-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எழுபத்து மூன்றாம் திருப்பதி...

73. முதலாழ்வார்களுக்கு தரிசனம் தந்த திருக்கோவலூர்
ஆழ்வார்கள் நடுவினிலே ஆனந்தமாய் நின்றவனே! வாழ்வார்கள் வாழ்வதற்கு வாசுதேவனாய் வந்தவனே! அமர்ந்தவனே, நின்றவனே, கிடந்தவனே, உனையே சரணடைந்தேன் மனஅமைதி தருவாயே!
ம்ருகண்ட முனிவருக்காக திரிவிக்கிரமனாகக் காட்சி அளித்த தலம். இங்கு பெருமாள் வலது பாதாம் தூக்கி, இடதுபாதம் ஊன்றி, வலக்கையில் சங்கையும் இடக்கையில் சக்கரத்தையும் தாங்கி சேவை சாதிக்கிறார். இங்குள்ள மூலவர் மரத்தால் ஆனவர். இங்குள்ள உயரத்தில் வேறெங்கும் திரிவிக்கிரம மூர்த்தி இல்லை.
முதலாழ்வார்கள் மூவருக்கும் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்) ஓர் அறையில் திருவிளையாடல் நிகழ்த்தி, தரிசனம் தந்து, அவர்களை முதன்முதலாகப் பாட வைத்த தலம் இது.
சிவாலயங்களில் பிரஹாரத்தில் அருள்பாலிக்கும் விஷ்ணு துர்க்கை இத்தலத்தில் பெருமாள் சன்னிதி அருகிலேயே அருள்பாலிக்கிறாள். இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை செய்தால் நவகிரஹ தோஷம் விலகும்; சகோதர- சகோதரி உறவு பலப்படும் என்பது நம்பிக்கை.
மூலவர்: திரிவிக்கிரமன், தேஹளீசன் (நின்ற திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: பூங்கோவல் நாச்சியார், புஷ்பவல்லி தாயார்
விமானம்: ஸ்ரீசக்கர விமானம்
தீர்த்தம்: கிருஷ்ண, சக்ர தீர்த்தங்கள், பெண்ணையாறு
தல விருட்சம்: புன்னை மரம்
உற்சவர்: ஆயனார், கோவலன்
மங்களா சாசனம்: பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 08.00 மணி வரை
எப்படிச் செல்வது?
இத்திருத்தலம் திருவண்ணாமலை – விழுப்புரம் மார்க்கத்தில் 36 கி.மீ. தொலைவில் உள்ளது. விழுப்புரம் – காட்பாடி பாதையில், திருக்கோவிலூர் சந்திப்பில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருக்கோயில்.
சேவிப்பதன் பலன்கள்:
கடன் தொல்லை, குடும்பத் தகராறு, எதிரிகளால் ஆபத்து, கெட்ட பெயர் ஆகியவற்றில் இருந்து விடுபட வந்து வணங்க வேண்டிய தலம் இதுவாகும். 4, 13, 22 தேதிகளில் பிறந்தவர்கள் இங்கு வந்து வணங்க சுகம் பெறுவார்கள்.
$$$