உருவகங்களின் ஊர்வலம்- 34

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #34

34. ஆமை புகுந்த வீடும், ஆலவாய் அரசனின் சாயலும்


தேர் வடங்கள் அறுந்து விழுகின்றன.
குழந்தைவரம் கேட்டுக் கட்டிய தொட்டில்கள் ஆடும்
கோயில் மரங்கள் பற்றி எரிகின்றன.
உற்சவ மூர்த்திகளின் குடைகள் சரிகின்றன.
தெய்வங்கள் பாவம் –
நாசூக்காகத் தம் வேதனையை
சொல்லிக் காட்டுகின்றன போலிருக்கிறது!

    பிரகாரச் சிலைகளுக்கு மணல் வீச்சு…
    கருவறைச் சிலைகளுக்கு நீர் வீச்சு…
    கும்பாபிஷேக நீர் தெளிக்க பூச்சி மருந்து தெளிப்பான்…

    அன்னதானக் கணக்கில் நூறு கோடி …
    நாமக்கட்டி கணக்கில் நூறு கோடி…
    சிலை பாதுகாப்பு மையத்தில்
    பத்திரமாகப் போலிச் சிலைகள்…

    திருடனுக்குத்தான் தெரிந்திருக்கிறது
    தெய்வத் திருமேனிகளின் மதிப்பு!
    திருடப்பட்டால்தான் கிடைக்கிறது
    தெய்வத் திருமேனிகளுக்கும் மதிப்பு!

    மண்ணிட்டு மூடப்பட்ட தெப்பக்குளங்களின் மேல் அமைந்திருக்கும்
    நீதிமன்றங்கள் வழங்கும் நியாயத் தீர்ப்புகளால்
    அடைபட்டுக் கிடக்கிறது நீதியின் ஊற்று.

    அரசியல் சாசனச் சட்டதிட்டங்களை மீறி
    அமைக்கப்பட்ட அறநிலையத் துறை
    உருக்க எடுத்துச் செல்லும் கோயில் நகைகளுக்கு
    கண்காணிப்பு கேமராவை மறைத்தபடி
    காவல் அரணாக உடன்பிறப்புகள் நிற்கிறார்கள்.

    சொல்ல மறந்துவிட்டேனே,
    முன்பு அருங்காட்சியகத்தில்
    காட்சிப்பொருளாக இருந்தது
    இப்போது இடம் மாறி ஆட்சிமன்றத்தில்
    காட்சிப்பொருளாக இருக்கிறது.

    அன்னதானக் கூடங்களில்
    கூட்டம் கூட்டமாகக் குவியும் பக்தர்களிடம்
    ஓர் ஓரமாக நின்றுகொண்டு,
    தன் வேதனைப் பிரசுரங்களை நீட்டுகிறார் ஆண்டவர்.

    சாம்பாரில் கிடக்கும் பல்லியை எடுத்துப் போட்டுவிட்டு
    ரசத்தில் பெருச்சாளி இருந்தால்
    அதையும் எடுத்துப்போடத் தயாராக
    இடை ஆடையை இறக்கிக் கட்டிக்கொண்டிருக்கும்
    பக்த கோடிகளைப்பற்றி பகவானுக்குத் தெரியவில்லை.

    *

    நாத்திகக் குறுநில மன்னருக்குப் புறாக்காலில்
    நட்புக் கடிதம் கட்டிக் கட்டி அனுப்புகிறார்கள் சக்கரவர்த்திகள்.

    சாமரம் வீச வைக்கப்படுகிறார்கள் ஆதீனத் துறவிகள்.
    பல்லக்கு தூக்குகிறார்கள் பக்தர்கள்.

    நேற்று கிரிவலப்பாதையில்
    அடித்துவிரட்டப்பட்ட துறவியின் கண்கள்
    அக்னி ஸ்தல இறைவனின் கண்களைப் போலவே இருந்தன.
    (சில காலம் முன்பு
    அடித்துக் கொல்லப்பட்டவருடைய கைகள்
    அபய ஹஸ்தம் காட்டிக் கொண்டிருந்தன).

    தூங்கா நகரக் கோயிலின் வாசலில்
    நெளிந்த தட்டேந்தி நின்றவருக்கு
    ஆலவாய் அரசனின் சாயல்.

    பொக்கிஷ நிலவறைகளின் சாவிகள்
    களவுபோகும் ராஜ்ஜியத்தில்,
    கும்மட்டங்களும் குச்சி கோபுரங்களும் பெருகுகின்றன.

    பத்து பிறவிகளுக்குத் தேவையான பகட்டுகளை
    துண்டுச் சீட்டில் பக்கம் பக்கமாக எழுதி
    பரவசத்துடன் கட்டித் தொங்கவிட
    பக்தர் கூட்டம் முண்டியடிக்கிறது.

    *

    படிகளாகப் போடப்பட்ட நவக்கிரஹங்களை மிதித்து ஏறி
    கழுகாசனத்தில் அமர்ந்துகொண்டு
    கட்டளைகளைப் பிறப்பிக்கிறான்
    டோப்பாத் தலை ராவணன்.

    கண்கள் குருடாக்கப்பட்ட சனீஸ்வரனின் கேவல்
    சனாதனிகளின் காதில் விழுகிறது.

    இனி
    ஒன்றும் செய்வதற்கில்லை.
    ஆமை புகுந்த வீடும்
    ஆப்ரஹாமியர் நுழைந்த நாடும்
    என்றைக்கு விளங்கியிருக்கிறது?
    எப்படி விளங்கமுடியும்?

    அது நடந்திருக்காவிட்டாலும்
    இதுதான் நடந்திருக்கும் என்பதுபோலல்லவா
    அது அகன்ற பின்னும்
    அத்தனையும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன?

    *

    முடிவற்று நீளும் உதயங்கள் தோன்றும் துருவப் பகுதிகளில்
    அஸ்தமனங்களும் முடிவற்று நீளத்தானே செய்யும்?

    நின்ற நிலையிலேயே உதித்து மறையும்
    அக்னிப்பிளம்பின் குறுவடிவமான
    சிற்றகல் பேரொளியில்
    மின்னும் தெய்வத் திருமேனி
    மெள்ளச் சிரிப்பதுபோலவே இருக்கிறது…
    சோகமாக இருப்பது போலவும் இருக்கிறது.

    இப்படி ஓர் அலங்கோல நடனத்தைத் தான்
    ஆடலரசன் இப்போது ஆட விரும்புகிறானென்றால்
    யாரால் அதை மாற்ற முடியும்?

    அவனுடைய
    ஊன்றிய ஒற்றைப் பாதத்தை
    உன்மத்தர் கும்பல் வாரிவிடுவதும்
    அவனருளாலே தானோ?

    தெய்வத்தை நோக்கி ஒரு அடி எடுத்துவைத்தால்
    ஒன்பது அடி அவர் எடுத்துவைப்பாராம்…
    ஒரு அடி விலகினால்
    ஒன்பது அடி விலக்கியும் வைப்பார் போலிருக்கிறது!

    ஆனால்,
    அழிக்கும் தெய்வம் அழிவைத் துரிதப்படுத்தினால்
    காக்கும் தெய்வம் கண் திறந்துதானே ஆக வேண்டும்?

    $$$

    Leave a comment