-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எழுபத்தைந்தாம் திருப்பதி...

75. காளியை அடக்கிய திருஅட்டபுயகரம்
அஷ்ட புஜங்கனே, இஷ்ட தெய்வமே! கஷ்ட நிவாரணனே, கண்கண்ட தெய்வமே! துஷ்ட சம்ஹார மூர்த்தியே, ஆதிகேசவப் பெருமாளே! அபயம் என்று வந்தேன், அணைத்துக் காப்பாயே!
பிரமனின் வேள்வியைத் தடுக்க சரஸ்வதி தேவி காளியை ஏவினாள். பெருமாள் எட்டுக் கரங்களுடன் அவளை அடக்கி வேள்வியைக் காத்தார். வலக்கையில் சக்கரம், கத்தி, அம்பு, மலர், இடக்கையில் சங்கு, வில், கேடயம், கதாயுதம் ஆகியவற்றைத் தாங்கி பெருமாள் காட்சி அளிக்கிறார். எனவே அஷ்டபுஜப் பெருமாள் என்ற காரணத்தால் திருஅட்டபுயகரம் என்று பெயர் பெற்றது. காஞ்சியில் உள்ள 14 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே சொர்க்கவாசல் உள்ளது. கஜேந்திர மோட்சம் நிகழ்ந்த தலம் இது என்பது ஐதீகம்.
மூலவர்: ஆதிகேசவப் பெருமாள் (நின்ற திருக்கோலம்- மேஎற்கே திருமுக மண்டலம்)
தாயார்: அலர்மேல்மங்கை, பத்மாஸனி
விமானம்: ககநாக்ருதி விமானம்
தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரிணி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், பேயாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 08.00 மணி வரை
எப்படிச் செல்வது?
காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியான சின்ன காஞ்சிபுரத்தில் (விஷ்ணு காஞ்சி) இக்கோயில் உள்ளது. தேவராஜர் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் மேற்கே ரங்கசாமி குளத்திற்கு தெற்கே உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள், வீடு, நிலத்தை அநியாயமாய் இழந்தவர்கள் இங்கு வந்து இந்தப் பெருமாள் கோயிலை ஒன்பது தடவை சுற்றி வந்து லட்சுமி வராஹன் சன்னிதியில் வேண்டிக் கொண்டால் அனைத்தையும் திரும்பப் பெறலாம். 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களும், 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து சேவிக்க வேண்டிய தலம் இது. தாயார் சந்நிதியின் தொட்டில் கட்டி நேர்ந்து கொண்டால், மழலைப் பேறு கிட்டும்.
$$$