திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -72

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எழுபத்திரண்டாம் திருப்பதி...

நடு நாட்டு திருப்பதிகள்

72. ஆதிசேஷன் அமைத்த தலம் திருவஹீந்திரபுரம்

முழுமதி நிலவினிலே,
முந்திரிக் காட்டுக்குள்ளே,
தொழுத மனம் துணையோடு
வழி தேடி வந்தேனே தேவநாதப் பெருமானே!
கருட நதிக் கரையினிலே,
ஆதிசேஷக் கிணற்றருகே,
நெடியமலை போல நின்றவனே,
அடியவர் குறைதீர்க்கும் தேவநாதப் பெருமானே!
திருமகளை மடிமீது அமர்த்தி திருவந்திபுரத்தினிலே
தாமரை மலர்  ஏந்தி தரணி காப்பவனே!
குதிரை முகம் கொண்டு, குன்றின் மேலேறி,
தேவர்கள் பகை தீர்த்த தேவநாதப் பெருமானே!
திருமணத்தடை நீங்கும் திருவந்திபுரத்தினிலே
திருவேங்கடம் அருள் கிடைக்கும் திருவந்திபுரத்தினிலே,
பெரும் சங்கடம் நீங்கும் அது திருவந்திபுரத்தினிலே,
பொறு மனமே அருள்கிடைக்கும் திருவந்திபுரத்தினிலே!

அஹி என்றால் பாம்பு. ஆதிசேஷனால் ஏற்படுத்தப்பட்ட ஷேத்திரம் இது. இங்குள்ள ஔஷத மலை மீது குதிரை முத்துடன் ஹயக்ரீவப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட, அவருக்கு தீர்த்தம் தருவதில் கருடனுக்கும் ஆதிசேஷனுக்கும் போட்டி ஏற்பட்டது. கருடன் விரஜா நதி தீர்த்தம் கொண்டுவரச் சென்றார். அப்போது தன் வாலால் பூமியில் ஓங்கி அடித்து ஆதிசேஷன் தீர்த்தத்தை வரவழைத்தார். அதுவே சேஷ தீர்த்தம். கருடன் கொணர்ந்த விரஜா நதியே கருட நதியாகப் பிரவஹித்தது. அதுவே தற்போதைய கடில நதி – என்கிறது தல புராணம்.

மூலவர்:  தெய்வநாயகன்,  தேவநாதப் பெருமாள் (நின்ற திருக்கோலம் –கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: செங்கமலத் தாயார், ஹேமாம்புஜவல்லி
உற்சவர்: அச்சுதன்
விமானம்: சுத்தஸத்வ விமானம்
தீர்த்தம்: சேஷ தீர்த்தம், கருடநதி
தல விருட்சம்: வில்வம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 08.00 மணி வரை

எப்படிச் செல்வது?

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், கடலூர் ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம் (திருவகிந்திபுரம்). கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

இங்கு வந்து இறைவனை வழிபட திருமணத்தடை நீங்கும். தீராத நோய் உடையவர்கள் இத்திருத்தலத்தில் பால், உப்பு, மிளகு போட்டு வேண்ட நோய் நீங்கும் என்பது ஐதீகம்.  1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களும் 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment