ரமண மகரிஷியும் சுவாமி விவேகானந்தரும்

-எஸ்.ராமன்

ஸ்ரீ. எஸ்.ராமன்,  சென்னையில் வசிக்கிறார்; மொழிபெயர்ப்பாளர்; மின்னணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்; சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ரமண  மகரிஷியின் பக்தர். விவேகானந்தம் 15.காம் இனையதளத்தில் இவர் எழுதிய இனிய கட்டுரை இங்கு மீள்பிரசுரம் ஆகிறது.
‘விவேகானந்தம் 150′ இணையதளத்திற்கு நான் சில எழுத்துப்பணிகளைப் புரியத் தொடங்கிய சமயம், அதன் ஆசிரியர் குழுவினர் என்னிடம் “தாங்கள் எங்களுக்குத் தற்போது மொழியாக்கம் மட்டும் செய்துகொண்டு இருக்கிறீர்களே, கட்டுரையும் எழுதலாமே” என்றனர். அதற்கு “எனக்கு ரமண மகரிஷியின் படைப்புகள் பற்றித் தெரிந்த அளவிற்கு சுவாமி விவேகானந்தரைப் பற்றித் தெரியாதே” என்றேன். “அதற்கென்ன! அதற்கும் ஒரு காலம் வரும்” என்று சொன்ன அவர்கள் மூலமாகவே அதுவும் ஒருநாள் வந்து சேர்ந்தது.

சுவாமி விவேகானந்தரின் அருளுரைகளைப் பலமுறை படித்து, அவற்றை மனதில் ஏற்றி, அதற்கேற்ப வாழ்ந்து, தன் வாழ்வில் யாவரும் போற்றும் உயர்வும் எவரும் தவிர்க்கும் தாழ்வும் கண்டிருந்தும், தொடக்கத்தில் இருந்தே திட்டமிட்டு நூதன வசதிகளுடன் கூடிய ஒரு புதிய நகரத்தை ஆஸ்திரேலியாவில் நிறுவி, அதனுள் “வேதாந்த மையம்” ஒன்றையும் உருவாக்கி, வியத்தகு சாதனைகள் புரிந்து வரும் திரு. மஹாலிங்கம் சின்னத்தம்பி என்ற கட்டுமான அதிபரின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழியாக்கம் செய்யும் பணியை அவர்கள் பரிந்துரைத்து எனக்குப் பெற்றுத் தந்தனர்.

அந்த நூலின் தலைப்பு “Stop Not Till the Goal is Reached” என்றும், நூலின் பத்து அத்தியாயங்களின் தலைப்புகளும் சுவாமிஜியின் பத்து பொன்மொழிகளே என்றும் நான் கூறும்போதே, அந்த மாமனிதரின் லட்சியமும், பாதையும் இதனைப் படிப்போர்க்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும்.

அந்த நூலில் எடுத்தாளப்பட்ட சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை நான் மொழியாக்கம் செய்தபோது இந்தக் கட்டுரை எழுதுவதற்கான விதைகளும் என் மனதில் தூவப்பட்டன. அந்தப் பொன்மொழிகளில் சிலவற்றை இங்கு மேற்கோள்களாக எடுத்துக்கொண்டு, சுவாமிஜிக்குப் பிற்காலத்தில் உதித்து, அவரது குருஜி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு நிகரான ஸ்ரீ ரமண மஹரிஷிகளின் அனுபவங்களையும், வாக்குகளையும் பற்றி நான் அறிந்த வகையில் இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

காந்திஜி, ராஜாஜி உள்ளிட்ட பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் சுவாமி விவேகானந்தரின் எழுத்துக்கள் தங்களை அந்த உயரிய நோக்கத்திற்காக, இடையூறுகளையும் மீறி, தூய்மையுடன் போராட வைத்தது என்று கூறியிருக்கிறார்கள். ஆக விடுதலைப் போராட்டம் வெடிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, வரவிருக்கும் வீரர்களுக்கு சுவாமிஜி வேண்டிய ஊட்டத்தை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

பின்னாள் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கப்போகும் பாபு ராஜேந்திர பிரசாத், ஒரு முறை வார்தா ஆசிரமத்தில் காந்திஜியுடன் தங்கியிருந்த சமயம், ஏதோ கவலையுடன் இருக்க காந்திஜி அவரிடம், “நீங்கள் மன அமைதியுடன் இருக்கக்கூடிய இடம் ஒன்று எனக்குத் தெரியும்” என்று சொல்லி, அவரைத் தொழிலதிபரான ஜமன்லால் பஜாஜ் அவர்களுடன் திருவண்ணாமலையில் இருந்த ரமணரின் அருகே சில நாட்கள் தங்குவதற்காக ரமணாஸ்ரமத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். ரமணரின் காலத்தில் விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தாலும், அவர் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று எவரிடமும் சொன்னதில்லை. இப்படியாக ரமணரும், விவேகானந்தரும் வேறுவிதமாகத் தென்பட்டாலும் அவர்களது சக்தியின் மூலம் ஒன்றே என்பதை நாம் அவர்களது உரைகளில் இருந்து தெரிந்து கொள்வோம்.

