திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -93

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்று மூன்றாம் திருப்பதி...

93. கடலை நீங்கி, நிலத்தில் படுத்த திருக்கடல்மல்லை

நஞ்சுமுலை உண்டு, அஞ்சுதலையில் நின்று,
தஞ்சகனைக் கொன்று, வஞ்சகர்களை வதைத்து,
பஞ்சவர்களைக் காத்து, பாற்கடலைத் தவிர்த்து – கடல்மல்லையில்
தலசயனப் பெருமாளாய்க் கிடந்தாயே!

கடலில் சயனித்திருக்கும் திருமாலை தரிசிக்க விரும்பிய புணடரீக மகரிஷி பக்திப் பரவசத்தால் தன்னிலை மரந்து கடல்நீரை கைகளால் வாரி இறைக்க முற்பட்டார். அவரது பக்தியால் நெகிழ்ந்த பெருமாள் தனது சேஷ படுக்கையைத் தவிர்த்து ஓடி வந்து இங்கு நிலத்தில் (ஸ்தல சயனம்) சயனித்தார் என்கிறது தலபுராணம்.

மூலவர்: ஸ்தலசயனப் பெருமாள் (புஜங்க சயனம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: நிலமங்கைத் தாயார்
விமானம்: க்கநாக்ருதி விமானம்
தீர்த்தம்: புண்டரீக புஷ்கரிணி, கருட நதி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார். மணவாள மாமுனிகளும் பாடியுள்ளார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 08.30 மணி வரை

எப்படிச் செல்வது?

சென்னைக்கு தெற்கே 58 கி.மீ. தொலைவில் உள்ளது. மகாபலிபுரம், இதற்கு கடல்மல்லை என்று வேறு பெயரும் உண்டு. இத்தலத்திற்குச் செல்ல பஸ் வசதிகள் உண்டு. திருவிடவெந்தையிலிருந்து 15 கிமீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

நினைத்தது எல்லாம் நடத்திக் கொடுக்கக் கூடிய தலம் ஆகும். 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களும் 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment