-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #32

32. உள்ளவற்றை எல்லாம் அள்ளி அள்ளித் தா!
நம்மிடம் இருப்பவையெல்லாம்
எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படக் கூடும்.
நம்மிடமிருந்து பறிக்கப்பட்டவையோ
ஒருநாளும் திரும்பத் தரப் படாது.
நாம் வரிசையில்
கால்கடுக்க நின்று சென்றாக வேண்டும்
அவர்கள்
எங்கு வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் இடையில் நுழைவார்கள்.
அவர்களுடைய வரிசை தனியாக இருக்கும்…
அதில் நாம் நுழையவும் முடியாது.
நம் தோட்டத்துச் செடிகள் விதைகள் மூலமே பெருகும்.
மாற்றான் தோட்டத்திலோ ,
விதைவழிப் பெருக்கத்தோடு
கிளையை மட்டுமல்ல, இலையை நட்டாலும் முளைக்கும்
விதமான களைப் பெருக்கம்.
நாம் அதிகமாக இருப்பதால்
நம் மீது அதிகச் சுமை சுமத்தப்படுகிறது
அவர்கள் குறைவாக இருப்பதால்
கூடுதல் சலுகை தரப்படுகிறது.
நாம் அதிகம் என்பது சலுகை மறுப்பில் மட்டுமே.
மற்றபடி நாம் நாமே இல்லை.
நம்மில் அதிகம் இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி
அவர்களில் இல்லாதவர்களிடம் தருவார்களாம்.
நம்மில் இல்லாதவர்களிடமிருந்து
இல்லாததையும் பிடுங்கி
அவர்களில் இருப்பவர்களிடம்
அள்ளிக் கொடுப்பார்களாம்.
நமக்குள் பொது என்று எதுவும் கிடையாது
ஆம்,
நமக்கு எதுவும் கிடையாது என்பது மட்டுமே
நம் எல்லோருக்கும் பொது.
நமக்குள் ஒற்றுமை என்றும் எதுவும் இல்லை.
ஆம்,
நம் தனித்தன்மையே நம் பலவீனம்.
எதையும் யார் மீதும் திணிக்காமல்
பரஸ்பரம் மதித்து நடந்து கொள்வதே
நாம் செய்யும் பெரும் தவறு.
*
நம்மைக் கத்தியால் குத்தியவன் சொல்கிறான்-
நீ உன் பக்கத்தில் இருந்தவனைக் கம்பால் அடித்ததால்
உன்னை நான் கத்தியால் குத்தினேன்.
நான் கம்பால் அடித்தவரையும் சேர்த்துத் தானே
நீ கத்தியால் குத்தினாய் என்று கேட்டால்,
கம்பால் அடிபட்டவரின் கையில்
கத்தியைக் கொடுத்திருக்கிறேனே என்கிறான்-
கடைவாயில் வன்மம் ஒழுக.
கம்பால் அடித்த நாங்கள் மட்டுமல்ல;
கத்தியை வைத்திருக்கும் நீங்களும்
பக்கத்தில் இருக்கும் கத்தி வைத்திருப்பவரைக்
கத்தியால் குத்துகிறீர்களே என்று கேட்டால்,
எங்கள் கத்தியின் கூர்மையே
எல்லாவற்றிலும் உயர்ந்தது
என்று நிரூபிப்பதே எங்கள் கடமை என்கின்றனர்
கைகளில் கத்தி வைத்திருப்பவர்கள் எல்லாம்.
ஆக, கத்தி வைத்திருப்பவனின் லட்சியம்
கம்பால் அடிபடுபவரைக் காப்பது அல்ல;
தன் கத்தியின் கூர்மையை உலகுக்கு நிரூபிப்பதே.
இந்த உண்மை உலகுக்குப் புரிவதற்குள்
பலர் கைகளில் கத்தி வந்துவிட்டது.
கொடூரமான வேடிக்கை என்னவென்றால்
கம்பால் அடிபட்டவர் மட்டுமல்ல,
கம்பால் அடித்தவருமே
கத்தியை எடுத்துக்கொண்டு குத்த ஆரம்பித்துவிட்டார்.
கத்தியால் குத்துவதைவிட
கம்பால் அடிப்பதே மிக மிகக் கொடூரம் என்று
சொல்லிச் சொல்லியே குத்துகிறார்கள்
அத்தனை பேரும்.
எல்லையற்ற அருளாளன்
எவ்வளவு பெரியவன் இல்லையா?
*
நாம் எதிரியைப் போலானால் நமக்கு அழிவுதான்.
எதிரி நம்மைப் போலானாலும் நமக்கு அழிவுதான்.
நம் பக்கம் இருப்பவர்கள் எல்லாம் நம்மவர்கள் அல்ல.
நம் பக்கம் இல்லாதவர்களில் யாரும் நடுநிலையும் அல்ல.
நம் பக்கம் இல்லாதவர்கள் நமக்கு எதிர்த் தரப்பினர்.
நம் பக்கம் இல்லாதவர்களுக்கு நாம் எதிரித் தரப்பினர்.
நம் அரசியலிலும் நாம் ஆன்மிகத்தை எதிர்பார்க்கிறோம்,
எதிர்த்தரப்பின் ஆன்மிகமும் அரசியல்மயமானது
என்பது புரியாமல்.
ஒட்டுமொத்த உலகையும்
ஒற்றை மதத்தின் கீழடக்கத் துடிப்பவர்கள்
சொல்கிறார்கள்-
நாம் ஒரே நாடு ஒரே கலாசாரம் என்று திணிக்கிறோமாம்.
உலகத்தில் உயரப் பறக்கிறது நம் கொடி
தேசத்தில் தாழப் பறக்கவில்லை
எனினும் பாதிக் கம்பம்
பிரிவினை மண்ணுக்குள் புதைந்துவிட்டது.
நாம் யார் இல்லையோ அதுவே நாமாம்.
நாம் யாரோ அது நாமே இல்லையாம்.
*
என்னப்பனே…
எளியதெல்லாம் வாழணும்…
வலியதெல்லாம் வீழணும்….
எல்லாரும் உன் பிள்ளைகளே என்று
பொல்லாரையும் வாழவைக்க விரும்பினால்
எட்டாத தொலைவில் இரண்டு பூமியை
இனியேனும் உருவாக்கு.
வழியும் எம் கண்ணீர்த் துளிகளை
நீ பார்க்கத் தவறியிருக்கலாம்.
மறையாத கண்ணீர்த்தடமும்
கண்ணில் படவில்லையா என்ன?
வலியவற்றின் அன்றாடக் கூவல்களின் அடியில்
எளியவற்றின் அந்த நேரக் கேவல்கள் அமுங்கியிருக்கலாம்.
எஞ்சிய நேரம் உன் செவியில்
எதுவுமே கேட்பதில்லையா என்ன?
எட்டாத உயரத்தில் நீ இருப்பதால்
உரத்த பிரார்த்தனைகளை மட்டுமே
உன் செவிகள் கேட்குமா?
மெல்லிய கேவல்கள் உன்
மென் காதில் விழவே செய்யாதா?
தெய்வங்கள் தவறு செய்யலாம்
திருத்திக் கொள்ளாமல் இருக்கக் கூடாது
முதல் முறையிலேயே எல்லாவற்றையும்
முழுமையாகச் செய்ய முடியாதுதான்.
முயற்சி செய்தால்
திருத்த முடியாததும் எதுவும் இல்லையே?
பாவம் பார்த்து ஒட்டகத்துக்கு
படுக்க இடம் கொடுத்துவிட்டு
கூடாரத்தை இழந்து நிற்கும் அப்பாவிபோல,
சாத்தானுக்கு இடம் கொடுத்துவிட்டு
சக்தி இழந்து நிற்கிறாயா நீயும்?
என் தெய்வமே
உன்னையும் சேர்த்தேதான் நான் காத்தாக வேண்டுமா?
எம் அருகில் நின்று கொண்டு நீயும்
இறைஞ்சி மன்றாடுகிறாயா ,
ஏகாந்தப் பெருவெளி நோக்கி?
$$$