மூன்று நாட்கள் எதுவும் பேசாது அமைதி காத்து, பின் அங்கிருந்து புறப்படப் போகும் தறுவாயில் ரமணரிடம் உத்தரவு பெற்றுக்கொள்ளச் சென்றபோது பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் ரமணரிடம், “காந்திஜிக்குத் தங்களிடம் இருந்து என்ன தகவல் சொல்ல?” என்று கேட்டதற்கு ரமணர், அங்கு இயங்கும் சக்தி தான் இங்கும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றாராம்.

அதாவது தகவல் என்று சிறப்பாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது; எல்லாம் ஒரே சக்தியின் வெளிப்பாடே என்று சொல்லாது சொல்லியிருக்கிறார். எழுமின்! விழிமின்! இலக்கை எட்டும்வரை நில்லாது உழைமின்! எழுந்திருங்கள், விழித்திருங்கள்! …. நாம் ஆன்மாவே; அது எங்கும் எப்போதும் இருக்கும் என்ற சுவாமி விவேகானந்தரின் அறைகூவலும், எங்கும் இருக்கும் சக்தி ஒன்றே என்று தானே குறிக்கிறது!

பாபுவைத் தொடர்ந்து பஜாஜ் அவர்கள் “விரைவில் விடுதலை கிடைக்கலாம்; அப்போது நாம் அதைக் கொண்டாடலாம் அல்லவா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரமணர்,விடுதலைக்காகப் போராடுபவர்கள் தங்கள் நலனைத் துறந்து தாய்நாட்டிற்காகவே சேவை புரிந்தவர்கள். எல்லாவற்றையும் துறந்த அவர்களுக்குக் கொண்டாடுவதற்கு என்ன எஞ்சியிருக்க முடியும்?” என்று கேட்டாராம்.

சுவாமிஜி அவர்களின்  “இதுதான் மிக முக்கியம்…. இடைவிடாது உழை, ஆனால் அத்துடன் உன்னைக் கட்டிப்போட்டுக் கொள்ளாதே. நடப்பது நடக்கட்டும் என்றிரு. அறிவுக்கு வேலை கொடுத்து இயங்கு, இடைவிடாது உழை. ஆனால் அது உன் மனதைப் பாதிக்க விடாதே. ஒரு சுற்றுலாப் பயணி தான் வந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து போய்விடுவது போல, வேலை செய்யும் போது அப்படியே உன்னை நினைத்துக் கொள்  என்ற அறிவுரையும் செய்த வேலையுடன் பந்தம் கொள்ளாது இருப்பதை ஆமோதிப்பது போலத்தானே இருக்கிறது.

இதைக் கேளுங்கள், நாம் எல்லோரும் ஒருநாள் சாகத் தான் போகிறோம். அதை நன்கு ஞாபகம் வைத்துக்கொண்டால் போதும்; நம்முள் இருக்கும் சக்தி விழித்தெழும். அப்போது தான் உனது சிறுமைத்தனம் மறையும். நீ செய்யும் வேலையில் ஓர் இயற்கைத்தனம் வெளிப்படும். உனது உடலும் மனமும் ஒரு புதிய சக்தி கொண்டு திகழும். உன்னுடன் தொடர்பு கொள்பவர்கள் எல்லோரும் தாங்களும் உன்னிடமிருந்து உள்ளொளி ஒன்று பெற்றதாகக் கருதுவார்கள் என்றார் சுவாமிஜி. இந்தக் கூற்று எனக்கு ரமணரின் ஆன்ம விழிப்பையே ஞாபகப்படுத்துகிறது.

திருத்தல யாத்திரை சென்று திரும்பி வந்த உறவினர் மூலம் ஒரு நாள் ரமணர்  “அருணாசலம்” என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவருக்குள் கிளர்ந்த ஞானப் பொறி ஒன்று அவரைத் தட்டி எழுப்பியது. அந்தச் சமயம் அவருக்கு இறப்பு பற்றிய எண்ணங்களும், அதனால் தோன்றும் பயமும் அடிக்கடி வந்துகொண்டிருந்தன.

