-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #38

38. நால்வர்ணக் கொடி
நான்காவது வர்ணமாக நம் தேசியக் கொடியில்
நில்லாமல் சுழலத்தான் செய்கிறது
நீல நிறத்தில் ஒரு சக்கரம்.
இருந்தும் ஏன் அதை மூவர்ணக் கொடி என்கிறோம்?
ஆரக்கால்களுக்கும் ஒரே நிறம்.
அனைத்தையும் இணைக்கும் சட்டத்துக்கும் ஒரே நிறம்.
மையத்துக்கும் ஒரே நிறம்…
விளிம்புக்கும் ஒரே நிறம்.
மேல் என்று எதுவும் இல்லை…
கீழ் என்று எதுவும் இல்லை.
ஆரம்பம் என்று எதுவும் இல்லை…
முடிவென்று எதுவும் இல்லை.
முடிவற்ற சுழற்சி மட்டுமே முழு உண்மை.
நிர்மலமான நீல ஆகாயத்தின் நிறத்தில்
நில்லாமல் சுழலும் திகிரியை நினைவுறுத்தும் வடிவம்.
அத்தனை அற்புதமான அதை
அதி உச்சியில் கொண்டு நிறுத்திய பின்னும்
அலட்சியமாக ஏன் புறக்கணிக்கிறோம்?
திலகம் போன்று திகழும்
தர்மச் சக்கரத்தை நீக்கிவிட்டால்,
பாழ் நெற்றியைவிடவும்
படு பாதகமாக அல்லவா போகும்,
பட்டொளி வீசிப் பறக்கும் நம் கொடி?
நால்வகை வேதங்கள்…
நால்வகை ஆஸ்ரமங்கள்…
நால்வகை வர்ணங்கள்…
நால்வகை புருஷார்த்தங்கள்…
நான்கென்றால் எஜமானர்களுக்குப் பிடிக்காதென்பதால்
நமக்கும் பிடிக்காமல் போய்விட்டதா?
நான்கு திசைகளின் அடிப்படையில் அல்லவா
நாம் நான்கின் பக்கம் நகர்ந்திருக்கிறோம்?
மூன்றென்று சொல்லி
முச்சந்தியில் குழம்பி நிற்பது ஏன்?
உண்மையில்
நான்காவதாகப் புறக்கணிக்கப்படுவது
அந்த நீல நிறம் தானா..?
எதிரிகளுக்கு நிறக்குருடு இல்லை.
முதல்கட்டமாக அதை
மூவர்ணக் கொடியாக ஆக்கத்தான்
முழு வேகத்துடன் செயல்படுகிறார்கள்.
உண்மையில்
ஒரே வர்ணப் பின்னணியில்
தர்மச் சக்கரம் சுழல வேண்டிய கொடியில்
அநாவசியமாக இரண்டு வர்ணங்கள்
அதிகப்படியாக இடத்தை
அடைத்துக்கொண்டு இருக்கின்றன.
நிஜத்தில் அந்த இரண்டையும் சேர்த்துப் பார்த்தால்
நம் நிறம்தான்
சிறுபான்மையாக ஒண்டிக்கொண்டிருக்கிறது.
பிற நிறங்களை அழிக்கப் பார்க்கும் அந்த நிறங்களை
அப்புறப்படுத்துவதுதான் சிரமம்.
உள்ளதை உருப்படியாகக் காப்பதுமா கடினம்?
இருப்பதை இருப்பதாகச் சொல்வதுமா கடினம்?
நல்லிணக்கத்தை விரும்பும் நாம்
முதலில் அதை நால்வர்ணக் கொடி என்றுதான் சொல்ல வேண்டும்.
காவி ஆன்மிக ஞானத்தைக் குறிக்கிறது…
வெள்ளை சமபாவ அரசியலைக் குறிக்கிறது…
பச்சை வளர்ச்சிக்கான வணிகத்தைக் குறிக்கிறது…
நீலம் சேவையை, தொழில் முனைவைக் குறிக்கிறது!
காவி ஞான மார்க்கத்தைக் குறிக்கிறது…
வெண்மை பற்றற்றுச் செய்யும்
கர்ம மார்க்கத்தைக் குறிக்கிறது…
தூய துளசி போன்ற வில்வம் போன்ற பச்சை
பக்தி மார்க்கத்தைக் குறிக்கிறது…
நீலம் அனைத்துக்கும் ஆதாரமான
தர்மத்தைக் குறிக்கிறது!
எளிய அரசியல் வார்த்தையில் சொல்லவா?
காவி இந்துவைக் குறிக்கிறது…
வெள்ளை கிறிஸ்தவத்தைக் குறிக்கிறது…
பச்சை இஸ்லாத்தைக் குறிக்கிறது…
நீலம் பெளத்தத்தைக் குறிக்கிறது!
உயரத்தில் ஏற்றிவைத்துவிட்டு
நீ ஒன்றுமில்லை என்று சொல்வதுபோன்ற அபத்தம்
வேறெதுவும் இருக்க முடியாது.
ஒரு நிறத்தைக் கைவிடுதல் என்பது
அது சொல்லும் தர்மத்தைக் கைவிடுதலுக்கு சமம்.
ஒரு நிறத்தைப் புறக்கணித்தல் என்பது
அது சொல்லும் தரிசனத்தைப் புறக்கணித்தலுக்கு சமம்.
ஒரு நிறத்தை ஓரங்கட்டுதல் என்பது
ஒரு மக்கள் திரளை ஓரங்கட்டுவதற்கு சமம்.
அடுத்த நிறம் எதுவும் இருக்கக் கூடாதென்று
அழிக்கப் பார்க்கும் நிறங்களுக்கு
அத்தனை இடத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு,
அனைத்துக்கும் இடமளிக்கும் நிறத்தை
ஏன் இல்லை என்று சொல்கிறோம்?
எப்படி இல்லை என்று சொல்கிறோம்?
அத்தனை வர்ணங்களையும் இணைக்கும்
அந்த தர்ம சக்கரம் இல்லையென்றால்
அது நம் தேசக் கொடியே அல்லவே
நாம் தர்மத்தின் பாதையில் இருந்து விலகியதைத் தான்
நம் நாக்கும் கண்களும்
சொல்லிச் சொல்லிக் காட்டுகின்றனவா?
ஓர் அபஸ்வரம் இடைவிடாது ஒலிக்கிறதென்றால்
இசைத்தட்டு கீறல் விழுந்துவிட்டதென்று அர்த்தமல்லவா?
ஏதோ ஒரு மாயக்கரம்
இசை முள்ளை நகரவிடாமல் தடுத்து நினைவூட்டுகிறதா,
இன்று இசைக்கப்படுவது அபஸ்வரம் என்று?
உயரப் பறக்கும் கொடி நடுங்கியபடியே
ஒரு கேள்வியைக் கேட்டவண்ணம் இருக்கிறது:
”வீர வணக்கம் வைக்கும் அன்புக் குழந்தைகளே,
இன்று உங்கள் கண்கள் பார்க்கத் தவறும் நிறம் நீலம்.
நாளை..?”
$$