திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -66

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபத்தாறாம் திருப்பதி...

66. எளிய பக்தைக்கு அருளிய திருவல்லவாழ்

எனை ஆண்டாய் எம்பிரானே, என்குலம் ஆண்டாய்!
கற்பனைக்கு எட்டாமல் கயவர்களை மல்லாண்டாய்- உனை
பல்லாண்டாய்ப்  பல்லாண்டாய்ப் பணிகின்றேன்,
தீருவல்லவாழ் கோலப்பிரானே திருமகள் அருள் தருவாயே!

பக்திக்கு இடையூறு விளைவித்த தோலகாசுரன் என்ற அரக்கனை சம்ஹரித்து, மங்களத்தம்மாள் என்ற எளிய பக்தைக்கு மார்பில் உறைந்த லட்சுமியை தரிசனம் (திருவாழ்மார்பன்) அளித்த தலம். கண்டாகர்ணனுக்கு மோட்சம் அளித்த தலம்.

லட்சுமியை மார்பில் தரித்தவர் என்றாலும், இங்குள்ள பெருமாள் பிரம்மச்சாரியாகவே வணங்கப்படுகிறார். எனவே ஆண்களுக்கு மட்டுமே இக்கோயிலில் அனுமதி; சித்திரை விஷூ, மார்கழி திருவாதிரை நாட்களில் மட்டுமே பெண்களுக்கு அனுமதி. பெருமாளின் திருவாழ் மார்பை தரிசிப்பது இங்கு விசேஷம். உப்பு மாங்காய் இங்கு நைவேத்தியம்.

மூலவர்: கோலபிரான், ஸ்ரீவல்லபன் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: செல்வ திருக்கொழுந்து நாச்சியார், வாத்ஸல்யதேவி
விமானம்: சதுரங்க கோல விமானம்
தீர்த்தம்: கண்டாகர்ண தீர்த்தம், பம்பா நதி.
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 08.00 மணி வரை.

எப்படிச் செல்வது?

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில், கொல்லம் – எர்ணாகுளம் ரயில் பாதையில் திருவல்லா ரயில் நிலையம் உள்ளது. இந்த ஸ்டேஷனில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இத்தலம்  உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இங்கு நாட்டிய நேர்ச்சை செய்வது வழக்கமாக உள்ளது. தடங்கல், கஷ்டங்கள் இல்லாமல் வாழ்க்கை செல்லவும், வாழ்க்கையில் மேன்மையுறவும் வந்து வணங்க வேண்டிய தலம் இது. 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இதுவாகும்.

$$$

Leave a comment