ஒருநாள் ரமணர் தரையில் படுத்துக் கொண்டிருந்தபோது தான் இறந்துவிட்டதாகவே உணர, “சரி, இது என்ன என்றுதான் பார்ப்போமே என்று தன்னைப் பிணம் போல் கருதி பேச்சு, மூச்சற்று தன்னுள் தானே, “சரி, இந்த உடலைக்  கொண்டுபோய் மயானத்தில் கிடத்தி எரித்து விடுவார்கள். உடல் பொசுங்கிப் போய்விடும்; ஆனால் நான் இன்னமும் இருக்கிறேனே! அப்படியானால் நான் உடல் இல்லையா? நான் யார்?” என்ற உணர்வு தோன்றிய சமயம் தான் அவருக்கு ஆன்ம அறிவு உதித்தது.

அதிலிருந்து அவருக்கு உலகைப் பற்றியும், உலக அலுவல்கள் பற்றியும் பிடிப்பு ஏதும் இல்லாது போயிற்று. சில வாரங்கள் கழிந்த பின், இந்த அனுபவம் தோன்றிய மதுரையிலிருந்து புறப்பட்டு “அருணாசலம்” எங்கிருக்கிறது என்று விசாரித்து திருவண்ணாமலை சென்றடைந்தார். அங்கு சேர்ந்த அவர் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே ஜீவன் முக்தனாக வாழ்ந்து, அந்த இடத்தில் இருந்து வேறெங்குமே சென்றதில்லை. அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் தேடி வந்து தரிசனம் செய்த மக்கள் பலரும் அவருடன் இருந்த சமயம், பலப்பல அனுபவங்களைத் தாங்கள் கேட்காமலேயே பெற்று, அவ்வாறு உள்ளொளி பெற்றதால் ஆன்ம விழிப்பு அடைந்தனர். அவர்களில் பல மேனாட்டவர்களும் அடங்குவார்கள்.

ரமணர் அங்கு சென்றடைந்து பல வருடங்கள் கழித்து சென்னையில் இருந்து சென்ற இளைஞன் ஒருவன் ரமணாஸ்ரமத்தில் தங்கி, அவர் வீற்றிருந்த அறைக்குள் அவரிடம் இருந்து சற்று தள்ளியே பல நாட்கள் அமர்ந்திருந்தான். ஒன்றும் பேசாது இருந்த அவனை ரமணரும் கவனித்துக்கொண்டு இருந்தார். ஒருநாள் அந்த அறையில் இருந்து பலரும் வெளியே செல்ல ரமணர் தனியே இருக்கும் சமயம் அவரருகே வந்து, “ஆன்ம சாதகத்தை வீட்டில் இருந்து செய்ய முடியாதா? காடு போன்ற இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் சாதகம் முடியுமா?” என்று கேட்டான்.

அதற்கு அவர் எங்கிருந்தாலும் இருக்கும் ஆன்மா ஒன்றே, எங்கிருந்தும் பயிற்சி மேற்கொள்ளலாம் என்றதும், “அவ்வாறானால் தாங்கள் ஏன் மதுரையை விட்டு இங்கு வந்தீர்கள்?” என்று கேட்டான். ஓஹோ! இதுவா உன் பிரச்னை? எனக்கு வரவேண்டும் என்று தோன்றியது, வந்தேன். உன்னைப் போல யாரிடமும் கேட்கவேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. புறப்பட்டு வந்துவிட்டதால் அதற்கும், அதன் பின் நடப்பதற்கும் பொறுப்பு ஏற்கத் தயாராக இருந்தேன். நீ என்ன செய்கிறாயோ அதற்கு நீ தான் பொறுப்பு என்றார்.

இந்தக் கூற்றுக்கு நிகராக, சுவாமிஜி சொல்வதைப் பாருங்கள்:

ஒரு லட்சியத்திற்கு என்றே வாழ்; அது ஒன்றே ஒன்றாக மட்டும் இருக்கட்டும். அது மகோன்னத லட்சியமாக இருக்கட்டும்; மிகவும் உறுதியானதாகவும் இருக்கட்டும்அதனால் வரும் ஓர் இலக்கை ஒவ்வொருவனும் தனக்கென்று அமைத்துக்கொண்டு, அதை அடைவதற்கும் ஆன முயற்சிகளையும் தொடங்கட்டும்ஒன்று செய்யவேண்டும் என்று தீர்மானித்துவிட்டால் அதைச் செய்வதிலிருந்து உன்னை விலகச் செய்யும் எதையும் அனுமதிக்காதே. உன் மனச்சாட்சிப்படி மேற்கொண்டு செய். மற்றவர்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதே.

 நமக்கு இருக்கும் ஒரு குறிக்கோள் உலகியல் தொடர்பானதோ, ஆன்ம வித்தை தொடர்பானதோ எவ்வாறாக இருந்தாலும், இரண்டையும் அடையும் முறை ஒன்றே என்று இருவர் சொல்வதில் இருந்தும் தெளிவாகிறது.

