தேசிய நீரோட்டம்

-சத்தியப்பிரியன்

எழுத்தாளர் திரு. சத்தியப்பிரியனின் முகநூல் பதிவு இது. சிறு பதிவு என்றாலும், இதில் அடங்கியுள்ள விஷயம் பெரிது…

நெடுநல்வாடையில் மிக அருமையாக தேசிய நீரோட்டம் குறித்து ஒரு வரி உள்ளது. 

‘வடவர் தந்த வான்கேழ் வட்டம் 
தென்புல மருங்கில் சாந்தொடு துறப்ப’

அதாவது வட தேசத்திலிருந்து வந்த சந்தனம் அரைக்கும் சிலாவட்டக் கல், குளிர் காலம் என்பதால் தெற்கிலிருந்து வரும் சந்தனத்தைத் தேய்க்காமல் காய்ந்து கிடந்ததாக நக்கீரர் கூறுகிறார். 

இந்த வரிகளை இளங்கோவடிகள் கொஞ்சம் கூட மாற்றாமல் ,

‘வடமலை பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலை பிறந்த சந்தனம் மறுக’

-என்று கூறுவார். 

இதனைத் தான் நமது பாரதியார் மிக விளக்கமாக, 

‘கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’

-என்று பாடினார். 

இதிலிருந்து சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், ‘தேசிய நீரோட்டம்’ என்பது சங்க காலப் பழைய விஷயம்தான்.

$$$

Leave a comment