உருவகங்களின் ஊர்வலம்- 35

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #35

35. அம்மிக்கல்லும் கொத்தனாரும்

அந்தக் கல்
பாறையில் இருந்து பிளக்கப்பட்டபோது
மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது
ஒரு உளியிடம் கொண்டு செல்லத்தான்
தகர்த்திருக்கிறார்கள் என்று.

சிறு பாளமாகப் பெயர்ந்து விழுந்தபோதும்
அதன் நம்பிக்கை குறையவில்லை.
ஒரு சிலை வடிக்கத்தான்
தன்னை உடைத்தெடுத்திருக்கிறார்கள் என்று நினைத்தது.

அந்தி சாயும் நேரத்தில் வண்டியில் ஏற்றி,
பூர்வ நிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு,
இருள் பாதைகளினூடாக எங்கோ கொண்டு செல்லப்பட்டபோதும்,
எல்லா இடங்களிலும் தென்படும்
அதே வானத்தின் கீழ்தானே
இருக்கிறோம் என்று மனதைத் தேற்றிக்கொண்டது.

ஈரச் சாக்கு கட்டி இறக்கிவைக்கப்பட்டு
ஒரு ஓரமாக போடப்பட்டபோதும்,
சுற்றிலுமான உளிச் சத்தங்கள் கேட்டு
சரியான இடத்துக்கு வந்துவிட்டோம் என்று
மிகுந்த உற்சாகம் கொண்டது.

சாக்கு பிரிக்கப்பட்டு தரையில் போடப்பட்டு
நீரால் கழுவப்பட்டு
முதல் உளி கொண்டு
முதல் சுத்தியலால்
முதல்முறை கொத்தப்பட்டபோது
அது அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

ஒவ்வொரு கொத்தலையும் அது மனதுக்குள்
ஒவ்வொரு விதமாக யூகித்துக் கொண்டது….

இப்போது தலைப் பகுதியை செதுக்குகிறார்கள்…
இப்போது கிரீடம்…
இதோ கிரீடத்தின் வைரக் கல்…
அடுத்ததாக கூர்மையான நாசி…
அதன் பின் கண்ணின் இமைகளை
அதி நுட்பமாகச் செதுக்குகிறார்கள்…
இப்போது கைகளைச் செதுக்குகிறார்கள்…
அதன் பின் கை நகங்களை,
கை ரேகைகளை கலை அழகுடன் செதுக்குகிறார்கள்…
இப்போது கால்…
இப்போது கால் தண்டை…
என்று அத்தனை ஆர்வத்துடன்
அத்தனை கொத்தல்களையும் தாங்கிக் கொண்டது.

பாவம் அதற்குக் கடைசி வரை தெரியவே இல்லை-
அதைக் கொத்துபவன் சிற்பி அல்ல…
அம்மிக் கொத்தன்.

அவன் செதுக்குவது சிலை அல்ல;
அம்மிக் கல்லும் குழவியும்.

முடிவற்று நீண்ட கொத்தல்களை
முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட கல்
இறுதியில் தான் ஒரு அம்மியாக்க் கொத்தப்பட்டிருப்பதைத்
தெரிந்துகொண்ட தருணமே
இந்த உலகின் அதி சோகமான தருணம்
என்று நினைக்கிறீர்களா?
அதுதான் இல்லை.

அது சோகமான தருணம் தான்.
ஆனால், அம்மிக் கல் அந்த சோகத்திலிருந்து
எளிதில் மீண்டுவிட்டது.
அம்மியான பின்னரும்
ஏதோவொரு மடப்பள்ளியில்தான் இருக்கிறோம் என்று
அது தன்னைத்தானே தேற்றிக்கொண்டது.

அதன் மேல் அரைக்கப்பட்டவையெல்லாம்
பிரசாதத் தளிகைக்காக என்று
தானாக நம்பிக்கொண்டது.

அம்மியாக இருப்பதில் தவறொன்றுமில்லை
அம்மிக் கொத்தரும் ஒரு கலைஞரே
என்றெல்லாம் சமாதானம் செய்துகொண்டது.

முழுமையாகக் கைவிடப்படுவது அல்ல;
அதையே மீட்சியின் வழியாகக் கருதிக் கொள்வதே
ஆகப் பெரிய சோகம்.

இறுதியாகச் சில வார்த்தைகள்:

அம்மி என்பது அம்மிக் கல்தான்-
மனித வாழ்க்கையின் குறியீடு அல்ல.

கொத்தர் என்பவர் கொத்தர்தான்-
கடவுள் என்பவரின் குறியீடு அல்ல.

ஆகப் பெரிய சோகம் என்பது ,
அத்தனை கொத்தல்களையும்
சிலை செதுக்குவதாக நினைத்துத்
தாங்கிக் கொள்ளும் அம்மிக்குத்தான்.

அதைவிடப் பெரிய சோகம்
மடப்பள்ளி அம்மியாக
மனதைத் தேற்றிக்கொள்ளும் அம்மிக்குத்தான்-
நமக்கு அல்ல.

இதுவரையான கொத்தல்கள் போலவேதான்
இனிவரும் காலமும் இருக்கப் போகிறது என்றாலும்,
மானுட வாழ்க்கை ஓர் மகத்தான சிலையே.
நம் கடவுள் ஓர் மகத்தான சிற்பியே.

தேவதைக் கதை முடிந்துவிட்டது-
நிம்மதியாகத் தூங்குங்கள் குழந்தைகளே!

$$$

Leave a comment