குறிக்கோள் எதுவானாலும் அதை அடைவதற்கு நமக்கு வேண்டிய சக்தி நம்முள் இருக்கிறது. துணிந்து நின்று செயலாற்ற வேண்டும் என்பதை, சுவாமிஜி, எல்லா சக்தியும் உன்னுள் இருக்கிறது. உன்னால் எதுவும் செய்ய முடியும்; எல்லாம் செய்ய முடியும். அதில் நம்பிக்கை கொள்தைரியமாக நின்று உன்னுள் உறையும் தெய்வீக சக்தியை வெளிப்படுத்து என்கிறார்.

ரமணருக்கும், அவரிடம் அன்று பேசிக்கொண்டிருந்த இளைஞனுக்கும் இருந்தது போல, எவராயினும் இருவர் நடுவில் வேற்றுமைகள் இருக்கும். அது அவரவர்களது இயல்பான தன்மைகளைப் பொறுத்தது. அதையே சுவாமிஜி இப்படிச் சொல்வார்: எல்லா ஜீவராசிகளும் இறைத்தன்மை படைத்ததே என்றும், அதனால் இறைவனே என்றும் நாம் நம்புகிறோம். வடிவெடுத்துள்ள ஒவ்வொரு ஜீவாத்மாவும் அறியாமை எனும் மேகங்களால் சூழப்பட்ட சூரியன் போல என்பதால் ஓர் ஆத்மாவிற்கும் இன்னோர் ஆத்மாவிற்கும் இடையே உள்ள வேற்றுமை அந்தந்த மேகத் திரள்களின் அடர்த்தியில் உள்ள வேற்றுமையால் வருகிறது. பாம்பின் கால் பாம்பே அறியும் என்பது போல அவரவர் மேன்மையும், கீழ்மையும் அவரவர்களே அறிவார்கள். அதற்கேற்றார் போல ஒருவர் தனக்கு என்று பொறுப்பு ஒன்றை ஏற்றுக்கொண்டு தனக்கு வேண்டியதைச் செய்துகொள்ள வேண்டும்.

ஆஸ்ரமத்திற்கு வரும் பல பக்தர்களும் பல விதமான சந்தேகங்களைச் சொல்லி, அவை தொடர்பான கேள்விகளையும் கேட்பார்கள். ஒவ்வொருவரின் ஆன்மிகப் பயணங்களும், முறைகளும் வேறு வேறாக இருக்கும் என்பதால் ரமணரும் அவரவர் வழிகளிலேயே சென்று விளக்கங்கள் கொடுப்பார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், ரமணர் எல்லாவற்றையும் ஆதரிப்பவர் போல இருக்கிறதே, அவருக்கு என்று ஒரு தனி வழி கிடையாதா என்ற சந்தேகம் வந்து அதை அவரிடமே கேட்டு விட்டார்.

அதற்கு ரமணர் எந்த வழியும் நல்ல வழிதான், எவரையும் புதிதாக ஒன்று சொல்லிக் குழப்பிவிடக் கூடாது” என்றாராம். அது போன்றதொரு கருத்தையே பின்பு ஒரு பாட்டில்வேற்றார் கேள்விக்கு விளம்பும் சொல்லாம் என்று குறிப்பிட்டு, ஒருவருக்குச் சொன்னது இன்னொருவருக்குப் பொருந்தாது என்று விளக்குவார்.

சுவாமிஜியும் அதைத்தானே இவ்வாறு சொல்கிறார்:

“அவரவர்களும் தங்களது இடத்தில் இருந்துவிட்டால் அது நன்மையே. ஆனாலும் ஒருவரது கடமை இன்னொருவரது ஆக முடியாது… ஒரு நல்ல சமுதாயம் என்பது அவரவரும் தங்கள் தங்கள் வழியில் உழைத்து, மனித குலத்தையே உயர்த்தப் பாடுபடுவது… உனது வழியில் குறுக்கிடும் இன்னொருவர் வழியில் நீ செல்ல முயற்சிப்பது கூடாது. ஏனென்றால் அது அவர் வழி, உன்னுடையது அல்ல. உன் வழியே உனக்குச் சிறந்தது என்னும்போது அந்த வழியே மற்றவர்க்கும் என்பது சரியல்ல.”

ஒருமுறை வடநாட்டில் இருந்து வேத, சாஸ்திரங்களை நன்கு கற்ற பண்டிதர் ஒருவர் ரமணரைத் தரிசிக்க வந்தார். அவர் ரமணரிடம் விவாதம் செய்துகொண்டு இருந்தபோது இருவருமே பல சம்ஸ்கிருத நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். அதை ஓரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்த ஆசிரம சமையல் அலுவலர் ஒருவர், பண்டிதர் பேசி முடித்துப் போனதும் ரமணரை அணுகி, அவரளவு பாண்டித்யம் இல்லாத தனக்கு என்று தான் மோட்சத்திற்கான வழிகள் தெரியவருமோ என்று வருந்திக் கூறினார்.

அதற்கு ரமணர், “இன்று நீ முக க்ஷவரம் செய்துகொண்டாயா?” என்று கேட்க ஒரு தொடர்பும் இல்லாதது போல வந்த கேள்வியைக் கேட்டு சற்றே விழித்து நின்றார். ஆனாலும் அன்று அவர் க்ஷவரம் செய்துகொண்டதைச் சொன்னதும், ரமணர் “சரி, முகத்தில் நீர் மற்றும் நுரையைத் தடவியதும், தீட்டிய கத்தியை உபயோகிக்கும் முன்பாக என்ன செய்தாய்?’ என்று கேட்டார். அதற்கு அவர் ஒரு கண்ணாடியை எடுத்துக்கொண்டு மேற்கொண்டு செய்ததைச் சொன்னார்.

சரி, கண்ணாடியில் முகத்தைப் பார்த்ததும், உன் முகத்தில் உள்ளதை மழித்தாயா, அல்லது கண்ணாடியில் உள்ள பிம்பத்தில் இருந்த முடியை நீக்கினாயா? அதேபோல, இந்த சாஸ்திர சமாச்சாரங்கள் எல்லாம் அந்தக் கண்ணாடி போலத் தான். எப்படி அதன் உதவிகொண்டு க்ஷவரம் செய்தாயோ, அதேபோல சாஸ்திரங்கள் சொல்வதைக் கேட்டு கடைசியில் உன்னை நீ தெரிந்துகொள்ள முயற்சி எடுக்க வேண்டும். நீயாக உணர்கிற அந்த நான் யார்?’ என்று விசாரம் செய்யும் பயிற்சியே முக்கியம். எவ்வாறு கண்ணாடி இருப்பது மட்டும் பயன் தராதோ, அதேபோல சாஸ்திர அறிவு மட்டுமே போதாது. அந்த அறிவு இல்லாது போனாலும், பயிற்சி செய்யும் நீ தான் முக்கியம் என்றார் ரமணர்.

ஒருவன் தான் என்று உணரும் தன்னை தன்னுள் மூழ்கி அவ்வாறு இருப்பது யார் என்பதை அறிவதே அனைத்து சாஸ்திரங்களின் இறுதி லட்சியம். இதுதான் அவரது போதனை. வேறெதுவும் கேட்காது ஞானம் பெரும் வழியைத் தேடுவோர்க்கு ரமணர் இதுவே நேரான பாதை என்று சொல்வார். ஆனால் மற்ற வழிகளில் செல்வோரை அவர்களது வழிகளிலேயே சென்று அதைக் காணச் சொல்வார்.

சுவாமிஜியோ, எந்த வேலையும் ஏற்கனவே உள்ள நமது மனத்தின் ஆற்றலை வெளிப்படுத்தி, நமது ஆன்மாவைப் பற்றிய உணர்வை விழிப்படையச் செய்வதற்கே என்பதை நீ நினைவில் வைக்கவேண்டும். அந்தச் சக்தி அனைவருள்ளும் இருக்கிறது; அறிவும் அவ்வாறே உள்ளது. அதனால் வெவ்வேறு விதமான பணிகள் எல்லாமே உறங்கும் பெருஞ்சக்திகளை பேரொலி கொண்டு எழுப்பும் சம்மட்டி அடிகளே என்று கூறும்போது ரமணரின் போதனையில் அதுவே ஒலிப்பது போலத்தானே இருக்கிறது?

ஆக “நான் யார்?” என்று தன்னையே கேள்வி கேட்டு விசாரம் செய்வதே ரமணரின் ஞான மார்க்கம். தான் இறக்கப் போவதாக தனக்கு ஓர் எண்ணம் உதித்ததும், அவர் தன்னையே விசாரம் செய்தது ஒன்று தான் அவரது பயிற்சி. அந்த நொடியே அவர் அனைத்தையும் உணர்ந்து விட்டாலும், அவருக்கு நேர்ந்தது போல அனைவருக்கும் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அவரவர்கள் தங்களுக்கு உகந்த  வழியிலேயே சென்று அதை உணரவேண்டும்.

அதனால் ரமணரும் வேறு வழியில் சென்று கொண்டிருப்போர்களை, அவர்கள் அந்த வழியிலேயே சென்று ஞானம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று விளக்குவார். ஆனாலும் அந்த வேட்கை இருந்து, ஒருவன் அதற்கான கட்டுப்பாடுகளை மதித்து, முயற்சி செய்தால் மட்டுமே அதை உணர முடியும்.

