென்று விடலாம்.
சேவிப்பதன் பலன்கள்:
எந்த வேண்டுதலாயினும் உடனடியாக வேண்டியதை வேண்டியபடித் தரும் தெய்வம் நரசிம்மர் ஆவார். தீராத பணம், தீராத வழக்கு, தீராத நோய் தீர்க்கும் தலம் ஆகும். 5. 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.
$$$