-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #37

37. வயநாடாகும் தேசம்!
வயநாடு
தனி நாடு அல்லதான்;
ஆனால், தனியாகிக் கொண்டிருக்கிற நாடு.
நம் தேசத்து நிலச்சரிவுகளில்
60 % க்கு மேல் ஏற்படும் மாநிலம் கேரளம்.
நம் தேசத்து நிலச்சரிவுகளில்
அதிக மக்கள் உயிரிழப்பது அந்த வயநாட்டில்.
இறந்தவர்களுக்கு வீடாகக் கல்லறைகள் கட்டலாம்.
வாழ்பவர்களுக்குக் கல்லறைகளை வீடாகக் கட்டாதீர் என்று
அத்தனை ஆய்வறிக்கைகளும் வரவிருந்த
அபாயத்தை எச்சரித்திருந்தன.
அவ்வப்போது நடந்த உயிரிழப்புகள்
அந்த அபாயத்தை அறுதியிட்டும் வந்தன.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவே இல்லை.
அடுக்கடுக்காக வீடுகள்
அபாயப் பகுதியில் கட்டப்பட்டுக்கொண்டே இருந்தன.
அந்த ஒட்டுமொத்த வயநாடும்
உலகின் கண்ணில் இருந்து
கறுப்பு பர்தாவால் போர்த்தப்பட்டது.
வயநாட்டின் அன்பு மார்க்கப் பிரதிநிதி சொன்னார்:
அமைதி மார்க்க நிறுவனங்களின் எதிர்ப்பை மீறி
அபாயப் பகுதியில் இருந்து மக்களை வேறு இடத்துக்கு
அழைத்துச் செல்ல முடியவில்லை.
அவரை அடுத்தமுறை,
அங்கு தேர்தலில் நிற்கவிடாமல் துரத்தியடித்தான்
தாய்லாந்திலிருந்து வந்த தலைவன்.
வயநாட்டில் நடந்த அழிவுகள்,
ஆக்கிரமிப்புகள்,
அபாயங்கள் பற்றிய புகைப்படங்களை
அந்தத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியான அவன்
தன் ஆஸ்தான ஃபோட்டோ ஷூட் குழுவை அழைத்துச்சென்று
ஒரு முறைகூட உலகின் முன் எடுத்துக் காட்டியதில்லை.
அவனது அரசியல் உல்லாசப் பயணத்துக்கான
ஸ்டெப்னியாக உபயோகித்த உயிர்கள் அவை.
இப்போது அவன்
வயநாட்டின் பர்தா பெண்ணுக்கு ஆறுதல் சொல்லி
முதன்முதலாக
வீடியோ ஷூட் முடித்து வெளியிட்டிருக்கிறான்.
இதுவன்றோ மனிதம் என்று
ஒத்து ஊதுகிறது ஊடகம்.
புதையுண்ட வீட்டின் சுவரில்
பிடி நழுவாமல் தொங்கும் இயேசு காலண்டர் பற்றிப்
புல்லரிக்கிறான் அரசவைப் புலவன்.
(அவனுடைய மதம் உருவ வழிபாட்டை மறுதலிக்கிறது என்பதால்
காலண்டரை மாற்றித் தொங்கவிட வேண்டிவந்த
துயர நிலை கொஞ்சம் பரிதாபமாகத் தான் இருக்கிறது;
அல்லது
இளவரசர்களின் மதத்தைப் புகழ்ந்தால்
ஏணிப்படிகளில் நாலைந்தை
எக்கித் தாண்டிவிட முடியும் என்ற
தொலைநோக்குப் பார்வைகூட
இதன் பின்னால் இருக்கலாம்).
இது பேரிடர்க் காலம்…
பழி போடுவதை நிறுத்துங்கள்.
பிணங்களின் மத்தியில்
பேச்சு மூச்சற்று நிற்கிறோம்.
நாம் அனைவரும் கையுடன் கை கோர்த்து
கடமை
கண்ணியம்
கட்டுப்பாட்டுடன்
காரியம் ஆற்றவேண்டிய காலம்
என்று கண்ணீர் உகுக்கிறார்கள்…
இந்த முதலைக் கண்ணீரைக் கண்டு
முன் வரிசையில் இருக்கும் ஆநிரைகள்
மூர்க்கத்தனத்துடன் முட்டப் பாய்கின்றன.
பேரழிவின் நேரத்தில் அதன் பின் இருக்கும்
பேரபாய அரசியலைப் பேசியே ஆக வேண்டும்.
கண்ணீர் சிந்துபவர் எல்லாம் கருணை கொண்டவரல்ல.
மூர்க்கத்துடன் பாய்பவர்கள் எல்லாம் மூர்க்கர்கள் அல்ல.
சாத்தான் ஆட்டுக்குட்டியைத் தூக்கியபடி ஓடும்போது
தெய்வம் அதை மீட்க
ஆயுதத்தைத் தூக்கித்தான் ஆக வேண்டியிருக்கிறது.
ஆட்டுக்குட்டியைத் தூக்கி வைத்திருப்பதால்
அவன் அன்பானவனாகிவிட முடியாது.
ஆயுதம் கையில் இருப்பதால் இவர்
அழிவை விரும்புபவராகி விடுவதுமில்லை.
கலியுகத்தின் ஆகப் பெரிய அநீதி
இந்த ஆள் மாறாட்டமும்
அவர்தம் அடிப்படை குணமாற்றமும்தான்.
இது இனியும் தொடரக்கூடாது.
அரசியல் பிழைத்தோருக்கு
அறம் அதி விரைவில்
கூற்றாகியே தீர வேண்டும்.
அதற்கு நாம்
தெரிந்துகொண்டாக வேண்டிய
இரண்டு அதி உண்மைகள்:
- கண்ணுக்குத் தெரியும் நிலச்சரிவுகளைவிட
மிக மிக மோசமானவை
கண்ணுக்குத் தெரியாத நிலச்சரிவுகள். - நம் தேசம் வயநாடாகிக் கொண்டிருக்கிறது.
$$$