சுவாமிஜியும் அதைத்தானே இப்படிச் சொல்கிறார்:

உள்ளும் புறமும் உள்ள இயற்கையின் அம்சங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, ஒருவனுள் உறையும் இறைத்தன்மையை வெளிக்கொண்டு வருவதே குறிக்கோள். அதைக் கர்மத்தினாலோ, பக்தியினாலோ, ராஜ யோகத்தினாலோ, அல்லது ஞான விசாரத்தினாலோ அல்லது இவற்றின் சிலபல கலவைகளினாலோ செய்து முக்தியடை”.

மேலும் சுவாமிஜி ஒருவன் எடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றிக் கூறும் போது, நாம் எப்படி இருக்கிறோம் என்பதற்கு நாமே பொறுப்பு. நாம் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்படி இருப்பதற்கு நம்மிடம் தேவையான சக்தி இருக்கிறது. நமது இப்போதைய நிலை நமது முந்தைய செயல்களின் விளைவுகளால் என்றால், நாம் எதுவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறோமோ அதற்கு இப்போது நாம் செய்யும் செயல்கள் மூலம் நிச்சயமாக அதுவாக ஆகலாம். அதனால் அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் இப்போது நமக்குத் தெரியவேண்டும் என்று சொல்லி, எதையும் செய்யாமல் ஒருவன் தான் விரும்புவதை அடைய முடியாது என்று ஒருவன் செயல் புரியவேண்டிய அவசியத்தை வற்புறுத்துகிறார்.

அவ்வாறு பயிற்சி செய்யும் ஒரு சாதகனுக்குப் பலப்பல சந்தேகங்கள் வரலாம். ஒவ்வொரு எண்ணமும் கிளம்பியதுமே, அதனைத் தொடர்ந்து மனதை அதன் வழியில் செல்ல விடாது, அந்த எண்ணம் யாருக்கு வந்தது என்று கேட்டு ஆன்ம விசாரத்தை மேலும் தொடர வேண்டும் என்பார் ரமணர். அது குறிக்கோளை அடையும் வரை எடுத்த காரியத்தை விடாது செய்யும் தன்மை தான். அதை அவர்அன்னியத்தை நாடாதிருத்தல் வைராக்கியம் அல்லது நிராசை; தன்னை விடாதிருத்தல் ஞானம். உண்மையில் இரண்டும் ஒன்றே. முத்துக் குளிப்போர் தம் இடையில் கல்லைக் கட்டிக்கொண்டு, மூழ்கிக் கடலடியில் கிடக்கும் முத்தை எப்படி எடுக்கிறார்களோ அப்படியே ஒவ்வொருவனும் வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தை அடையலாம் என்கிறார்.

அதேபோல சுவாமிஜியும் ஒரு பொறுப்பை எடுத்துச் செய்தால் அதற்கான பலன் உடனே கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை, மகத்தான செயல்களை எல்லாம் எளிதாக நடத்திவிட முடியுமா? அவையெல்லாமே காலம், பொறுமை, மற்றும் ஒன்றைச் செய்தேயாக வேண்டும் என்ற மனவுறுதி இவைகளால் மட்டுமே முடியும் என்று சொல்லி, மேலும் அவன் தொடர்ந்து செய்ய வேண்டியதை நினைவுபடுத்துகிறார்.

மேலும் ஒன்றைச் செய்யும்போது அதில் ஆழ்ந்த நம்பிக்கையும், அதனால் செய்வதில் வரும் விருப்பத்தையும் அவர் குறிப்பிடும்போது இவ்வாறு சொல்கிறார்:  “தூய்மை, பொறுமை, மற்றும் விடாமுயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு வேண்டிய முக்கியத் தேவைகள். அதற்கும் மேலாக அன்பும் வேண்டும். உங்களுக்குத் தேவையான கால அவகாசம் இருக்கிறது. எதற்கும் அனாவசியமாக அவசரப்பட வேண்டாம். நீங்கள் தூய்மையுடனும், மனம் உள்ளார்ந்தும் செய்வது எல்லாமே நல்லதாகவே நடந்துமுடியும் என்றார்.

