-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எண்பதாம் திருப்பதி...

80. பெருமாளும் பார்வதியும் வழிபட்ட
திருநிலாத்திங்கள் துண்டம்
வாமணனாய் வான்அளவு உயர்ந்தாய்! குளிர்பார்வை கொண்டு பார்வதியைக் காத்தாய்! பரந்தாமானாய் பாற்கடலில் படுத்தாய் – அமிர்தக் கடல் கடைந்த படுந்துயர் வெப்பம் நீங்க ஏகாம்பரத்திடம் ஏகிய நீ – இங்கு நிலாத்திங்கள் பெருமாளாய் எங்களைக் காத்து நின்றாயே!
தன்னை அடைய, மாமரத்தின் கீழ் தவம் செய்த பார்வதியைச் சோதிக்க அந்த மரத்தை எரிக்கிறார் சிவபெருமான். அப்போது தனது சகோதரன் பெருமாளை பார்வதி பிரார்த்திக்க, அவர் நிலவின் ஒளி போன்ற அமுதக் கிரணங்களால் மாமரத்தைத் தழைக்கச் செய்தார். எனவே நிலத்திங்கள்துண்டத்தான் என்ற பெயருடன் கோயிலில் அருள் பாலிக்கிறார் என்று ஒரு தலபுராணம் கூறுகிறது.
பாற்கடலைக் கடைய கூர்ம அவதாரமாக உதவியய பெருமாளும் விஷத்தால் நிறம் மாறினார். அவரது உடல் பழையவண்ணம் மாற. சிவன் தனது முடியில் சூடிய நிலவின் கதிர்களைப் பொழியச் செய்தார். அதனால் பெருமாள் பழைய நிறத்தைப் பெற்றார் என்கிறது மற்றொரு தலபுராணக் கதை.
சகோதர சகோதரிகள் இங்குள்ள ஈசனையும் பெருமாளையும் வணங்கினால் நலம் பெறலாம். சிறிய சன்னிதியான இங்கு தாயார் தனியே இல்லை. பெருமாளின் நெஞ்சிலிருக்கும் தாயாரையே நேரொருவரில்லாவல்லியாக பூஜிக்கின்றனர். சைவ- வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக இக்கோயில் திகழ்கிறது.
மூலவர்: நிலாத்திங்கள் துண்டத்தான், சந்திரசூடப் பெருமாள் (நின்ற திருக்கோலம்- மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: நேரொருவரில்லாவல்லி தாயார்
விமானம்: புருஷஸுக்த விமானம்
தீர்த்தம்: சந்திர தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் 12.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 08.00 மணி வரை
எப்படிச் செல்வது?
இத்தலம் காஞ்சி ஏகாம்பரஸ்வரர் கோயிலின் உட் பிரகாரத்தில் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
உயர் அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் பாதிக்கப்பட்டவர்களும், வெப்பம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களும் வந்து வணங்க நலம் உண்டாகும். 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$