-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்றைந்தாம் திருப்பதி...

95. அசுரரை அனுமன் வென்ற திருக்கடிகை
சோளிங்கரில் அமர்ந்த யோக நரசிம்மனே! காளிங்கன் தலைமீது களிநடனம் புரிந்தவனே! பாவங்கள் போக்கும் பக்தவத்சலனே! காலங்கள் தோறும் காத்து அருள்பவனே! ஜானகி ராமனே காத்து அருள்வாயே!
சபதரிஷிகளின் தவத்தைக் கெடுத்த அசுரர்களை ராமரின் ஆணைக்கிணங்க ஹனுமன் நரசிம்மரின் கடாட்சத்துடன் அவர் கொடுத்த சக்ராயுதத்தால் வென்றார். எனவே இந்த்த் தலத்தில் நரசிம்மர் யோகாசனத்தில் பெரிய மலையில் அருள் பாலிக்கிறார். சிறிய மலையில் ஹனுமர் சங்கு, சக்கரங்களுடன் நான்கு தோள்களுடன் அருள்பாலிக்கிறார். ’கடி’ என்றால் ஒரு நாழிகை.. இத்தலத்தில் ஒரு நாழிகை இருந்தாலே பாவங்கள் கழிந்து பரமபதம் சித்திக்கும் என்பது ஐதீகம். எனவே திருக்கடிகை என்று பெயர் பெற்றது. சோளிங்கர் என்பது தற்காலப் பெயராகும்.
மூலவர்: யோக நரசிம்மர், அக்காரக்கனி (அமர்ந்த திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: அமிர்தவல்லி
உற்சவர்: பக்தோசிதன், தக்கான்
விமானம்: ஸிம்ஹகோஷ்டாக்ருதி விமானம்
தீர்த்தம்: அம்ருத தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், பேயாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 5.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 09.00 மணி வரை
எப்படிச் செல்வது?
அரக்கோணத்திலிருந்து மேற்கே 27 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம் (சோளிங்கர்). ரயில் வசதியும் பஸ் வசதியும் இத்தலத்திற்கு செல்ல உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
பில்லி, சூனியம், தீயசக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் உள்ளவர்கள், சோளிங்கர் அலையடிவாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, மலை ஏறி பிரார்த்தனை செய்ய நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து தரிசிக்க வேண்டிய தலம் இது.
$$$