எதையுமே தொடர்ந்து நடத்தும்போது பல சந்தேகங்களும், அதைப் பற்றிய நமது முந்தைய எண்ணங்களால் சில எதிர்பார்ப்புகளும் இடையூறுகளாகத் தோன்றி நம் முன் நிற்கும். அதனால் தொடர்ந்து வரும் குழப்பங்களாலும் ஒருவன் மனம் தளர்ந்து போகக் கூடும். அவ்வாறு இருக்கும் ஒரு சாதகனைத் தேற்றி அவன் தனது பயிற்சியைத் தொடர்ந்து செய்ய ஊக்கம் அளிப்பதற்காக ரமணர்ஒரு புலி வாயில் பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவின் அருட்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரே அன்றி ஒருக்காலும் கைவிடப்படார் என்கிறார்.

தீர்மானம் உள்ளவன் தான் எதையும் சாதிக்க முடியும் என்பதை சுவாமிஜி, “எவனொருவனுக்கு ஒன்றை அடையவேண்டும் என்ற வெறியுடன் உள்ள தீர்மானம் இருக்குமோ, அவனுக்கு எல்லாமே வந்து சேரும் என்கிறார்.

மனத்தைப் பற்றி கூறும்போது அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கின்றது என்று கூறி,  நினைவுகளைத் தவிர்த்துப் பார்க்கும்போது உலகம் என்றோர் பொருள் தனியாக இல்லை என்றும் சொல்லிவிட்டு ரமணர், சிலந்திப் பூச்சி எப்படித் தன்னிடமிருந்து வெளியில் நூலைநூற்று மறுபடியும் தன்னுள் இழுத்துக்கொள்கிறதோ அப்படியே மனமும் தன்னிடத்தில் இருந்து ஜகத்தைத் தோற்றுவித்து மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக்கொள்கிறது என்பார்.

ஒருவனது முந்தைய எண்ணங்கள் மற்றும் செயல்களின் சுவடுகளே வாசனைகள் என்பதால் ரமணர், நல்ல மனம் என்றும் கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்கள் இல்லை. வாசனைகளே சுபம் என்றும் அசுபம் என்றும் இரண்டு விதம். மனம் சுபவாசனை வயத்ததாய் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வயத்ததாய் நிற்கும்போது கெட்ட மனம் என்றும் சொல்லப்படும் என்றார்.

சுவாமிஜியும் அவ்வாறே, உலகம் நல்லதும் அல்ல, தீயதும் அல்ல. ஒவ்வொருவனும் தனது உலகத்தைத் தானே உருவாக்கிக் கொள்கிறான் என்றார். உலகம் என்றாலே ஒருவன் தன்னை விட்டுவிட்டு மற்றவர்கள் இருப்பதை மட்டுமே உலகமாகப் பார்க்கிறான். அவ்வாறு ஒவ்வொருவனும் செய்வதால் ஒவ்வொரு உலகமும் அவரவர்களால் உருவாக்கப்படுகிறது. அதனால் ஒருவன் உலகின் தன்மைகளைப் பற்றி மிகவும் அலட்டிக்கொள்ளாமல் தனது தன்மைகளை நல்லதாக வளர்த்துக்கொள்ள வேண்டும். தன் பார்வை எப்படியோ அப்படியே உலகும் அமையும் என்பதுதான் அதன் கருத்து.

வாசனைகள் என்பது நம்முள் தங்கியிருக்கும் பழைய பந்தங்களினால் ஏற்பட்டவை என்பதால், அவை நமது தன்மைகளை நிர்ணயித்து, தற்போது ஆற்றப்படும் கர்மங்களின் விளைவாகவும், நமக்குப் புதிய பந்தங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். சாதகன் அவைகளைக் கவனித்து அவ்வப்போதே அவற்றை அகற்றாவிடில், அவை நமது புதிய வாசனைகளாக உருவெடுக்கும்.

அதனால் நமது வாசனைகளால் ஏற்பட்ட பந்தங்களில் இருந்து விடுபடுவதே சாதகனின் முதல் நோக்கமாக இருந்து, தற்போது செய்யும் செயல்களாலும் பந்தங்கள் ஏற்படாதவாறு காக்க வேண்டும் என்று சொன்னாலும், ரமணர் அவ்வாறு கட்டுப்படுபவன் யார் என்று தன்னுள் நோக்கச் சொல்வார். ஏனென்றால் பந்தப்பட்டவன் என்ற முதல்நிலைக் கருத்து உண்மையாக இருந்தால்தானே பின்பு வருவதெல்லாம் உண்மையாக இருக்க முடியும். அதை அவர் ஒரு பாட்டில் இப்படிச் சொல்வார்:

பத்தன் நான் என்னும் மட்டே பந்த முக்தி சிந்தனைகள்
பத்தன் யார் என்று தன்னைப் பார்க்குங்கால் – சித்தமாய்
நித்த முக்தன் தான் நிற்க நிற்காதேல் பந்த சிந்தை
முக்தி சிந்தை முன்னிற்குமோ?

ஒருவனின் தூய நிலை சத்-சித்-ஆனந்த சொரூபம் என்பதால் பந்தம் நிற்காது என்றால், பந்தத்திலிருந்து விடுபடும் முக்தி சிந்தனை மட்டும் உண்மையோ என்று கேட்கிறார். இது தத்துவ ரீதியில் சொல்லப்பட்டது என்றாலும் உலக அளவில் கூட எவனொருவன் தன்னை எவ்வாறு கருதுகிறானோ, அவ்வாறே அவன் ஆகிறான் என்பது தான் அனைவரும் அறிந்த உண்மை.

இவ்வாறு நாம் மேலே கண்டதை ஆமோதிப்பது போல சுவாமிஜியும் இப்படிக் கூறுகிறார்:

எதனாலும் ஆட்கொள்ளப்படாது இருப்பது பந்தம் ஏதுமில்லாச் சுதந்திரம். எதையும் பொறுமையாக ஏற்றுக்கொள்வதை விட, எதனாலும் பந்தப்படாது இருப்பதே மேலானது. நீ பந்தப்பட்டுள்ளாய் என்று நினைத்தால் நீ பந்தப்பட்டவனாக ஆகிவிடுகிறாய்; நீயே உன் பந்தத்தை வரவழைத்துக் கொள்கிறாய். நீ சுதந்திரமானவன் என்று நினைத்தால் நீ இந்தக் கணமே ஒரு சுதந்திர புருஷன்தான். இதுதான் சுதந்திரம் என்பதைப் பற்றிய முழு விளக்கம். இயற்கையில் உள்ள அனைத்து சீவராசிகளுக்கும் சுதந்திரமாக இருப்பதுதான் குறிக்கோள்

வேதாந்தக் கருத்துகள் எல்லாம் எளிமையானவை, உண்மையானவை என்றாலும், நாம் நமது செயல்களாலும், எண்ணங்களாலும் பந்தங்களை வரவழைத்துக்கொண்டு இல்லாத ஒன்றை இருப்பது போலப் பார்த்துக்கொண்டு, அவற்றை உண்மை என்றும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அவற்றுக்கு உண்மையில் இருப்பு கிடையாது என்று தெரிந்ததும், அவற்றை ஒருசேரத் தள்ளிவிட்டு இருக்கும் ஒன்றையே கவனிக்க வேண்டும் என்பதை ரமணர் இப்படிச் சொன்னார்: குப்பையைக் கூட்டித் தள்ளவேண்டிய ஒருவன் அதை ஆராய்வதால் எப்படிப் பயனில்லையோ, அப்படியே தன்னை அறிய வேண்டிய ஒருவன் தன்னை மறைத்துக்கொண்டிருக்கும் தத்துவங்கள் அனைத்தையும் சேர்த்துத் தள்ளி விடாமல் அவை இத்தனை என்று கணக்கிடுவதாலும், அவற்றின் குணங்களை ஆராய்வதாலும் பயனில்லை.

ரமணரைப் போன்றே சுவாமிஜியும் வேதாந்த உண்மைகளைப் பற்றிச் சொல்லும்போது, நாம் நம்மை அறியும் சிறிதளவு அறிவே நமது மனமும், வாழ்வும் என்று நினைக்கின்றோம். உண்மையில் அது நமது உள்ளுணர்வு என்னும் பெரிய கடலில் ஒரு சிறு துளியேஅவற்றின் எளிமையால் அரும்பெரும் உண்மைகள் எல்லாம் மறக்கப்பட்டுவிட்டன. எங்கும், எப்போதும் அவற்றை உணர முடியுமாதலால் அரிய உண்மைகள் எளிதாகத் தான் இருக்கும். உண்மை எப்போதுமே எளிமைதான். மாறாகக் குழப்பங்கள் கிளம்புவது மனிதனின் அறியாமையால் என்று கூறினார்.

இவ்வாறாகக் காலம், தேசம் இவற்றுக்கு உட்பட்டு இருந்த இந்த இருவேறு ஞானிகள் நம்மிடையே உலவினர் என்றாலும், அவர்களது அனுபவங்களும், கூற்றுக்களும் எவ்வாறு காலம், தேசத்தைக் கடந்து என்றும் பொருத்தமாக இருக்கின்றன என்பதைப் பார்த்தோம்.

அவையெல்லாம் அப்படி இருப்பதற்குக் காரணம் அவை  வேதாந்தக் கருத்துக்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தன என்பதை நாம் எப்போதும் மறக்கக் கூடாது.  வேதாந்தம் காட்டும் வழியில் வாழ்பவனுக்கு இறப்பு என்பது கிடையாது என்பதால், மீண்டும் பிறப்பு என்பதும் இல்லாது போகிறது.

$$$

Leave a comment